நல்லது

பூரணி விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது என சகலமும் எங்கள் வீட்டில்தான். நாங்கள் இந்த வீட்டிற்கு வாடகைக்குக் குடிவந்து ஒரு வருடத்திற்குப் பிறகுதான் பூரணி பிறந்தாள். வீட்டுச் சொந்தக்காரரின் குழந்தை. அவளுக்கு இப்போது இரண்டு வயது.
பூரணியின் அம்மா தூங்குவாள்... தூங்குவாள்... தூங்கிக்கொண்டே இருப்பாள். காலை பதினோரு மணி. வழக்கம் போல பூரணி வந்தாள். மழலை கலந்த மொழியில் பேசினாள். அவளோடு பேசியபடி துணி துவைத்தேன். எதையோ மென்றவள், திடீரென அலற ஆரம்பித்துவிட்டாள்.
பதறிப்போய் வாயில் கையை விட்டுத் துழாவினேன். நீளமான கவரிங் கம்மல். அடக்கடவுளே! விழுங்கியிருந்தால் என்ன ஆவது? குழந்தையின் கையில் இதெல்லாம் எப்படிக் கிடைத்தது? கோபமாக பூரணி வீட்டிற்குச் சென்று அவள் அம்மாவைத் திட்டி விட்டு வந்தேன். பூரணியின் அப்பா வந்ததும் அவரிடம் கூற வேண்டும் என நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். இரவு... பூரணியின் அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் நேராக எங்கள் வீட்டிற்கு வந்தான்.
‘‘ஏங்க... என் பெண்டாட்டி வாடகை, கரன்ட், தண்ணி விடுறதுல கண்டிப்பா இருக்குறதனால, குழந்தை அத முழுங்கிட்டா... இத முழுங்கிட்டாள்னு பொய் சொல்லி பழிபோட்டு அவளைத் திட்டுனீங்களா. அடுத்த மாசமே வீட்டை காலி பண்ணிடுங்க!’’ என்றான் கோபமாக. நல்லதுக்கு இந்தக் காலத்தில் இருக்கும் மதிப்பைப் பார்த்து விக்கித்து நின்றேன்.
|