''Morality is a venereal disease. Its primary stage is called virtue; its secondary stage, boredom; its tertiary stage, syphilis.’’Karl Kraus, Austrian Writer
பால்வினை நோய்கள் என்பன, நேர்பாலினர் அல்லது எதிர்பாலினர் இடையிலான கலவி உள்ளிட்ட பாலியல் நடவடிக்கைகள் மூலமாகப் பரவும் நோய்கள் ஆகும். ஆங்கிலத்தில் இவற்றை Sexually Transmitted Diseases (STD) / Venereal Diseases (VD) எனக் குறிப்பிடுவர். இவற்றில் சில ஊசிகள், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் வழியாகக்கூட பரவும். எய்ட்ஸ், சிஃபிலிஸ் (கிரந்தி), கொனேரியா (மேக நோய்), ச்லாமிடியா, ஹெர்ப்ஸ், சில ஹெபாடைடிஸ் நோய் வகைகள் இதற்கு பிரபலமான உதாரணங்கள்.
பண்டைய கிரேக்கத்தில் ஹெர்ப்ஸ் இருந்திருக்கிறது. நோய்க்கொப்புளம் வந்த இடத்தில் காய்ச்சிய இரும்பைப் பிரயோகிப்பது வைத்தியமாக இருந்தது. அவர்களிடம் மருத்துவ அறிவும், வசதியும் குறைவாக இருந்ததால் கட்டுப்பாட்டு விதிகள் மூலம் நோய் பரவுவதைத் தடுத்தனர். முத்தமிட்டுக்கொள்வது கூடத் தடை செய்யப்பட்டது.
பண்டைய எகிப்தியர்களிடையே கொனேரியா இருந்தது. பைபிளில் வரும் ஆண்களுக்கான Zav, பெண்களுக்கான Vavah நோய்க் குறிப்புகளை கொனேரியா என்கின்றனர் சிலர். போர், பயணம் போன்றவையே பாலியல் நோய்கள் பரவக் காரணங்களாக இருந்தன. புதிய நகரங்களை நிர்மாணித்ததும் மக்கள் அங்கு இடம்பெயர்ந்ததும்கூட காரணம்.
1161ல் பிரிட்டிஷ் பார்லிமென்ட், கொனேரியா போன்ற அறிகுறிகள் கொண்ட ஒரு நோயைக் குறைக்கத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. 1256ல் பிரான்சின் ஒன்பதாம் லூயி, இந்த அறிகுறி இருந்தவர்களை நாடு கடத்த சட்டம் கொண்டு வந்தார். ஏக்கர் என்ற இஸ்ரேலிய நகரத்தில் சிலுவைப் போர் நடந்தபோதும் இந்த அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. ஆரம்ப காலத்தில் சிறுநீர்க் குழாயில் ஊசி மூலம் பாதரசத்தைச் செலுத்தி இதற்கு சிகிச்சை அளித்தனர்.
1492ல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்துத் திரும்பியபோது, அவருடைய மாலுமிகள் சிஃபிலிஸ் நோயை ஐரோப்பா எடுத்து வந்தனர். 1494ல் பிரெஞ்சுப் படை இத்தாலிய நேப்பிள்ஸை முற்றுகையிட்டபோது, முதன்முதலாக சிஃபிலிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இது பிரெஞ்சு நோய் என அழைக்கப்பட்டது. வெகு சீக்கிரம் சிஃபிலிஸ் ஐரோப்பா முழுக்கப் பரவி, ஐம்பது லட்சம் பேரை பலி வாங்கியது. 1498ல் வாஸ்கோட காமாவின் கடற்பயணம் இதை இந்தியாவுக்கு எடுத்து வந்தது. 1520ல் இந்நோய் ஆப்ரிக்காவிலும் சீனாவிலும் நுழைந்தது.
மத்திய கால ஐரோப்பாவில் கொனேரியா போன்ற பால்வினை நோய்கள் பரவியதை ஒட்டி சில சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன. பொது சுகாதார மருத்துவர்களைப் பணியமர்த்தி விபசாரிகள், தொழுநோயாளிகள், மற்றும் பிற கொள்ளை நோய் வந்தவர்களுக்கு அரசாங்கங்கள் சிகிச்சை தரத் தொடங்கின. ‘மருத்துவர்கள் பணி செய்ய கத்தோலிக்க பாதிரி படிப்பு முடித்திருக்க வேண்டும்’ என்ற விதி தளர்ந்தது. இதனால் பலர் மருத்துவ சேவையில் இறங்க வாய்ப்பு ஏற்பட்டது.
16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை கொனேரியா, சிஃபிலிஸ் இரண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க சிரமப்பட்டனர். அறிகுறிகளை வைத்து இரண்டையும் ஒன்று என்றே பலர் நம்பினர். பலருக்கும் இந்த இரு நோய்கள் ஒரே நேரத்தில் வந்திருந்ததும் இந்தக் குழப்பத்துக்குக் காரணம். ஜான் ஹன்டர் என்ற பிரிட்டிஷ் மருத்துவர், கொனேரியா, சிஃபிலிஸ் நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளை தன் பிறப்புறுப்பில் செலுத்தி ஆராய்ச்சி செய்தார். இரண்டும் ஒன்றே என்ற முடிவுக்கே அவரும் வந்தார். இதனால் கொனேரியா போலவே சிஃபிலிஸுக்கும் பாதிக்கப்பட்ட இடத்தில் பாதரசத்தைச் செலுத்துவதே சிகிச்சையாக இருந்தது. பாதரசம் இதை குணப்படுத்தாது என்று புரிய 20ம் நூற்றாண்டு வரை ஆனது. இடைப்பட்ட நெடுங்காலத்தில் பல போலி மருத்துவர்கள் மக்களை ஏமாற்றி நிறைய காசு பார்த்தனர்.
19ம் நூற்றாண்டின் மத்தியில் ஃபிலிப் ரிக்கார்ட் என்ற பிரெஞ்சு மருத்துவர், இரண்டுக்குமான வித்தியாசத்தை விளக்கினார். தொடர்ந்து ரூடால்ஃப் விச்சௌ, ‘ரத்தத்தின் மூலம் சிஃபிலிஸ் பரவுகிறது’ எனக் கண்டுபிடித்தார். கொனேரியாவுக்கு பாதரசத்துக்குப் பதில் சில்வர் நைட்ரேட், சில்வர் ப்ரோட்டினேட் போன்றவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர். 1940களில் ஆன்டிபயாட்டிக்குகள் வரும் வரை இவை புழக்கத்தில் இருந்தன.
1879ல் கொனோரியா நுண்ணுயிர் கண்டுபிடிக்கப்பட்டது. 1905ல் சிஃபிலிஸ் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மன் விஞ்ஞானி பால் எர்லிச், ‘சல்வர்சன்’ என்ற ஆர்சனிக் சிகிச்சை முறையை சிஃபிலிஸ் நோய்க்கு அறிமுகப்படுத்தினார். சல்ஃபா மருந்துகள் மற்றும் ஆன்டிபயாட்டிக்குகளையும் இந்த நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தினர்.
1932ல் அமெரிக்க பொது சுகாதார சேவை, சிஃபிலிஸ் ஆராய்ச்சியைத் தொடங்கியது. சிஃபிலிஸ் எப்படி வளர்கிறது என ஆராய்வது இதன் நோக்கம். 1947ல் சிஃபிலிஸ் சிகிச்சைக்கு பென்சிலின் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், இங்கே அதை நோயாளிகளுக்குத் தராது ஆராய்ச்சியைத் தொடர்ந்தது சர்ச்சைக்குள்ளானது. கவுதமாலாவில் 1946ல் உள்நாட்டு சுகாதார அமைச்சக உதவியுடன் கைதிகள், நோயாளிகள், மனநலம் குன்றியவர்கள் மீது அமெரிக்கா சிஃபிலிஸ் ஆராய்ச்சிகளை நடத்தியது. 2010ல் இதைத் தவறென ஒப்புக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
1960களிலும் 1970களிலும் சிகிச்சை தாண்டி பிரசாரங்கள் மூலம் இந்நோய்களைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளுடன் பாலியல் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து பரிசோதிப்பதும் முக்கியத்துவம் பெற்றது.
1959ல் காங்கோவின் கின்ஷாசாவில் பாண்ட்டு இன மக்களிடையே எடுக்கப்பட்ட திசு சாம்பிள்களை 2008ல் ஆராய்ந்ததில், நன்கு பரிணாமம் அடைந்த ஹெச்ஐவி சாயல்கள் இருந்தன. 1959ல் டேவிட் கார் என்ற அச்சுத் தொழிலாளி எதிர்ப்பு சக்தி குறைந்து நிமோனியா வந்து இறந்து போனார். அவரது திசு சாம்பிள்களை பாதுகாத்து வைத்தனர். 1990ல் ஆராய்ந்தபோது, அதில் ஹெச்ஐவி கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் காங்கோ லியோபோல்ட்வில்லியில் 1959ல் ஒரு ஆசாமியின் ரத்த சாம்பிளிலும், 1960ல் ஒரு பெண்ணின் பயாப்ஸி சாம்பிளிலும் ஹெச்ஐவி கிருமிகள் இருந்தது பிற்பாடு கண்டுபிடிக்கப்பட்டது.
1969ல் ராபர்ட் ரேஃபோர்ட் என்ற 15 வயதுப் பையன் இறந்து போனான். 1987ல் அவனது ரத்த, திசு சாம்பிள்களை ஆராய்ந்தபோது கிட்டத்தட்ட ஹெச்ஐவி போன்ற வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1969ல் ஹைதியிலிருந்து வந்த ஒரு நபர் மூலம் அமெரிக்காவில் எய்ட்ஸ் காலடி எடுத்து வைத்தது. ஹைதிக்கு 1966ல் மத்திய ஆப்ரிக்க காங்கோவிலிருந்து இது வந்திருக்கும் என சொல்கிறார்கள். முதலில் அமெரிக்காவின் பெருநகரங்களில் இருந்த ஆண் ஓரினச் சேர்க்கையாளரிடையே எய்ட்ஸ் பரவியது. அமெரிக்கா சுதாரிக்கும் முன்பே இந்த குழுக்களில் 5 % பேர் எய்ட்ஸ் பெற்றிருந்தனர். பிறகு நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குப் பரவியது. ஆசியாவிலும் இந்தியா, சீனாவில் நுழைந்தது.
1983ல் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மைய (CDC) டாக்டர் வில்லியம் டாரோ, ‘கேட்டன் டூகாஸ்’ என்ற கனடிய விமானப் பணியாளரைப் பரிசோதித்துவிட்டு ‘பேஷன்ட் ஜீரோ’ என்று பெயரிட்டார். பலரும் இவர்தான் வட அமெரிக்காவில் முதல் எய்ட்ஸ் நோயாளி என்று நினைத்தனர். ஆனால் அவருக்கு அந்தப் பெயரிடக் காரணம், அன்றைய தேதியில் எய்ட்ஸ் இருந்ததாக உறுதி செய்யப்பட்ட 248 பேரில் குறைந்தபட்சம் 40 பேருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவருக்கு உடற்தொடர்பு இருந்ததுதான். இவரது கதை And the Band Played On என்ற புத்தகமாகவும், பிறகு அதே பெயரில் படமாகவும் வெளியானது.
ஜூன் 5, 1981ல் அதிகாரபூர்வமாக எய்ட்ஸ் கொள்ளை நோயாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1982ல் சிஞிசி இந்த நோய்க்கு Acquired Immuno Deficiency Syndrome (AIDS) என்று பெயர் சூட்டியது.
1983ல் பிரான்ஸ் மருத்துவர் லுக் மாண்டாக்னியர், எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸைக் கண்டுபிடித்தார். இந்த வைரஸ் Human Immunodeficiency Virus (HIV) என்று 1986ல் பெயர் பெற்றது. 2008ல் மாண்டாக்னியர் மற்றும் அவருடன் பணி செய்த ஃப்ரான்காய்ஸ் பேர்ரி இருவருக்கும் ஹெச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்ததற்காக மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் 90களில் தொடங்கி 20 வருடங்கள் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்தது பலனளித்தது.
பால்வினை நோய்களைத் தவிர்ப்பதே சுலபவழி. மீறி அந்நோய் பெற்றவர்களுக்கு, சிகிச்சைதான் அவசியமே ஒழிய, சமூகத்தின் நிராகரிப்பும் வெறுப்பும் அல்ல.