அப்போ மெட்ராஸ் இப்போ சென்னை





‘‘ச்சீ... இதெல்லாம் ஒரு ஊரா? எங்க பார்த்தாலும் டிராபிக்... எப்பவும் பரபரப்பு... என்ன வாழ்க்கைடா இது’’ , இந்த வசனங்களை சென்னைவாசிகள் அநேகம் பேரிடம் கேட்டிருப்போம். வாழ்க்கையை வெறுக்கிற அளவுக்கு இன்றைய சென்னை உருமாறிவிட்டது. ஆனால், பழைய சென்னை, ஸாரி... மெட்ராஸ் எப்படி இருந்தது?

சுமார் நானூறு ஆண்டுகளுக்குப் பின்னால் நம்மை அழைத்துச் செல்கிறது, 'MADRAS THEN CHENNAI NOW'. பழைய மெட்ராஸையும் இப்போதைய சென்னையையும் ஒப்பிடும் அழகிய புகைப்படத் தொகுப்பு. சென்னையின் லேண்ட்மார்க் அடையாளங்கள் முதல், இந்த நகரத்தின்  கலை, அரசியல், சினிமா, நெருக்கடியான வாழ்க்கை என அனைத்தையும் பிரதிபலிக்கும் அரிதான புகைப்படங்களின் கலெக்ஷன்.

இதில் பழைய மெட்ராஸை சிலாகித்து எழுதியிருக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் சி.பி.ராமசாமி அய்யர் ஃபவுண்டேஷன் இயக்குநருமான நந்திதா கிருஷ்ணா. இன்றைய சென்னையைப் பற்றி எழுத்தாளர் திஷானி தோஷி குறிப்புகள் தர, புகைப்படங்களை சேகரித்து பிரசுரித்துள்ளார், டெல்லியிலுள்ள ‘ரோலி புக்ஸ்’ நிறுவனர் பிரமோத் கபூர். புத்தகத்தைப் புரட்டியபடியே ஒரு காலைப் பொழுதில் நந்திதா கிருஷ்ணாவைச் சந்தித்தோம். பழைய மெட்ராஸின் நினைவுகளில் மூழ்கிப் போனார் அவர்.



‘‘அந்த மெட்ராஸ் அழகே தனிதான். இங்க நிறைய மரங்கள், தோப்புகள் இருந்தன. அடையாறு, கூவம்னு இரண்டு நதிகள் சுத்தமான நீராக ஓடியது. சுற்றிலும் 250 ஏரிகள் இருந்தன. இன்னைக்கு அதெல்லாம் இல்லை. பனகல் பார்க், நாகேஸ்வரராவ் பார்க் எல்லாம் ஒரு காலத்துல ஏரியாக இருந்ததுதான். நாகல்கேணி ஏரி அருகே ஆங்கிலேயர்கள் லெதர் கம்பெனி ஆரம்பிச்சாங்க. அதுல இருந்து வந்த ‘குரோம்’ என்ற வேதிப்பொருள் அந்த ஏரியையே மாசுபடுத்திருச்சு. பின்னாள்ல இதுதான் குரோம்பேட்டைன்னு மாறினது. ஒரு ஏரி அழிந்து ஒரு ஏரியாவை உருவாக்கிருச்சு.

தென்னை மரம் அதிகம் இருந்த தோப்புதான் தென்னைமரப்பேட்டைன்னு ஆகி, பிறகு தேனாம்பேட்டைன்னு வந்தது. அங்கிருந்த அலை மேல் அமர்ந்த அம்மன்தான் இப்ப ‘ஆலையம்மன் கோயில்’னு சொல்லப்படுது. மயில்கள் அதிகம் இருந்ததால் மயிலாப்பூர். மாமரங்கள் இருந்த பகுதி மாங்காடானது. பழுத்த மாம்பழங்கள் இருந்த இடம் மாம்பலமானது. குளத்தில் அல்லிமலர்கள் அதிகம் இருந்த இடம் திரு அல்லிக் கேணி என்றாகி, பிறகு திருவல்லிக்கேணி ஆனது. புரசை மரங்கள் அதிகம் இருந்த பகுதி புரசைபாக்கம் என்றாகி பிறகு புரசைவாக்கமானது. ஏரிக்கரையில் நிறைய வேப்ப மரங்கள் இருந்ததால் வேப்பேரி என்ற பெயர் வந்தது. ஆற்காடு நவாப், சையத் கானுக்கு வழங்கிய இடம் சைதாப்பேட்டை. பழமையான நகரான பல்லவபுரம் பல்லாவரமானது. இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வரலாறே இருக்கிறது.

நாற்பது வருஷத்துக்கு முன்னாடிகூட மெட்ராஸ் ரொம்ப ரம்மியமாதான் இருந்தது. டி.டி.கே சாலை தாண்டி அந்தப் பக்கம் விவசாயம் பண்ணுவாங்க. நானே பார்த்திருக்கேன். இப்ப உயரமான கட்டிடங்களும் மேம்பாலங்களும் அந்த இடத்தை ஆக்கிரமிச்சிருச்சு. டி.டி.கே சாலை முழுவதும் புளிய மரமா இருக்கும். எந்தப் பக்கம் நடந்தாலும் மர நிழல்தான். எங்க தாத்தா சாயங்காலம் எங்கள கார்ல அழைச்சிட்டுப் போவாரு. ஸ்பென்சர் பக்கம் ‘ஷெல்’ பெட்ரோல் பங்க் இருக்கும். அடிபம்பு மாதிரி ஒருத்தர் குதிச்சுக்கிட்டே ஒரு ட்யூப்பை இழுப்பார். அதிலிருந்து பெட்ரோல் வரும். அப்படியே மெரினா பீச் போவோம். கூட்டமே இருக்காது. சென்னையில சுத்தமான நீர், காற்று சுவாசிச்ச ஆட்கள்ல நானும் ஒருத்தி. ஆனா, இன்றைக்கு எல்லாம் தலைகீழா மாறியிருச்சு. சென்னை பிளாஸ்டிக் உலகமாக ஆகிருச்சு. 90களுக்குப் பிறகுதான் இந்த மாற்றம்’’ என்கிறார் அவர் வேதனையாக.



‘‘பிரமோத் கபூர் ‘ஜிபிணிழி ழிளிகீ' என்பதை வைத்து தொடராக புத்தகம் செய்தவர். ‘ஙிளிவிஙிகிசீ ஜிபிணிழி விஹிவிஙிகிமி ழிளிகீ', 'மிழிஞிமிகி : ஜிபிணிழி ழிளிகீ'  இப்படி நிறைய புத்தகங்கள். அந்த வரிசையில் இந்தப் புத்தகம் எழுத என்னிடம் கேட்டார். இதற்காக ஒன்றரை வருஷமா வேலை பார்த்தேன். லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரி போய் நிறைய குறிப்புகளும் எடுத்தேன். அருமையாக வந்திருக்கு. சென்னை பற்றி அறிய விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்’’ என்கிறார் நம்பிக்கை பொங்க.   (MADRAS THEN CHENNAI NOW, Price: Rs.2975/, ROLI BOOKS (P) LTD, M75, Greater Kailash II Market, New Delhi110048. Phone: 01140682000.)

, பேராச்சி கண்ணன்
படம்: ஆர்.சி.எஸ்