அழகு மயில், பாட்டு குயில் என இரண்டு அவதாரங்களிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன். ‘பாண்டிய நாடு’ படத்தில் ‘ஃபை ஃபை ஃபை... கலாச்சிஃபை...’ என ரம்யா பாடிய பாட்டு செம ஹிட்டு. மலையாளத்திலும் இவரது குரல் ராசி, தொடர் ஹிட் அடித்திருக்க, ‘டமால் டுமீல்’ படப்பிடிப்பில் இருந்தவருடன் ஒரு ஜாலி கச்சேரியை ஆரம்பித்தோம்...
‘‘நடிகை, பாடகி, எந்த ரம்யாவை உங்களுக்கு பிடிக்கும்?’’ ‘‘அன்றில் பறவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா? ஒரு நொடிகூட பிரிந்து இருக்காது. அது மாதிரி தான் நடிகை ரம்யாவும், பாடகி ரம்யாவும் உயிருக்கு உயிரான தோழிகள். எப்பூடி என் சமாளிப்பு!’’
‘‘சினிமா வாய்ப்புக்கு முன்னாடி பாத்ரூம் சிங்கர்தானே?’’
‘‘ஹலோ... கர்நாடக சங்கீதத்தை கரைச்சிக் குடிச்சிருக்கேன். சின்ன வயசிலேயே சங்கீதம் பாடுற அளவுக்குத் தேர்ச்சி. ஆனா, சினிமா பாடகியாவேன்னு நினைச்சுக் கூட பார்த்ததில்லை. நான் பாடுறதைத் தெரிஞ்சுகிட்டு இசையமைப்பாளர் ஷரத்தான் ‘இவன் மேகரூபன்’ படத்துல வாய்ப்பு கொடுத்தார். ஆடியோ ரிலீஸ் ஆனதும், ‘இந்தப் பாட்டு பாடின பொண்ணு யாரு’ன்னு நிறைய விசாரிப்பும் பாராட்டும் கிடைச்சது. பாடகி அடையாளமும் கிடைச்சது. மலையாளத்தில் ‘தட்டத்தின் மரயத்து’ படத்தில் நான் பாடின ‘முத்துச் சிப்பி போலொரு...’ பாட்டு, பாடகியா எனக்குப் பெரிய புகழை கொடுத்துச்சு. நான் பாடின பாடல்களுக்கு சிறந்த பாடகிக்கான விருதுகளும் கிடைச்சிருக்கு.
தமிழில் பாடணும்னு ஆசைப்பட்டேன். அது ‘பாண்டிய நாடு’ படம் மூலமா நிறைவேறிடுச்சு. தேங்க்ஸ் டூ இமான் சார். அப்புறம் இன்னொரு விஷயம்... மலையாளத்தில் என் தம்பி ராகுல் சுப்ரமணியமும் மியூசிக் டைரக்டரா இருக்கான். ‘பிலிப்ஸ் அண்டு த மங்கி பென்’ என்கிற படத்தில் அவன் மியூசிக் சூப்பர் ஹிட்!’’
‘‘ ‘ஃபை ஃபை’ பாட்டில் லட்சுமி மேனனுக்கு பதிலா நீங்க ஆடி யிருந்தா..?’’
‘‘எந்தெந்த வாய்ப்பு யார் யாருக்கு கிடைக்கணும்ங்கிறதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். லட்சுமி மேனன்தான் ஆடணும்ங்கிறது கடவுளோட முடிவு. நான் ஆடியிருந்தால் எப்படியிருக்கும்னு கற்பனை செய்ய விரும்பல. லட்சுமி மேனன் அந்தப் படத்தில் நல்லா பண்ணி யிருந்தாங்க. அவ்வளவுதான்!’’
‘‘பாட்டு பாட்டுன்னு நடிகை ரம்யாவை மறந்துடப் போறீங்க?’’
‘‘ஹை... அது மட்டும் நடக்காது. தமிழில் சி.எஸ்.அமுதன் டைரக்ஷனில் ‘ரெண்டாவது படம்’ நடிச்சி முடிச்சிருக்கேன். இப்போ ஷங்கர் சாரோட அசிஸ்டென்ட் டைரக்ட் பண்ற, ‘டமால் டுமீல்’, அருள்நிதி ஜோடியா ஒரு படம், மலையாளத்தில் ரெண்டு படங்கள், கன்னடத்தில் கணேஷ் ஜோடியா ஒரு படம்னு ஹீரோயினாவும் பிஸியாத்தான் இருக்கேன். அநேகமா ‘டமால் டுமீல்’ படத்தில் ஒரு பாட்டு பாட வாய்ப்பிருக்கு. தமிழ் இசையமைப்பாளர்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி தமன் வரைக்கும் பிடிக்கும். இளைய
ராஜாவோட ‘மழை வருது மழை வருது...’, இசைப்புயலோட ‘வெள்ளை பூக்கள்...’ பாட்டுகள் என் மனசுக்கு நெருக்கமானவை.’’
‘‘பாடல்கள் இருக்கட்டும்... உங்க மனசுக்கு நெருக்கமான ஆண் யாரு?’’
‘‘ம்.. நீங்க கேட்க வர்றது புரியுது. காதல் கிராஸ் ஆகாத மனிதர்களே இருக்க முடியாது. என்னையும் அந்தப் புயல் கடந்து போயிருக்கு. ஆனா, அது பக்குவமில்லாத வயசு. இப்ப யார் மீதும் காதல் இல்ல!’’‘‘அப்போ மலையாள நடிகர் உன்னி முகுந்தனுடன் லவ் என்று வந்த நியூஸ்..?’’
‘‘ஜாலியா போற பேட்டியை ஏன் சீரியஸ் டிராக்கில் இழுத்து விடுறீங்க? அது பொய்யான தகவல்னு பலமுறை சொல்லிட்டேன். மறுபடியும் அதைப் பற்றிப் பேச விரும்பல.’’
‘‘லவ் மேரேஜ்தானே பண்ணுவீங்க?’’
‘‘அது பற்றி இப்போ எந்த முடிவும் எடுக்கல. அதுக்கான நேரமும் இப்ப வரல. லவ் மேரேஜ், அரேஞ்சுடு மேரேஜ் ரெண்டிலுமே பிரச்னை இருக்கு. எப்படிப்பட்ட திருமணமா இருந்தாலும், இல்லற வாழ்க்கையில் கணவன் , மனைவியிடையே பிரச்னைகள் வரலாம். சின்ன விஷயத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சி பிரச்னையை பெருசாக்காம, ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்துப் போனா வாழ்க்கை இனிக்கும்.’’,