இஙகே ஓடடுககு காசு தர முடியாது!





எதிர்க்கட்சிக்காரர்கள் தினம் தினம் தாக்கப்படுவதும், அமைச்சர்களே அடிதடியில் இறங்குவதும், லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் ஆவதுமே ஏற்காடு இடைத் தேர்தலின் தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன. கமகம சாராயமும், கறி விருந்தும், கை நிறைய பணமும், வேட்டி சேலை போன்ற அன்பளிப்புகளுமே தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவையாக ஆகிவிட்டன. கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே பொருத்தமான களமாக அரசியல் ஆகிவிடும் போலிருக்கிறது.

எளியவர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஆக முடியாதா? தேர்தல்கள் நியாயமாக நடக்காதா? என்ற ஏக்கக் கேள்விகளுக்கு விடையாக இருக்கிறது மிசோரம் மாநிலம். ஏற்காடு இடைத் தேர்தலோடு அங்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு சென்று பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவார்கள். தேர்தலின் எந்த சுவடும் அங்கு இருக்காது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதக் குழுக்களுக்குப் பஞ்சமில்லை. தினம் தினம் கலவரம். அங்கு ஒரே அமைதி பூமி, மிசோரம். 90 சதவீதத்துக்கும் மேலாக கிறிஸ்தவர்கள் வாழும் இந்த மாநிலத்தில், மதத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, தீவிரவாதத்தை திருத்தினார்கள். கடந்த 86ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில் தீவிரவாதக் குழுக்களுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. அன்றுமுதல் அங்கு ஜனநாயகம் தழைக்கிறது. அதை உறுதி செய்யும் பொறுப்பை மத அமைப்புகளே ஏற்றுள்ளன.

‘மிசோரம் பீப்புள்ஸ் ஃபோரம்’ என்ற அமைப்பில் மதத் தலைவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இந்த அமைப்பு தேர்தல் ஆணையத்தைவிட சக்தி வாய்ந்தது. தேர்தலுக்கு முன்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் இந்த அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பு விதிக்கும் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு கையெழுத்து போட வேண்டும். இதை ஏற்காத கட்சிகளுக்கோ, தனி நபர்களுக்கோ ஓட்டு விழாது. இந்த ஆண்டு இப்படி 27 நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். அவற்றில் சில...



* குடி உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையானவர்கள், பெண்கள் விஷயத்தில் முறைகேடாக நடந்து கொண்டவர்களை வேட்பாளர்களாக யாரும் நிறுத்தக் கூடாது. கண்ணியமானவர்களே களமிறங்க வேண்டும்.

* ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்துக்கு லீவ். அன்று யாரும் மக்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. 

* கட்சிகள் தங்கள் இஷ்டத்துக்கு பிரசாரக் கூட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தக் கூடாது. இந்த அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். மக்களை தொந்தரவு செய்யும்விதமாக பிரசாரம் இருக்கக் கூடாது. கூட்டங்கள் இந்த அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில்தான் நடக்க வேண்டும். (மிசோரமில் சோனியாவும் ராகுலும் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்துக்கு தலைமை வகித்தது உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இல்லை. இந்த அமைப்பின் பிரதிநிதிகள்தான்!)

* ‘மிசோரம் பீப்புள்ஸ் ஃபோரம்’ ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும். எல்லா வேட்பாளர்களும் அங்கு வர வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். (இப்போதைய முதல்வர் லால்தன்வாலாவும் இப்படி வந்து பங்கேற்றார்.)

* தேர்தல் அலுவலகம் எதையும் யாரும் ஆரம்பிக்கக் கூடாது. இஷ்டத்துக்கு ஊருக்கு ஊர் கொடி கட்டுவதோ, பேனர் வைப்பதோ கூடாது. எத்தனை கொடிகள் கட்டலாம் என இந்த அமைப்புதான் முடிவு செய்யும்.

* தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பிருந்தே வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

* வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய குறிப்புகளையும் வாக்குறுதி களையும் நோட்டீஸாக அடித்து, மிசோ இளைஞர் அமைப்பிடம் கொடுத்துவிட வேண்டும். இப்படி எல்லாக் கட்சிகளின் நோட்டீஸ் களையும் வாங்கிக் கொண்டு, அவற்றை மொத்தமாக ஒவ்வொரு வீட்டிலும் அந்த அமைப்பின் இளைஞர்களே கொடுத்துவிடுவார்கள். தனியாக கட்சிக்காரர்கள் போய் கொடுக்கக் கூடாது. 

* தெருமுனை பிரசாரம், டான்ஸ் நிகழ்ச்சி நடத்தி கூட்டம் சேர்ப்பது என எதையும் செய்யக் கூடாது.

* பிரசாரத்துக்கு பணத்தை தண்ணீராக இறைப்பது கூடாது. பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கக் கூடாது.

* நிறைவேற்ற முடிகிற வாக்குறுதிகளையே தர வேண்டும். இஷ்டத்துக்கு அள்ளிவிடக் கூடாது.

இந்த விதிகளை மீறிய பலர், டெபாசிட் கூட வாங்க முடியாமல் மண்ணைக் கவ்வியதால் யாரும் ரிஸ்க் எடுப்பதில்லை. இருப்பது 40 தொகுதிகள். வெற்றி வித்தியாசம் சில நூறு ஓட்டுகளாகவே இருப்பதால், சின்ன தவறும்கூட வெற்றியை பாதித்துவிடும். அதனால் தேர்தலை அங்கு யாரும் திருவிழாவாக நடத்துவதில்லை.

‘தேர்தல் விதிகளை மீறியதாக’ மிசோரமில் ஒரு வழக்கு கூட பதிவாவதில்லை என்பதுதான் இந்தக் கட்டுப்பாட்டின் மகத்துவம். இதுபோல மக்கள் அமைப்புகள் வலுப்பெற்றால், எங்குமே இது சாத்தியம்தான்!

, அகஸ்டஸ்