இப்படி ஒரு ஐடியா பொறி தட்டியதற்காகவே கைதட்டிப் பாராட்டலாம். இளமையும் புதுமையும் கைகோர்க்க நேயர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் சன் டி.வி.யின் சமீபத்திய பரபர ஹிட், ‘சாம்பியன்ஸ்’. தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை உலகறியச் செய்து, அவர்களின் அபார தன்னம்பிக்கைக்கு ராயல் சல்யூட் செய்யும் அசத்தல் நிகழ்ச்சி!
‘‘வாழ்க்கையில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் சவால்களை சந்திக்கத்தான் வேண்டும். இயல்பான மனிதர்களே அந்த சவால்களைத் தாண்டி வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் உடலே ஒரு சவால்தான். அதையும் மீறி சாதிப்பவர்களே உண்மையான சாம்பியன்’’ , சிம்பிள் விளக்கம் தருகிறார் ஆல்டம் ஜேக்கப். சன் டி.வியின் நெட்வொர்க் ஹெட் (நான் ஃபிக்ஷன்).
விதவித மனிதர்கள், வித்தியாசத் திறமைகள் என பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வரும் ‘சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சி படமாகிக் கொண்டிருந்த ஃபுளோருக்குள் ஒரு ரவுண்ட் அடித்தோம்.
காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண்களும், இளைஞர்களும் குழுவாக நடனமாடுகிறார்கள். எந்த சப்தத்தையும் உணர முடியாமல், பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர்கள் நடன அசைவுகளைக் கொடுப்பது ஆச்சரியத்தின் உச்சம். ‘‘மேடைக்கு எதிரே அமர்ந்தபடி நடன ஆசிரியர்கள் தரும் முத்திரைக் குறிப்புகள்தான் எங்களை ஆட்டுவிக்கிறது’’ என்கிறார்கள் இவர்கள். முத்திரை பார்த்து ஆடியே முத்திரை பதிப்பது மட்டும் சாதாரணமா என்ன!
ஒரு கையுடன் நடனமாடி அசத்துகிறார் ஹாரூன். விபத்து ஒன்றில் வலது கை துண்டாகி கீழே விழ, அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். முறிந்த கையை ஒட்ட வைக்கும் முயற்சியும் முறிந்துபோக, மனம் தளராத ஹாரூனுக்கு அதன் பிறகுதான் நம்பிக்‘கை’ அதிகரித்தது. நடனப் பயிற்சி எடுத்தவர், சன் மேடையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
பார்ப்பதற்கு பத்து வயது சிறுமி மாதிரி இருக்கும் கௌதமிக்கு நிஜத்தில் 28 வயது. தோற்றத்தில் குட்டியாக இருக்கும் ரேவதியின் காந்தக் குரலுக்கு கரையாத இதயம் இருக்காது. பார்வையை இழந்தவர்தான் இளைஞர் குமார். அதனால் என்ன? இனிமையான வயலின் வாசிப்பால் அவரது திறமையை ‘வெளிச்சம்’ போட்டுக் காட்டி நம் இதயம் ஈர்க்கிறார்.
ராஜதுரை. இவரும் பார்வையற்றவர்தான். அரங்கில் உள்ள அத்தனை பேரையும் கரையச் செய்கிறது இவரது பாடல். அவரது சொந்தக் கதை, அதைவிட உருக்கம். ராஜதுரையின் மனைவியும் பார்வையற்றவர்தான். இருவருக்கும் கண்களாக இருப்பது 5 வயது மகன் மட்டுமே. ‘‘நீதான் நல்லா பாடுறியே... வேணும்னா என் கண்ணை எடுத்துக்கிட்டு உன் கண்ணை எங்கிட்ட கொடுத்துடுறியா’’ என்று மகன் கேட்டதாக அவர் சொன்னபோது கண்ணீர் பெருகாத விழிகள் இல்லை.
வாய் பேசமுடியாத கலாப்ரியா குழுவினரின் கரகாட்டம் உற்சாகப்படுத்த... நீதிபதி இருக்கையிலிருந்து எழுந்து போய் அவர்களுடன் இணைந்து நடனமாடுகிறார் நடிகை ரேவதி. இன்னொரு நீதிபதியாக பட்டிமன்றம் ராஜாவும் போட்டியாளர்களுக்கு நம்பிக்கை உரம் அளித்து உற்சாகப்படுத்துகிறார். மேடை ஏறினாலே கரகோஷத்தை அள்ளுகிறார்கள் ஹரிஸ், சங்கர், நாகராஜ் என்ற மூன்று சகோதரர்கள். இயல்பான உயரத்துக்கு வளர முடியாததுதான் இவர்களின் குறை. மூவரில் ஹரிஸுக்கு 18 வயது,
சங்கருக்கு 16, நாகராஜுக்கு 14. இதில், கடைக்குட்டி நாகராஜ் படுசுட்டி. தொடை தட்டி ஆடும் இவரது ஆட்டத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது. இவர்களுக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலம், கோலார். கொத்தனாராக இருந்த தந்தை பக்கவாதத்தில் படுத்துவிட, பூ வியாபாரம் செய்து மூன்று மகன்களையும் படிக்க வைத்திருக்கிறார் அம்மா ராஜம்மாள். சன் டிவி நிகழ்ச்சியால் உள்ளூர் சூப்பர் ஸ்டாராகிவிட்ட இவர்கள், இப்போது நடன நிகழ்ச்சிகளில் செம பிஸி.
சிறுமி அபிநயாவின் நடனமும் ‘அட’ போட வைக்கிறது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுனிஷ் ஜோசப். இவரால் எழுந்து நிற்கவே முடியாது. வாழ்க்கையே படுக்கையில்தான். ஆனாலும், நம்பிக்கை மட்டும் உறங்காமல் பார்த்துக்கொள்ளும் ஜோசப், தான் பாடும் பாடலால் அனைவரின் மனதிலும் எழுந்து நிற்கிறார். தான்சீன். ‘சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் இவரும் ஸ்பெஷல். இரண்டு கைகளும் இல்லை இவருக்கு. எனினும் டிரம்ஸ் வாசிப்பில் அதிர வைக்கிறார். டிரம் ஸ்டிக்குகளை ரப்பர் பேண்டால் கட்டிக்கொண்டு இதை அவர் சாத்தியமாக்கிக் காட்டுவதே நம்மை வியப்பின் விளிம்புக்குக் கொண்டு செல்கிறது.
‘‘ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நிஜ ஹீரோக்களை அடையாளம் காட்டும். இங்கே பங்கு பெறும் மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவருமே, தங்கள் மீது ஒரு நொடிகூட பரிதாபப் பார்வை விழுந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்களது தன்னம்பிக்கைக்கு நாம் தலை வணங்கியே ஆக வேண்டும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் ஒவ்வொரு சீசனும் 13 எபிசோடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 4 சுற்றுகள் நடக்கும் போட்டியில் 13வது வாரத்தின் முடிவில் சாம்பியன்களாக இருவர் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.5 லட்சம், இரண்டரை லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும். இதுதவிர, கலந்துகொள்ளும் அனைவருக்குமே பணப் பரிசு கிடைப்பது நிகழ்ச்சியின் புதுமை. போட்டியாளர்களுக்கு போக்குவரத்துச் செலவு, தங்கும் இடம், உணவு, போட்டிக்கான ஆடை, அலங்கரிப்பு, நடனக்குழுவினர் என எல்லா செலவுகளையுமே நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறது’’ என்கிறார் ஆல்டம் ஜேக்கப் முத்தாய்ப்பாக!
, அமலன்