இரண்டாம் உலகம்





பால் வீதி தாண்டி, வேறு இடம் தேடிக் கிடைத்த ‘இரண்டாம் உலக’த்திலும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அப்படி காதல் சொல்லியிருக்கிறார் செல்வராகவன். ‘ஆயிரத்தில் ஒருவனி’ல் காலவெளியைத் தாண்டியவர், இப்போது பால்வெளியில் பயணம் செய்து வினோதமான மாய உலகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். பூமியில் இறந்துபோகும் காதல், இரண்டாவது உலகத்தில் தொடரும் சுவாரசியப் பின்னணியில் ஆரம்பிக்கிறது கதை. ‘நாம் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோமோ’ என்ற கவலையால் முழுக் கதையையும் ஆர்யாவின் வாய்ஸ் ஓவரில் சொல்லத் தொடங்குவதில் தெரிகிறது ஆரம்ப பலவீனம். அதைப் படம் முழுக்க கொண்டு போயிருக்கிறார் செல்வராகவன்.

ஃபேன்டஸியில் சின்ன முயற்சி செய்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. காதல் மலராத வேற்றுலக பெண்ணிற்கு, காதலை உணர்த்துவதே ஒன் லைன். ரொம்பவே எளிய காதல் கதைதான். அதை நமக்கு சிரமப்பட்டு புரிய வைக்கிறார் டைரக்டர். ஆனாலும், படத்தில் நம்பகத்தன்மையை கொண்டு வராதது குறை. நிச்சயமாக செல்வராகவனால் முடியும் என்கிற விஷயத்தை ஏன் கைவிட்டார் என்பதுதான் இந்த வருஷத்தின் கடைசி ஆச்சரியம். £தல் என்பது செல்வ ராகவன் சினிமாவில் தனிப்பட்ட ஏரியா. அதில் பல சம்பிரதாயங்களை உடைத்து காலி செய்தது கூட அவர்தான். அப்படிப்பட்டவர், வழக்கொழிந்துபோன ‘பியூர் காதலை’ சொல்கிறேன் எனத் தவித்திருப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. மரபு களை உடைத்தவருக்கு, இப்போது எதை உடைப்பதென்று தெரியவில்லையோ!

ஆர்யாவின் மீது காதல் வயப்படும் அனுஷ்காவின் ஆரம்பத் தயக்கங்கள் அழகு. ஆர்யாவை முன்வைத்து உரித்தெடுக்கும் காதல் கேள்விகள் அனுஷ்காவின் தோழி வழியே சொல்லப்படுவது படு சுவாரஸ்யம். அதையும் அந்த ஃப்ரேமோடு முடித்துக்கொள்கிறார் டைரக்டர். கதையின் நோக்கம், அடுத்தடுத்த கட்டங்கள் சரசரவென முன்வைக்கப்படாதது அலுப்பைத் தருகிறது.
பூமி தருகிற சுவாரஸ்யம் கூட, ‘இரண்டாவது உலகம்’ தரவில்லை. அந்த ராஜாவும், தள பதிகளும் தருவது உச்சகட்ட பொறுமையிழப்பு. கடவுள் என்றொரு பெண்ணைக் காட்டுகிறார்கள். அவரும் விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறார். பூ பூக்கும் என்று செடிக்கு தண்ணீர் ஊற்றிக் காத்திருக்கிறார். தன்னையே கடத்தினாலும் மறுவார்த்தை பேசாமல் வண்டியேறிச் செல்கிறார்.

ஆர்யா படம் முழுக்க வந்தாலும்... நடிப்பை ஊறுகாய்க்குக் கூட தொட்டுக்கொள்ளவில்லை. சீரியஸூக்கு அவர் சரி வரமாட்டார் என்றாலும், ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரமாகவே இருக்கிறார். பட்டுத் தெறிக்கிற வசனங்களை எழுதுகிற ஆர்வம் கூட இல்லை செல்வா வுக்கு. அனுஷ்கா கொஞ்சம் அழகு... நிறைய முதிர்ச்சி.

‘ஜார்ஜியா’வின் அழகு செறிவு கண்ணை மயக்குகிறது. ஆனால், இவ்வளவு அலட்சியமான திரைக்கதையில் எல்லாமே முக்கியமிழந்து நிற்பது கண்கூடு. இதிலும் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. நம்ப முடியாத கதைக்கு உயிர் கொடுத்திருப்பதில் அவரின் பங்கு அசாத்தியம். உண்மையில் தமிழ்ப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என சில காட்சிகளில் தோன்றுவது நிஜம். கம்ப்யூட்டர் காட்சிகளில் சிங்கம், யாளி, பறக்கும் டிராகன்களுக்காக உழைத்திருக்கிறார்கள். ஹாரிஸ், ‘கனிமொழியே...’ பாடலில் உயிரைத் தொடுகிறார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ தவறுகளைத் திருத்திக்கொண்ட அடையாளம் செல்வராகவனிடம் இல்லை.  எப்போதும் திரைக்கதையில் அசத்தும் செல்வாவுக்கு ‘மயக்கம் என்ன’?
, குங்குமம் விமர்சனக்குழு