கமலுக்கு நச் பஞ்ச்!





காதல் ஸ்பெஷலில் பக்கத்துக்குப் பக்கம் இளமைத் துள்ளல். ‘காதலர் தினம்’ வரும் நேரத்தில் ‘காதல் தேர்வு’க்கான வினாத்தாளை அவுட் செய்து அமர்க்களப்படுத்திவிட்டார் ஆல்தோட்ட பூபதி!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

தந்தையின் ஆசிட் வீச்சால் கருகிய முகத்துடன் இருக்கும் காயத்ரியைக் காணும்போது, காதலை மறுக்கும் பெண்கள் மீது அமிலம் கொட்டும் மனித மிருகங்கள்தான் நினைவுக்கு வருகின்றனர். காயத்ரியை கைபிடித்த காதல் கணவன் அப்துல்லா உண்மையிலேயே ‘ஆயிரத்தில் ஒருவன்’தாங்க!
- சுகுமார், காட்டுக்கானூர்; ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி; உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.

நிஜக் காதலுக்கு ‘உடல் ஊனம்’ ஒரு தடையே இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த லட்சுமி-கண்ணன் தம்பதிகள். லட்சுமியின் பெற்றோரும் இக்கட்டுரையைக் கண்டு மனம் மாறுவார்கள் என்று நம்புவோம்.
- அ.கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

தடைகளை உடைத்தெறிந்து ‘ஃபீனிக்ஸ்’ பறவையாய் ‘விஸ்வரூபம்’ எடுத்திருக்கும் கமலுக்கு ‘ரசிகர்கள் பணம் தருகிறார்களோ இல்லையோ... மரியாதை தருவார்கள்’ என்று இறுதி பஞ்ச் வைத்தது நச்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘ஒஸ்தி பொண்ணு... டஸ்ட்டு பின்னு’ என பின்னியெடுக்கும் ‘கானா’ பாலா, படுஜோரான திறமைசாலிதான். சினிமா உலகம் அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
- ஆதி.சௌந்தரராஜன்,பட்டவர்த்தி.

‘மனித உயிர் காக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர, மற்ற எதன்பொருட்டும் ஆண்மை நீக்கம் என்பது அப்பட்டமான உரிமை மீறல்தான்’ என்ற ‘ச்சீய் பக்கத்தின்’ கருத்து, நியாயத்தின் பக்கம்!
- கவியகம் காஜூஸ், கோவை-24.

எந்தக் கண்டமாக இருந்தால் என்ன... பெண்களின் ‘பொஸஸிவ்நெஸ்’ ஒரே மாதிரிதான் இருக்கும். அமெரிக்க இசை ஜோடி பீபர்-செலினா பிரிவும் இதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது.
- எஸ்.பிரசன்ன குமார், வேலூர்.

பதினான்கு வயது சிறுமி (துளசி)யை காதலியாக நடிக்க வைத்தது சரியா? இன்று முத்தக் காட்சி குறித்து கருத்து தெரிவிப்பவர்கள் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- த.சத்தியநாராயணன்,அயன்புரம்.

போட்டோவில் ஏவி.எம்.சரவணன், இளையராஜா, கவிஞர் வாலி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போது, பாண்டியராஜன் அவர்களைப் பற்றி மூச்சு விடாமல், தன் மனைவி வாசுகி பற்றிக் கூறியுள்ளது சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது. ஏன்னா... இது காதல் ஸ்பெஷல் இதழ்ங்க!
- ப்ரியா, வேலூர்.

‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதை படத்தின் எல்லா முனைகளிலும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆணித்தரமாகச் சொன்ன உங்கள் நடுநிலை விமர்சனத்திற்கு ‘கடலளவு’ பாராட்டுக்கள்!
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.