கேரமும் வீரமும்





‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதை. காத்து, தண்ணி, ஒளின்னு தொட்டியில் பர்ஃபெக்டா பூக்குறது ஒரு வகை. ஆளில்லாத காட்டில் பெரிசா பூத்து அழகா சிரிக்கிறது இன்னொருவகை. இதில் அவ்வளவு நேர்த்தியா, இயற்கையா, முட்டி மோதி முளைச்சி வர்றவங்களைப் பற்றி சொல்லப்போறேன். ‘சுண்டாட்டம்’ கேரம் விளையாடுகிற பசங்களைப் பத்தின கதை. நார்த் மெட்ராஸ்ல இந்த விளையாட்டு ரகளையா நடக்கும். பத்துக்கு பத்து ரூமில் பரபரன்னு ஆட்டம் கிழிபடும். 90களில் பார்த்தால் அதுதான் விளையாட்டு. ஏரியாவுக்கு ஏரியா சாம்பியன்ஸ் இருப்பாங்க. விளையாட்டை விளையாட்டா எடுத்துக்காம திரிகிற பசங்களின் கோபமும் வீரமும், பார்க்க புதுசா இருக்கும்’’ என்ற இயக்குநர் பிரம்மா ஜி.தேவ் மேலும் தொடர்ந்தார்.

‘‘படம் கொஞ்சம் கரடுமுரடா இருக்குமான்னு நீங்க கேக்க வர்றது புரியுது. வாழ்க்கை எப்படி இருக்கோ, அப்படித்தானே எடுக்க முடியும்? இந்த மெட்ராஸ்க்குள்ளே இப்படியெல்லாம் உலகம் இருக்கா, இப்படி பசங்களும் இருக்காங்களா, அதில் இவ்வளவு காசு புழங்குதான்னு உங்களுக்கு ஆச்சர்யம் தாங்க முடியாது. கதை இல்லை, கதை இல்லைன்னு சொல்லிக்கிட்டே பல வருஷமா திரியுறோம். நார்த் மெட்ராஸில் இருக்கிற கதையே ஒரு நூறு தேறும். டி.பி.சத்திரம் பக்கத்திலேயே திரிஞ்சு வளர்ந்தவன் நான். என் அனுபவப் பதிவுதான் இது. என் மூச்சுக்காத்தை ஊதி எடுக்கிற படம். உண்மை எப்போதும் அழகாத்தான் இருக்கும்.

படத்துல இர்பான், மது, ஸ்டாலின்னு மூணு பேர் முக்கியமா வர்றாங்க. சினிமாத்தனம் பழகாத பசங்க. சிந்தாதிரிப்பேட்டையில் ரூம் எடுத்துப்போட்டு, லுங்கி கட்டி பழகவிட்டு, கட்டுக்கடையில் சாப்பிட வைச்சு, பாடி லாங்குவேஜ் கொண்டு வந்து, செவத்த முகத்தை கறுக்க வைச்சு ஒரு வழி பண்ணோம். அருமையா வந்தாங்க. படத்தில் முக்கிய அம்சமா காதலும் இருக்கு. அருந்ததின்னு பொண்ணு. நம்ம பையன் அடிக்கடி வெயிட் பார்த்து பின்னால இருக்கிற வாசகம் படிக்கிற பையன். ‘இன்று ஒரு தேவதை சந்திப்பு’ன்னு படிச்சபிறகு வீட்டுக்குப் போனால் தங்கச்சியோட ஃபிரண்ட் வந்திருப்பாங்க. அப்படி ஆரம்பிக்குது ரவுண்ட் அப். சுண்டாட்டத்தோடு இந்த ஆட்டமும் இருக்கு.

பொய் இல்லாத வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? புரியாத வசனம், அறியாத போக்குன்னு பகட்டு எதுவும் இல்லை. வாழ்க்கையின் பதிவு நல்லாத்தானே இருக்கும்! வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்வாங்க. சில விஷயங்கள் எல்லா வீடுகளிலும் ஒரு மாதிரித்தான் இருக்கும் என்பதே அதன் அர்த்தம். எல்லோருக்கும் ஆகிவருகிற கதை இது!’’
- நா.கதிர்வேலன்