‘என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்...’ என தனது மகன் சித்தார்த்தை இயக்குனர் ராஜசேகரின் கையில் ஒப்படைத்திருக்கிறார் நடிகையும் எம்.பியுமான ஜெயப்ரதா. யெஸ், ‘சத்யம்’ படத்தைத் தொடர்ந்து ராஜசேகர் இயக்கும் ‘வாலிபன்’ படத்தில் சித்தார்த் ஹீரோ. முதல் படத்திலேயே ஊத்துக்குளி வெண்ணெய் ஹன்சிகாவுடன் ஜோடி போடுகிறார் அவர்.
‘‘வாழ்க்கையில நாம் எவ்வளவோ சம்பவங்களை சந்திச்சாலும் கல்யாணம்தான் முக்கியமான தருணம். வாட்ச்மேன், சமையல்காரர் தொடங்கி ஃபிரண்ட்ஸ், சொந்தக்காரங்க வரை 360 டிகிரில அவ்வளவு பேருக்கும் சந்தோஷம் தர்ற இடம் கல்யாணம். ஓடிப்போய் கல்யாணம் பண்றதில த்ரில் இருக்கலாம்; திருப்தி இருக்காது. ஒரு லவ்வை பேரன்ட்ஸ், ஃபேமிலின்னு சேர்ந்து கொண்டாடும் கலர்ஃபுல் திருவிழாதான் கல்யாணம். கிளாமரை திணிக்காம, குத்துப்பாட்டுங்கற இரைச்சல் இல்லாம, படம் பார்க்கறவங்களுக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷன் தர்ற ஒரு சந்தோஷமான காதல் கதைதான் இது’’ என மாவிலைத் தோரணம் கட்டுகிறார் ராஜசேகர். ‘‘சித்தார்த்தை எப்படிப் பிடிச்சிங்க?’’
‘‘சித்தார்த்தை நான் பிடிக்கல. என்னைதான் அவங்க பிடிச்சாங்க. சித்தார்த்தை தமிழ்லதான் அறிமுகப்படுத்தணும்னு ஜெயப்ரதா மேடம் உறுதியா இருந்திருக்காங்க. ‘சத்யம்’ தெலுங்குப் பதிப்பான ‘சல்யூட்’ படத்தை ஜெமினி டி.வியில் யதேச்சையா பார்த்திருக்காங்க. படத்தோட மேக்கிங் அவங்களை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணியிருக்கு. விஷாலோட அப்பாகிட்ட நம்பர் வாங்கி எங்கிட்ட பேசினாங்க. ஜெயப்ரதாவுக்கு எவ்வளவு பேரை தெரியும்! அப்படி இருந்தும் அவங்க என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைச்ச கௌரவம்.
சித்தார்த் ஒரு ரக்பி ப்ளேயர். மலையேற்றமும் தெரியும். லொகேஷன் பார்க்க மும்பை போயிருந்தப்போ, அவர் ரக்பி விளையாடுற வேகத்தைப் பார்த்து பிரமிச்சுட்டேன். அதனால படத்தோட ஓபனிங் சீனாவே ரக்பி விளையாட்டை வைக்கிறேன். படத்தில ஆக்ஷனும் இருக்கும். ஆனா, அது எந்த இடத்திலும் துருத்திக்கிட்டு நிற்காத மாதிரி ஸ்கிரீன் ப்ளே இருக்கும்!’’
‘‘ஹன்சிகாவுக்கு இதுல என்ன வேலை?’’
‘‘மத்தவங்களுக்கு வலியைக் கொடுத்து காதலர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது உண்மையான காதல் இல்லைன்னு நம்புற பொண்ணுதான் ஹன்சிகா. ‘இதயத்தைத் திருடாதே’ கிரிஜா மாதிரி துறுதுறுன்னு இருக்குற சப்பி பப்பியான ஒரு கேரக்டர். படம் முழுக்க கலகலன்னு சுண்டி இழுப்பார். முதல் முத்தம், முதல் லெட்டர், முதல் அணைப்புல எவ்வளவு கிக் இருக்கோ... அதே மாதிரி எல்லாரோட சம்மதமும் கிடைச்சு சந்தோஷமா நடக்கிற கல்யாணமும் செம கிக்கானது. இதை மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிற பையன்தான் சித்தார்த். ஒரே நேர்க்கோட்டில் டிராவல் ஆகிற இந்த ரெண்டு பேருக்குமான லவ் கெமிஸ்ட்ரி, கவிதையா இருக்கும்.

வில்லன் கேரக்டருக்கு பிரகாஷ்ராஜ் மாதிரி, அதே சமயம் முப்பது முப்பத்தஞ்சு வயசுக்குள்ள இருக்கிற மாதிரியான ஒருத்தரை தேடினப்போ கிடைச்சவர்தான் அஜய். தெலுங்கில நிறைய பண்றார். ஷாருக் கானோட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துல அவருக்கு முக்கியமான ரோல். ‘வாலிபன்’ல இவரோட கேரக்டர் பேசப்படும். ரோகிணி, ‘ஆடுகளம்’ நரேன், பவர்ஸ்டார்னு நிறைய கேரக்டர்கள் இருக்கு. ரொம்ப நாளைக்குப் பிறகு சாயா சிங் நடிக்கிறார்.
பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், ஜீவாவுக்குப் பிறகு நான் ரொம்ப நேசிக்கிற ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்றார். மும்பை, கோவா, சென்னைன்னு டிராவல் ஆகிற கதையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் இவரோட ஒளிப்பதிவு அவ்வளவு நேர்த்தியா பதிவு செய்யுது. ‘பருத்திவீரன்’, ‘சுப்ரமணியபுரம்’, ‘ரேனிகுண்டா’ன்னு கதைக் களத்தை விட்டு நகராத சண்டைக் காட்சிகளை அமைக்கும் ராஜசேகர் மாஸ்டர்தான் ஸ்டன்ட். என்னையும் சேர்த்து இந்தப் படத்தில் மூன்று ராஜசேகர்கள் இணைந்து வொர்க் பண்றோம்.’’

‘‘ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராமே ஹன்சிகா?’’
‘‘சூர்யா, ஆர்யா, கார்த்தி, தனுஷ்னு பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா பிஸியா நடிச்சிக்கிட்டிருக்கிற பொண்ணு ஹன்சிகா. இந்தப் படத்தில கமிட் ஆகும்போது, அவருக்கு இதை விடப் பெரிய வாய்ப்பு வந்துச்சு. அதையெல்லாம் தள்ளி வச்சுட்டு, ‘என்னோட கரியர்ல இது முக்கியமான படமா இருக்கும்’னு வந்தாங்க. சம்பளத்தைப் பார்க்காம கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்கதான் ஹன்சிகா.

ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து ட்விட்டர், ஃபேஸ்புக்னு நெட்ல நோண்டிக்கிட்டு இருக்காம, ஸ்கிரிப்ட் பேப்பரை வச்சுக்கிட்டு, அடுத்த சீன்ல எப்படி பண்ணலாம்னு சின்சியரா யோசிக்கிற சூப்பர் கேரக்டர். கிட்டத்தட்ட ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் போலவே ஸ்பாட்ல வொர்க் பண்ணி ஆச்சர்யப்படுத்தறாங்க.
‘தேவதை பார்க்கிறாள் உயிரையே கேட்கிறாள்... இதுவரை பார்த்ததிலே இவள்தான் அழகி’ன்னு படத்தில ஹன்சிகா பற்றி விவேகா எழுதிய பாடல் ஒன்று வருது. படத்தில மட்டும் அவங்க தேவதை இல்லை. ‘வாலிபன்’ யூனிட்டுக்கே ஹன்சிகா தேவதை மாதிரிதான்!’’
- அமலன்