லோன்





‘‘உங்க ஆபீஸ் கிளார்க் ராமநாதன் மகளை, என் மகனுக்காகப் பொண்ணு பார்க்கப் போறோம். அவர் வசதி, வாய்ப்பெல்லாம் எப்படி?’’ - பரமசிவத்திடம் கேட்டார்கள் அவர்கள்.
‘‘அந்த ராமநாதன் பொண்ணையா பார்க்கப் போறீங்க? ஆபீஸ்ல பி.எஃப் லோன், ஹவுசிங் லோன், ஃபெஸ்டிவல் லோன்... இப்படி எந்த லோன் கிடைக்குதோ, அதெல்லாத்தையும் வாங்கிடுவார். அதனால நீங்க எதிர்பாக்கிறபடி, பொண்ணுக்கு சீர் செய்வாரான்னு தெரியல!’’ என்றார் பரமசிவம்.
‘‘சரி, போய்ப் பேசித்தான் பார்க்கறோமே!’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள் அவர்கள்.

இரண்டு நாள் கழிந்தது. ஆபீஸில் தன் பக்கத்து சீட்டில் இருந்த ராமநாதனிடம் பேச்சுக் கொடுத்தார் பரமசிவம்.
‘‘ராமநாதன், உங்க மகளைப் பொண்ணு பார்க்க வந்தாங்களே... நல்லபடியா முடிஞ்சுதா?’’
‘‘ஆமாங்க! அம்பது பவுன் நகை, அம்பதாயிரம் ரொக்கம்னு பேசி முடிச்சிட்டோம்!’’

பரமசிவத்துக்கு ஆச்சரியம். எல்லா லோனையும் இழுத்துப் போட்டுக்கொள்பவருக்கு, இவ்வளவு சீர் செய்ய முடிந்தது எப்படி? அவர் சிந்தனையைக் கலைப்பது போல ராமநாதன் சொன்னார்.

‘‘ஆபீஸ்ல அப்பப்ப கிடைக்கிற லோன்களை எடுத்து, நகைகளா வாங்கி வச்சது இந்த சமயத்துல உதவுச்சு. இப்ப அந்த லோன் காசெல்லாம் இருந்தாலும் இவ்வளவு நகை வாங்க முடியுமா சொல்லுங்க?’’
பரமசிவத்துக்கு பட்டென்று உறைத்தது.