வீகம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை எப்போதும் விரும்புகிறவர் நீங்கள். நகைச்சுவைப் பேச்சும், எள்ளலுமாக எல்லோரையும் கவர்வீர்கள். ராசிநாதன் புதனாக இருப்பதால் அவ்வப்போது கொஞ்சம் சீரியஸ் ஆவீர்கள். ஆனாலும் உங்கள் மன உறுதியை யாராலும் குலைக்க முடியாது. நீறு பூத்த நெருப்புபோல இருப்பீர்கள். கொள்கை வேறுபாடு இருந்தாலும் நட்புக்காக குலம், இனம், மதம் தாண்டிப் பழகுவீர்கள். பணம் பண்ணும் திறமை உங்களுக்குக் குறைவுதான். ஆனாலும், பின் வயதில் நிறைய சம்பாதிப்பீர்கள்.
‘‘எல்லா விஷயங்களிலுமே ஒரு கன்ட்ரோல் வேணும்’’ என்று சுற்றியுள்ளவர்களை அவ்வப்போது கட்டுப்படுத்துவீர்கள். எந்த வேலையை எடுத்தாலும் ‘இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்...’ என்று சரி செய்து கொண்டே வருவீர்கள். சிறிய விஷயங்களுக்குக் கூட முழுத்திறனையும் உபயோகிப்பீர்கள். எதற்கெடுத் தாலும் தயங்குவதால், கேட்டுப் பெறவேண்டிய விஷயங் களைக் கூட விட்டுவிடுவீர்கள்.
உங்கள் ராசிநாதனான புதன் ஒரு யூக கிரகமாகவும் இருப்பதால், மற்றவர்களின் கோணத்திற்கு மாறாக நீங்கள் யோசிப்பீர்கள். அவ்வளவு எளிதாக பலவீனங்களை வெளிக்காட்ட மாட்டீர்கள். ஆனால், அடுத்தவர்கள் எங்கு சறுக்குவார்கள் என்பதைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களோடு பேசுபவர்களுக்கு சாதாரணமாக இரண்டு மூன்று டிப்ஸ் கொடுப்பீர்கள். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதற்குப் பயன்படுவதுபோல விஷயங்களைச் சொல்வீர்கள். உங்களின் பூர்வ புண்ய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இவர்தான் உங்களுக்கு எல்லா நல்லதுகளையுமே செய்யப் போகிறார்.
உங்களின் லக்னத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். இப்படி லக்னாதிபதியாக புதன் வருவதால் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். ‘‘ரொம்ப பிரஸ்டீஜ் பார்ப்பாரு’’ என்பார்கள் உங்களை. அதேபோல சென்சிடிவ்வாக நீங்கள் இருப்பதால், சட்டென்று கோபமுகம் காட்டுவீர்கள். ஏதாவது ஒரு சிந்தனை உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும். எதைப் பேசினாலும், எந்தச் செயலை செய்தாலும் சரிதான், ஒருமுறைக்கு பத்து முறை யோசிப்பீர்கள். அதே நேரத்தில், சீண்டினால் சீறிப் பாய்வீர்கள். சின்னச் சின்ன அவமானங்கள் கூட வரக் கூடாது என்று ஜாக்கிரதையாக இருப்பீர்கள். செய்த வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் கவலைப்படுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமை பெற்றவர்களாக புதன், சுக்கிரன், சனி போன்றோர் வருகின்றனர். உங்களின் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் சரிதான்... இந்த மூன்று கிரகங்கள் நினைத்தால் எல்லாமே சந்தோஷமாக மாறும். அதில் முதலாவதாக புதன் வருகிறார். நான்காம் இடம் என்கிற சுக ஸ்தானாதிபதியாக புதன் வருகிறார். உங்களின் சொந்த ஜாதகத்தில் புதன் கெடாமல் வலிமையாக இருந்தால், புத்திக் கூர்மை மிக்கவராக இருப்பீர்கள். அசாத்தியமான ஞாபக சக்தி இருக்கும். சில மணி நேரங்களே தூங்கினாலும் சோர்வு இல்லாமல் காரியமாற்றுவீர்கள். சிறுகதை, நாவல், இலக்கியம் என்று ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பீர்கள். பிரபலமானவராக வலம் வருவீர்கள். சுக்கிரனோடு புதன் சேர்ந்திருந்தாலோ, அல்லது சுக்கிரனின் நட்சத்திரத்தில் புதன் அமர்ந்திருந்தாலோ உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் எளிதாகக் கிடைக்கும். மிக முக்கியமாக வீடு, வாசல், சொத்து சுகத்தோடு நிம்மதியாக வாழ்வீர்கள்.
உங்களின் லக்னாதிபதியான புதன், சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாயோடு சேர்ந்திருந்தாலோ, செவ்வாயின் பார்வை பெற்றிருந்தாலோ, அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ போராட்டமான வாழ்க்கைதான். எதுவுமே முதல் முயற்சியில் முடியாது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். எதிர்மறை எண்ணங்களால் மனம் சூழப்பட்டிருக்கும். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவதும், சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் குழந்தைபோல கோபப்படுவதுமாக இருப்பீர்கள். இந்த புதன் கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தாலோ, ஏழு அல்லது பத்தில் அமர்ந்திருந்தாலோ, திருமண வாழ்வு நிம்மதியில்லாமல் போகும். ஆனாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி புதன் உங்களுக்கு நல்லதையே செய்வார். சூழ்நிலைக் கைதியாக புதன் சிக்கிக் கொண்டாலும், ஒரு ஓரத்தில் கருணை கொப்பளிக்கத்தான் செய்யும்.
உங்கள் ஜாதகத்தில் புதன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை... அவரை பலப்படுத்த நடைமுறை வாழ்வில் சிலவற்றை மேற்கொள்ளுங்கள். உணவில் பச்சைப் பயறு, சுண்டைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை உங்களுக்குள்ளாகவே தேக்கி வைத்துக் கொள்ளாமல் நாலு பேருக்கு சொல்லிக் கொடுங்கள். அதை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். ஆரம்பக் கல்வியை போதித்த ஆசிரியருக்கு இயன்றதை செய்யுங்கள். தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கு உதவுங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். திருநங்கைகளுக்கு இயன்ற அளவு உதவுங்கள். புதன் தசை, புதன் புக்தி, புதன் அந்தரம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, 5, 14, 23 போன்ற தேதிகளில் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அடுத்ததாக சனி பகவான் உங்களுக்கு பாக்கியாதிபதியாக - அதாவது ஒன்பதாம் இடத்திற்கு உரியவராக - வருகிறார். அதே சமயம் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். இதனால் அலைச்சலைக் கொடுத்து ஆதாயத்தை அதிகரிக்கச் செய்கிறார். தாமதப்படுத்தினாலும் தரமானதைத் தருவார். ஏமாற்றத்தை அவ்வப்போது அளித்தாலும், நல்ல மாற்றத்தை அள்ளித் தருவார். இப்படி நேர்மறை, எதிர்மறைப் பலன்களை அவர் அளிக்கிறார். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருப்பின், தந்தையாருடனான உங்களின் நட்பு பலமாக இருக்கும். உங்களின் முதல் ரோல் மாடலே தந்தையார்தான். அதுமட்டுமில்லாது வற்றாத தனத்தையும், செல்வத்தையும் இந்த பாக்கிய ஸ்தானம் நிர்ணயிப்பதால், எப்போதும் வங்கிக்கணக்குகளில் கணிசமான சேமிப்பு இருக்கும்.
பயணங்கள் நிறைந்த பணியை நீங்கள் செய்தீர்களானால், அது சனிக் கிரகத்தை வலுப்படுத்தும். நீங்கள் வியாபாரம் செய்பவராயின் வெளிநாடுகளோடு வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் நல்லது. உள்ளூர் வியாபாரத்தை விட வெளிநாடு வியாபாரம்தான் நல்லது. உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான்... அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி, 8, 17, 26 ஆகிய தேதிகள், சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தரும். உங்கள் ஜாதகத்தில் சனியை பலப்படுத்த முதியோர்களுக்கு உதவுங்கள். சாலை விபத்தில் சிக்கிக் கொள்வோருக்கு உதவுங்கள். வேலையின்றித் தவிப்பவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். தக்காளி, எள்ளுருண்டை, நல்லெண்ணெய், மாங்காய், கத்தரிக்காய், அத்திக்காய், கருணைக் கிழங்கு. சேப்பங் கிழங்கு, கருப்பு திராட்சை என்று உண்ணுங்கள். ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு உதவுங்கள். உங்கள் ஜாதகத்தில் சனி எப்படி இருந்தாலும், வலிமையோடு உங்களுக்கு உதவுவார்.
எந்த ஜாதகமாக இருந்தாலும் சரிதான். அது நன்றாக இருப்பதற்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகவும் முக்கியமாகும். உங்களுக்கு எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களில் சுக்கிரனும் ஒருவர். சுகம் தர ஒரு சுக்கிரன் போதுமே என்பார்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கெடாமல் அல்லது பலவீனமாக இல்லாமல் இருந்தாலே போதும். ஏனெனில், இவர்தான் பிரபல யோகாதிபதி. மேலும் குழந்தை பாக்கியத்தையும் அளிக்கிறார். திடீர் அதிர்ஷ்டத்தை இவரால்தான் உங்களுக்குக் கொடுக்க முடியும். நிலம், நீர் வீச்சு என்று பெரிய பண்ணையமாக இருக்க வைப்பதெல்லாம் சுக்கிரனின் சாகசங்களாகும். பெரிய மனிதர்களின் தொடர்பைக் கொடுப்பார். விரைவாக வீடு வாங்க வைப்பார். சுக்கிரன் நன்றாக இருந்தால் நல்லவர்களுடைய சேர்க்கை தானாக வந்து சேரும். ஏமாற்றமில்லாத வாழ்க்கை அமையும். தர்ம காரியங்களில் ஈடுபட வைப்பார். உயர்ரக வாழ்க்கை, உயர்ரக வாகனம் போன்றவற்றை அருளுவார். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் குருவோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது குரு பார்வை பெற்றிருந்தாலோ, சுக்கிரன் கொஞ்சம் திணறித்தான் உதவுவார். ஆனால், எப்படியாவது உதவிக் கொண்டே இருப்பார்.
சுக்கிரன் எப்படியிருந்தாலும் சரிதான்... நடைமுறையில் சுக்கிரனை பலப்படுத்துங்கள். காதல் திருமணம் செய்தவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவுங்கள். முட்டைகோஸ், காலி பிளவர், சோம்பு போன்றவற்றை அவ்வப்போது ருசி பாருங்கள். மாதுளம்பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழைப் பெண்ணின் திருமணத்தில் உங்களால் முடிந்த அளவு உதவுங்கள். எப்போதும் சுக்கிரனின் அருள் வேண்டுமெனில் வெள்ளி ஆபரணங்களை அணியுங்கள். உங்களுக்கு எந்தத் தசை நடந்தாலும் அதில் சுக்கிர புக்தியோ, அந்தரமோ இருக்கும் நேரத்தில் நல்ல விஷயங்களை முன்னெடுக்கலாம். அதேபோல பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களிலும், 6, 15, 24 போன்ற தேதிகளிலும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
இப்படியாக உங்களுக்கு யோகாதிபதிகளாக சுக்கிரன், சனி, புதன் என்று மூவரும் வருகிறார்கள். ஆனாலும், அதில் முக்கியமாக சுக்கிரனும் சனியும்தான் முடிந்தவரை உதவுகிறார்கள். சனி பகவான் பாக்கியாதிபதியாகவும், ஜீவனாதிபதியாகவும் வருகிறார். ஆனால், சுக்கிரன் அனுபவப் பாடங்களை தந்து நிறைய கற்றுக் கொடுப்பார். புதன், சனி உங்களைக் கைவிட்டாலும், சுக்கிரன் ஒருகாலும் உங்களை விடமாட்டார். அவர் ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தசையோ, புக்தியோ, அந்தரமோ வரும்போது அள்ளிக் கொட்டுவார். உடலிலும், முகத்திலும் பொலிவைக் கூட்டி, சட்டென்று செல்வாக்குள்ள மனிதராக மாற்றி விடுவார்.
எல்லாவற்றையும் தாண்டி கிரகங்களை சரி செய்யும் ஆற்றலும், திறனும் இறைவனிடமே இருப்பதால் இறுதியில் கிரகங்கள் இறைவனிடமே சரணடைகின்றன. எனவே, நம்மால் ஆன பரிகாரங்களை செய்து கொண்டிருக்கும்போதே இறைவனின் பாதங்களை நினைத்து சரணடைவோம். அப்படி நீங்கள் செல்ல வேண்டிய தலமே திருத்தங்கல் ஆகும். இத்தலத்திலுள்ள நின்ற நாராயணப் பெருமாளையும், செங்கமல தாயாரையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் பாதையில் அமைந்துள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)