வடிவேலு இடம் காலியாகத்தான் இருக்கு!





‘‘அண்ணே, ‘ஹீரோ கருணாஸ்’னு எழுதிப்புடாதீங்க. கதைக்கு கருணாஸ் தேவைப்பட்டால்தான் அப்படி நடிப்பான். ஹீரோவா பண்ணினாலும் காமெடிதான் நம்ம அடையாளம். அதுல எந்த சமரசமும் பண்ணிக்கிறதில்லை. ‘கழுகு’ படத்தில் நம்ம கேரக்டர் ரொம்ப பெயர் வாங்குச்சு. எல்லோரும் குறிப்பிட்டு எழுதியிருந்தாங்க. நடிக்கத்தானே வந்திருக்கேன். எங்கேயும், யார்கிட்டேயும், எப்படியும் நடிக்கத் தயார். அவ்வளவுதான்!’’ - நெஞ்சில் கை வைத்து பணிவுடன் பேசுகிறார் கருணாஸ்.

‘‘இப்ப பாருங்க ‘சந்தமாமா’ன்னு படம் பண்றேன். குழந்தைகள் முதற்கொண்டு எல்லோருக்கும் பிடிக்கும். அடுத்து ‘ரகளபுர’மும் சிரிப்பு வெடிதான். வெகுஜனங்கள் மாதிரித்தான் நானும். இன்னிக்கு காலையில ஒரு போன். ‘தம்பி. நா வி.எஸ்.ராகவன். என்னைத் தெரியுமா? உங்க படம் ‘சந்தமாமா’ பார்த்தேன். நல்லாயிருக்கு. சிரிப்பு சிரிப்பா இருக்கு. காமெடியனா உங்கள பார்த்திருக்கேன். முழு நேர காமெடி செஞ்சு இப்பத்தான் பார்க்கிறேன். நல்லா வரணும்’னு ஆசீர்வாதம் பண்றார். தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரி போன்... ‘அக்காவுக்கு ரொம்ப சந்தோஷம்டா. மேடையில சின்னப் பயலா பாடிக்கிட்டு இருப்பே. இவ்வளவு வளர்ந்து நடிகன் ஆகிட்டியே’ன்னு ஆச்சரியப்படுறாங்க.

பத்து வருஷமா இருக்கேன். நம்பர் ஒன், டூ, த்ரீன்னு எதையும் பார்க்கிறதில்லை. யதார்த்தமா இருக்கேன். அதுதான் சினிமாவில் மைனஸ் ஆக இருக்கலாம்னு தோணுது. இயக்குநர்கள், நடிகர்கள் பின்னாடி பெரிய உறவுகள் வச்சுக்கிறது கிடையாது. 2003ல் ஒரு தடவை ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். எனக்கே சங்கடமா இருந்தது. ஒருநாளைக்கு மூணு லட்சமா? நமக்கு என்னடா தகுதின்னு யோசிச்சேன். அதற்குப் பிறகு அப்படி நாள்கணக்குல சம்பளம் வாங்கினதில்லை. பின்னாடி ஆற அமர உட்கார்ந்து அதே புரொட்யூசர்ஸ் நம்மளை டி.வியில் பார்க்கும்போது திட்டுவாங்க. அண்ணே... ரஜினி சிங்கப்பூர் போய் நோயில் படுத்தாரு. ரசிகர்கள் ஆசீர்வாதத்தில் எழுந்து வந்துட்டாரு. கமல் சார் ‘விஸ்வரூபம்’ வெளியிட முடியாமல் தவிச்சாரு. அதே ரசிகர்கள் எண்ணத்தில் நல்லா வெளிவந்து வெற்றிகரமா ஓடுது. யார் வாயிலும் இருக்கக் கூடாது. இப்படியெல்லாம் பணம் வாங்கினா நமக்கே நல்லதில்லைண்ணே! நிறைய பேருக்கு இது தெரியலை.
என் அறிவுக்கு எட்டியவரை ஜனாதிபதியாகூட இருந்திடலாம்... ஆனால் மத்தவங்களை சிரிப்பு மூட்றது கஷ்டம். நான் காமெடியனா இருக்கிறது கடவுள் எனக்குப் போட்ட பிச்சை. ஹைவேஸில் நுங்கு வித்து பிழைச்சவன் நான். அப்பவும், இப்பவும் என்கிட்டே மிஞ்சிக் கிடக்கிறது பாட்டும், காமெடியும்தான். எழவு வீடு, கச்சேரி, பாப் சிங்கர்னு மெள்ளமா கிராஃப் ஏற ஆரம்பிச்சது. பாலா அண்ணன் ‘லொடுக்கு பாண்டி’ன்னு தாயம் போட்டு ஏத்திவிட்டார். கடவுள் புண்ணியத்துல பாடம் படிச்சு, அனுபவங்களை கத்துக்கிட்டேன். இப்ப சரியா இருக்கேன்.’’
‘‘கறுப்பா பிறந்தது இன்னும் வருத்தமா இருக்கா?’’



‘‘அது நம்ம ப்ளஸ் பாயின்ட்டுங்க. நம்ம எல்லோருமே ஐயனாரு வம்சம்தான். என்னா, கையில் அருவா கிடையாது. இது நம்ம இனத்தோட அடையாளம்ண்ணே. சும்மா இருக்கும்போது நான் பவுடர் கூட போடுறது கிடையாது. எனக்கு மண்டேலாவைப் பிடிக்கும். அவர் கறுப்புதான். வில் ஸ்மித்தை கொண்டாடுவேன். அவரும் கறுப்புதான். இவங்க கறுப்பை விடவா நாம!’’
‘‘சந்தானம் இப்ப முன்னணியில் இருக்கிறார்...’’

‘‘புதியவங்க வரட்டும். திறமை இருந்தா நிலைச்சு நிப்பாங்க. இங்கே எல்லாமே நேரம்தான். கஷ்டப்பட வைக்கும்... சுருட்டும்... கோபுரத்துல கொண்டு வைக்கும். இந்த சினிமா எல்லாமே செய்யும். பாலா அண்ணே என்னை ‘லொடுக்கு பாண்டி’ ஆக்கலைன்னா வேற யாரோ ஒருத்தர் லொடுக்கு பாண்டி. நான் எல்லோருக்கும் வாழ்த்துதான் சொல்வேன். ஆடாம இருந்தால் இங்கே அசையாமல் இருக்கலாம். அவ்வளவுதான். யாருமே இங்கே 10 லட்சம், 20 லட்சம் வாங்குறோம்னு பெருமைப்படலாம். ஆனால் மக்கள் மனசில் இடம் பிடிக்கிறதுதான் முக்கியம். ‘நல்லவன்’னு அவங்க சொல்லணும். சந்திரபாபு, நாகேஷ் மாதிரியானவங்க நின்னு அரசாண்ட இடம்ணே இது. அவங்களுக்கு குணச்சித்திரம், சோகம், காமெடி எல்லாம் வரும்ணே. என்னையும், வடிவேலுவையும் பார்த்தாலே சிரிப்பு வருதுன்னு சொல்றாங்க. அது போதும்ணே எனக்கு...’’
‘‘வடிவேலு இரண்டு வருஷமா நடிக்கலை. எப்படி உணர்றீங்க?’’



‘‘ஈடு செய்ய முடியாத இழப்புண்ணே. தமிழ் சினிமாவிற்கே பெரும் துயரம். அருமையான கலைஞன். என்ன தப்பு பண்ணிட்டார்னு நடிக்கலைன்னு தெரியலை. எங்க வீட்டில் அத்தனை பேரும் வடிவேலு ரசிகர்கள். நான் மட்டும்தான் விவேக் ரசிகன். எப்பேர்ப்பட்டவனையும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சிரிக்க வைக்கிற மனுஷன் வடிவேலு. அவர் இடம் அப்படியே காலியாகத்தான் இருக்கு. அவர் இடத்திற்கு இப்ப யாராலும் வர முடியாது. ‘வின்னர்’ எல்லாம் இப்ப யாரும் பண்ண முடியுமா! சம்பளம், மரியாதை எல்லாம் எப்படி அவருக்கு எகிறிச்சு. ‘மச்சான் நீ கேளேன்’னு எங்கே போனாலும் என்னையே கலாய்க்கிறாங்க. அவருக்கெல்லாம் எவ்வளவு இருக்கு. நல்லா மீண்டு வரட்டும்.’’
- நா.கதிர்வேலன்