‘‘சினிமாவில் வராத கதைன்னு ஒண்ணு இருக்கா? ஆனாலும் வசீகரமா இங்கே அத்தனை பேரும் சித்திரம் தீட்டிக்கிட்டுதானே இருக்காங்க? அப்படி ரகளையா நாமளும் தீட்டிப் பார்க்கலாமேன்னு ஆசைப்பட்டேன். இதோ ‘கண் பேசும் வார்த்தைகள்’னு கலர்ஃபுல் ரங்கோலியா என்னுடைய ஓவியம் வந்துட்டு இருக்கு. நல்ல கதைகளும், புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரி புதியவர்களுக்கு மூலதனம். சினிமாவிற்கும் எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுப் பூர்வமான விளையாட்டு’’
- வர்ணம் தீட்டும் லாவகத்தோடு வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுகிறார் டைரக்டர் பாலாஜி. செந்திலையும், இனியாவையும் இனிக்க இனிக்க காதல் செய்ய வைத்துக் கொண்டிருக்கும் இவர், டைரக்டர் ஷங்கரிடம் பயின்றவர்.
‘‘காதல் என்னிக்குமே சலிக்காது. காதல் செய்யற ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் ஈரமும், கனிவும், அன்பும் நிறைஞ்சிருக்கிறதா நம்பறவன் நான். இப்பத்தான் எஸ்.எம்.எஸ் யுகம். நினைச்ச செகண்ட்ல பிடிச்ச பொண்ணுக்கு ரகசியமா மனசை அனுப்பிடுறோம். இப்பவும் ஒரு எஸ்.எம்.எஸ் போய்ச் சேர்ந்து, ரிப்ளை வர்ற அந்த நாலஞ்சு செகண்ட் இடைவெளியில் மனசு தவிக்குதே... அதுதான் காதல். அந்தத் தவிப்பும், துடிப்பும், இத்தனை யுகங்கள் தாண்டியும் மாறலை. என்னைக் கேட்டா, மனுஷங்க முன்னாடி கடவுள் வெச்ச முதல் கேள்வியும் கடைசிக் கேள்வியும் காதல்தான்.’’
‘‘கொஞ்சம் ‘கண்பேசும் வார்த்தைகளி’ன் கதை சொன்னால் என்ன?’’

‘‘நம்ம எல்லாரையும் சூழ்நிலை தான் தீர்மானிக்குது. நாம லட்சியங்களை ஏந்தி நிற்கலாம். ஆனால், அதுக்கும் சூழ்நிலை வழிவிடணும். திருவாரூரில் ஆரம்பிச்சு, சிங்கப்பூர் போய் மறுபடியும் இங்கேயே வந்து நிற்கும் என் கதை. கோபம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், அன்பு என ஒரு குடும்பத்தின் அத்தனை உணர்ச்சிகளும் இருக்கிற மாதிரி கதைப் பின்னல் இருக்கு. முதல் பாதி வரைக்கும், ‘அடடா... இது நாம வாழற வாழ்க்கையாச்சே’ன்னு நீங்க வியந்து பார்க்கிற விஷயம்... அடுத்த பாதி ‘அச்சச்சோ... இப்படி நாம வாழ்ந்து பார்க்கத் தவறிட்டோமே!’ன்னு ஏங்க வைக்கிற விஷயம். நம்ம எல்லோருக்கும் எங்கோ அனுபவப்பட்ட பிரியமான ஒரு கதையாவது இருக்கும். அப்படி எனக் குள்ளே இருந்தது இந்தக் கதை.’’
‘‘டி.வி பிரபலம் செந்திலை கூட்டி வந்துட்டீங்க...’’
‘‘ஆமா, என் கதைக்கு அம்சமா பொருந்தின பையன். சினிமாவை நல்லா புரிஞ்சுக்கிட்டு வந்தார். ஒவ்வொரு படத்திற்கும் கொண்டு செல்ல நாயகனா ஒருத்தர் வேணும். ‘துப்பாக்கி’யைப் பாருங்க, விஜய் ‘நச்’னு பொருந்தினார். அதிலேயே ஜனங்களைக் கொண்டு வர்ற விஷயம் அமைஞ்சு போச்சு. இந்தக் கதைக்கும் செந்தில் நல்ல பொருத்தம். இப்ப இருக்கிற புதியவர்களுக்கு சிரமங்கள் புரிஞ்சிருக்கு. மனுஷனோட சந்தோஷம், துயரம் ரெண்டுமே உறவுகள்தான். அதை செந்தில் நல்லா புரிஞ்சி செய்திருக்கிறார்.’’
‘‘எப்படியிருக்காங்க இனியா?’’

‘‘கெண்டைக்கால் வரைக்கும் சேலையைத் தூக்கிக் கட்டிக்கிட்டு, புழுதி படிஞ்ச கால்களோட, மல்லிப்பூ வச்சுக்கிட்டு கிராமத்து பொண்ணாகவே நடிச்சவங்க. அவங் களை சிங்கப்பூருக்கு கொண்டுபோய் புது இனியாவா மாத்திருக்கோம். கொஞ்சமா இளமை இருக்கு. ஆனால் கண்ணியம் தவறாத காட்சிகளா வச்சிருக்கேன். சும்மா ரெண்டு பாட்டு, காதல்னு வந்திட்டு போற இடமில்லை அவங்களுக்கு. நிஜமாகவே இனியாவுக்கு அதிகப்படியான மரியாதை கிடைக்கும்.’’
‘‘ஷங்கர்கிட்டே இருந்து வந்தவர்களுக்கு பாடல்கள் மேலே எப்பவும் அக்கறை இருக்கும்...’’
‘‘ஆமா! ‘எஸ்’ பிலிம்ஸ் தயாரிச்ச ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஏதோ ஒரு விதத்தில் நான் இருந்திருக்கேன். ஷங்கரோட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறதும், தெரிஞ்சுக்கிறதும் நிறைய கத்துக்கொடுக்கும். முதல் நாள் ஷூட்டிங்கில் கூட எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. தமன், ஜி.வி.பிரகாஷ், ஜோஷ்வா ஸ்ரீதர்னு அத்தனை பேரின் மியூசிக் டெமோ சி.டியையும் ஷங்கரோட சேர்ந்து கேட்டு இருக்கேன். ‘தடதட’ன்னு பெஸ்ட்டை கண்டுபிடிக்கிற அவர் தினுசு எனக்கும் கொஞ்சம் பிடிபட்டது. ‘சமந்த்’னு மிக இளைஞன். பாடல்களில் உயிரைக் கொடுத்திருக்கார். விவேகாவின் பாடல்களில் அவ்வளவு உயிர் இருக்கு. ஷங்கர் சாரைப் பொறுத்தவரை அவர்கிட்டே முதலில் கத்துக்க வேண்டியது டைமிங். ஒரு நாளையும் வீணாக்கியதில்லை அவர். சினிமா சிந்தனையை மறந்தது கிடையாது. இன்னும் வெற்றியின் அடையாளத்தை சுமந்துக்கிட்டு தலைப்புச் செய்தியா அவர் இருக்கிறதுக்கும் அதுதான் காரணம்.’’
- நா.கதிர்வேலன்