முத்தம்
பிஞ்சுப்பாதம் தொட்டு
முத்தமிடத்தான்
பாய்ந்துவந்தது
புரியாத நான்தான்
பின்னுக்கிழுத்தேன் குழந்தையை
அலை அடிக்கிறதென
- கொ.மா.கோ.இளங்கோ
உதவி
ஓவியனுக்கு உதவ
உண்டியலாகவே மாறி
வீதியோரமாக
மல்லாக்கப் படுத்திருந்தார்
கடவுள்
- ஆர்.பி.ஜெயச்சந்திரன்
சோறு
நிலா வராத நாளிலும்
சாப்பிட்டன
நிலா காட்டி சோறூட்டாத
அம்மாக்களின் குழந்தைகள்
- பே.மாரிசங்கர்
மொழி
ஒவ்வொரு குழந்தையும்
ஒவ்வொரு புதிய மொழியை
உருவாக்குகின்றது
- ஏ.மூர்த்தி
பிரிதல்
மயங்கிச் சரிந்தான்
கண் விழிக்கையில்
அவன் உடலைக் காணோம்
- ப.மதியழகன்
வீண்
விதை நெல்லொன்றை
வீசிவிட்டுப் போன பறவை
அறிந்திருக்கவில்லை,
அது விழுந்த இடம்
கான்க்ரீட் தளமென்பதை.
- செல்வராஜ் ஜெகதீசன்