ஒலியின் வழி உள்ளூர்க்காரர்களுக்கு உற்சாகமூட்டுகிற சாமி மாமாதான், படிக்கிற அண்ணன்களின் ஹீரோ. கலைந்த தலையுடன் வயரும் டெஸ்டருமாக அலைகிற மாமாவின் வீட்டிலிருக்கும் ஒலிபெருக்கிகளே அதற்கு காரணம். கிருஷ்ணன் சவுண்ட் சர்வீஸின் ஓனரான மாமா, எப்போதும் பரபரப்பாகவே இருப்பவர். ஓனர் என்கிற பதம், மாமாவுக்கு ஓவராகவே பிடிக்கும். பெரும் வியாபாரிகளை அல்லது தொழிலதிபர்களை ‘ஓனர்’ என்று அழைக்கிறவர்கள், தன்னையும் அப்படிச் சொல்கிறபோது அவர் அடைகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை.
மாமா இந்த ஒலிபெருக்கி நிலையத்தை ஆரம்பிக்கும் முன், பாலன் சவுண்ட் சர்வீஸில் வேலைக்குப் போனார். அதாவது சைக்கிளில் ஒலிபெருக்கிகள் மற்றும் டியூப் லைட்டுகளைக் கட்டிக்கொண்டு பாப்பான்குளம், மன்னார்கோயில், வாகைகுளம், தாட்டாம்பட்டி, கோட்டவிளைபட்டி, சிவசைலம் உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்றதில் தொழில் கற்றுக்கொண்டார். பந்தலில் ஏறி டியூப்லைட்டுகளை கட்டுவது, மின் கம்பங்களில் குழாய்களைக் கட்டுவது, கோயில் கொடை என்றால் சீரியல் பல்புகள் பொருத்தப்பட்ட கட்-அவுட்களை அமைப்பது, ரகசியமாகக் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது உள்ளிட்ட வேலைகளைத் தெரிந்துகொண்ட பின், தனிக் கடை போட்டார் மாமா.
ஊரில் ஏற்கனவே இருந்த மூன்று ஒலிபெருக்கி நிலையங்களுடன் நான்காவதாக வந்து சேர்ந்தது மாமாவின் ‘கிருஷ்ணன் சவுண்ட் சர்வீஸ்’. தன் வீட்டின் முன்பகுதி குடிலை சவுண்ட் சர்வீஸுக்காக ஒதுக்கி இருந்தார். கதவைத் திறந்து உள்ளே சென்றால் எங்கெங்கும் இறைந்துகிடக்கும் எலெக்ட்ரிகல் பொருட்களும் வயர்களும். அதனுள் உட்கார்ந்து புது பாடல்களை மாமா போட ஆரம்பித்தால், பக்கத்து வீட்டு அண்ணன்கள் ஸ்டெப் கட்டிங் தலைமுடியை நான்கைந்து முறை வாரி விட்டபடி வந்துவிடுவார்கள் ஸ்பாட்டுக்கு. பக்கத்து கடையில் மாமாவுக்கு ஒரு கோலி கலரை வாங்கிக் கொடுத்துவிட்டு அருகில் உட்கார்ந்துகொள்வார்கள். அவர்களது நோக்கம், பாட்டைக் கேட்டவாறே அக்கம்பக்கத்து திண்ணைகளில் பீடி சுற்றும் தாவணிப் பெண்களை நோட்டமிடுவதுதான்.
இதோடு இசையை கரைத்துக் குடித்தவர்கள் மாதிரி விவாதம் நடக்கும். இதில் பாலு என்கிற பாலசுப்ரமணியம் ஒரு படி மேலே போய், எம்.எஸ்.வி. மற்றும் இளையராஜாவின் பாடல் ராகங்கள் பற்றி எங்கோ படித்ததை அல்லது கல்லூரியில் யாரோ சொன்னதை ஒப்பித்துக் கொண்டிருப்பான். ‘இந்த ஊர்ல இருந்துட்டு எசைய பத்தி இப்டி பேசுதானெ?’ என்று ஆச்சரியப்படுவார்கள் மற்றவர்கள்.
மாமாவின் எதிர்வீட்டில் குடியிருக்கும் பலவேச நம்பியார், ‘‘ஏல, ‘சரஸ்வதி சபதம்’ வசனத்த போடுவியா? இத போட்டுட்டு இருக்கெ. காது ஜிவ்வுங்கு’’ என்பார். அவர் அருகில் இருக்கும் செல்லம்மா பாட்டி, ‘‘ஏன் சரஸ்வதி சபதம்? ‘திருவிளையாடல்’ வசனத்தை போடச் சொல்லும்’’ என்றதும் தாத்தா அவளை முறைப்பார். ‘‘போற காலத்துல, ரெண்டும் நம்ம உயிரை வாங்குது பாரேன்’’ என்கிற சாமி மாமா, ‘‘ராத்திரியாவட்டும் போடுதெம்’’ என நழுவுவார். இசைத் தட்டின் வழி வருகிற பாடல்களைக் கேட்டுவிட்டு மாமாவின் மனைவி, ‘‘சத்தத்தை கொறச்சு வய்யிங்க. புள்ள முழிச்சிரப் போவுது. தெனமும் இத சொல்லணுமாக்கும்’’ என்று முறைத்துவிட்டுப் போவாள்.
‘‘முழிச்சா முழிக்கட்டும். மெதுவா வச்சு கேட்டா, கேட்ட மாரியா இருக்கு?’’ என்று சொல்லி விட்டு பிறகு மனசு கேட்காமல் குறைப்பார்.
உள்ளூரில் சொந்த பந்தங்களுக்குள் சடங்கு, காது குத்து, கல்யாணம், கொடை விழா போன்ற வற்றை கேள்விப்பட்டால் போதும்... தானாகவே ஆஜராகி உரிமையோடு மைக் செட்டை கட்ட ஆரம்பித்துவிடுவார். வன்னியநம்பி மகள் பெரிய மனுஷி ஆனதில் தலைக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக வெளியூரில் இருந்து ஆட்கள் வந்திருந்தார்கள். விஷயம் கொஞ்சம் லேட்டாக மாமாவுக்குத் தெரியவர, கொதித்துப் போய், ‘‘எம் மச்சான் புள்ள பெரிய மனுஷி ஆயிருக்கு. சொல்லவே இல்லயே’’ என்றபடியே மைக்செட்டை கட்டி விட்டு பாடல் போட்டுவிட்டார். வந்திருந்த சொந்தங்களிடமும், ‘‘இப்டி பண்ணிட்டானே?’’ என்று ஆவலாதி வேறு. ‘‘ஆயிரஞ் சொல்லு. நா என்ன வேண்டாதவனாவே? இந்த மைக் செட்டுக்கு என்னத்த கேட்ற போறேன்? மச்சான் புள்ளக்கி ஓசிக்கு செட்டு கட்ட மாட்டனா?’’ என்று வீராப்பாய் சொல்லிவிட்டு வந்தார்.
பலசரக்குக் கடை உலகநாதன் தான், ‘‘என்ன சின்னய்யா, இப்டி ஊரு பூரா ஓசிக்கு செஞ்சிட்டிருந்தனா, ஒம்ம புள்ளக்கி என்னத்த சேக்க போறேரு?’’ என்றான்.
‘‘நா என்ன கோட்டிக்காரனா? இப்பம், ரெண்டு மணி நேரத்துக்கு கட்டிருக்கேன். இதுக்கு துட்டு அதிகமா கேக்க முடியாது. அடுத்த மாசம் சடங்கு வப்பாம்லா. அப்பம் அமுக்கிர வேண்டிய தாம். ஏம் முந்திக்கிடுதம்னா, அடுத்தாள்ட்ட அவனுவ போயிரக் கூடாதுலா?’’ என்று கறை படிந்த முன்பற்களைக் காட்டி தொழில் ரகசியம் சொன்னார். ‘‘வெவரமாதாவே பண்ணுதேரு’’ என்றான் உலகநாதன்.
என்னதான் விவரமாக தொழில் செய்தாலும், மாலை ஆறு மணிக்கு மேல் லோவோல்டேஜ் பிரச்னை இம்சை பண்ணும் ஊரில். அந்நேரத்தில்தான் இளம்பெண்களிடமிருந்து மாமாவுக்கு துண்டு சீட்டு வரும். தங்களுக்குப் பிடித்த பாடல்களை எழுதி, ஒலிபரப்புமாறு சீட்டுகளின் படி வேண்டுகோள் வைப்பார்கள். அந்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத கவலைதான் மாமாவுக்கு. பிறகு நேயர் விருப்பம், மறுநாள் காலையில்தான்.
தொழில் போட்டிகளை சமாளிக்க பிற சவுண்ட் சர்வீஸ்காரர்கள் வாங்கி வைத்திருக்கும் கட்சி சின்னங்கள், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி கட்-அவுட்கள், அம்மன் கட்-அவுட்கள் போன்றவற்றை மாமாவும் வாங்க வேண்டியிருந்தது. சீரியல் பல்புகள் பொருத்தப்பட்ட இந்த கட்-அவுட்கள் இரவில் ஜொலிக்க ஆரம்பித்தால் வாய்பிளந்து பார்ப்பார்கள். கெந்தி கெந்தி நடக்கும் காட்டாங் கணேசன், ஒரு நாள் இரவு போதையில், சீரியல் பல்பில் சிரித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு மாலை போட பந்தலில் ஏறிவிட்டான். அவனை அடக்கி இறக்குவதற்குள் பட்ட பாடு பெருங்கதை.
வெளியூர்களில் செட் கட்டுவது என்றால் மாமாவுக்கு குஷி வந்து விடும். சைக்கிளில் மைக் செட் போய் இறங்கியதும் ஒத்தாசைக்கு உள்ளூர் இளசுகள் ஓடிவருவார்கள். குழாயைப் பிடிக்க, ஆம்ளிபயரை வைக்க, டியூப் லைட்டுகளை இறக்க என்று தூள் பறக்கும். பிறகு குழாய்களை, ‘‘எங்க வீட்டு மச்சில வையுங்க. அந்த வேப்பமரத்து மேல வையுங்க’’ என்று ஆளாளுக்கு பாசம் காட்டுவார்கள். இந்த திடீர் பாசங்களில் திக்குமுக்காடிப் போவார் மாமா. சிகரெட், பீடி, கலர், சில நேரங்களில் பிராந்தியும் ஓசியில் கிடைக்கும். இதற்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டார் என்று ஒரு கோஷ்டி வந்து ஒரு பாடலைப் போடச் சொல்வார்கள். ‘‘நாங்க பெண் வீட்டுக்காரங்க’’ என்று ஒரு கோஷ்டி வரும். மாறி மாறி அவர்களுக்கும் இவர்களுக்குமாக பாடல் போட்டு கல்யாண வீட்டில் ரகளையை ஏற்படுத்திய சம்பவங்களும் மாமாவுக்கு உண்டு. ‘‘நம்மள போட்டு பிராணன வாங்குதானுவோ. அதான், மாப்பிள்ள வீட்டயும் பொண்ணு வீட்டயும் மல்லுக்கு நிக்க வச்சுட்டேன்’’ என்பார்.
சிவசைலம் தாண்டி, சுடலை மாடசாமி கோயில் கொடைக்கு செட் கட்டியிருந்த மாமாவுக்கு ராத்திரி ரகசியமாக மூன்று வீட்டிலிருந்து கறிச்சோறு வந்திருந்தது, யாரும் அறியாதது. அந்த மாதிரி விஷயங்களில் அப்பாவி மாதிரி காண்பித்துக் கொள்வார் மாமா.
வேலை இல்லாத நாட்களின் மாலை நேரத்தில் மொட்டை மாடியில் படுத்தபடி சோகப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிற மாமாவைப் பார்க்க பாவமாக இருக்கும். சொந்தத்துக்குள் காதலித்து, அது நிறைவேறாமல் தோல்வியைச் சந்தித்தவர் என்கிற தகவல், ஸ்டெப்ட் கட்டிங் அண்ணன்களுக்குத் தெரியும். மாமா இப்படி சோகப் பாட்டு போடுகிறார் என்றால், அவரின் முன்னாள் காதலி ஊருக்கு வந்திருக்கிறாள் என்று அர்த்தம். இந்நேரத்தில் பக்கத்து வீட்டு அண்ணன்கள், மாமாவின் சோகத்தில் பங்கெடுப்பதற்காக முகத்தை அழுவது போல வைத்தபடி தரையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருப்பார்கள். ‘எங்க ஊர் ராசாத்தி’யில் இருந்து, ‘பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்’ பாடல் நான்கைந்து முறை ரிப்பீட் ஆகிக்கொண்டே இருக்கும். ஒலியின் வழி மிதக்கும் குரலில், மாமா தன்னை சுதாகராகவும், அவரது முன்னாள் காதலியை ராதிகாவாகவும் பாவித்துக்கொண்டிருப்பார். ‘இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பார்ப்போம்’ என்ற வரி வரும்போது மாமா நிஜமாகவே அழுதுவிடுவார். அதைப் பார்த்துக் கொண்டே பார்க்காத மாதிரி அண்ணன்களும் அழுகைக்கு முயலுவார்கள். பாடல் முடிந்ததும் ‘‘ஏலெ, நா லவ்வு ஃபெயிலியரு. ஒங்களுக்கென்னல, அழுதிட்டிருக்கியோ’’ என்றதும்தான் ‘ஒரு தலைக்காதல் கூட நமக்கு இல்லையே’ என்கிற ஞாபகம் அவர்களுக்கு வரும்.
ஒருநாள் தெருத் தோழிகளுடன் ராமராஜன் படம் பார்த்துவிட்டு வந்தாள் மாமாவின் மனைவி. அதில் பாட்டு பாடி பால் கறப்பது மாதிரி, ‘‘நீங்க நல்ல பாட்டா போடுங்க. இது பால் தருதா பாக்கென்’’ என்று கன்னுக்குட்டி இல்லாத பசுவிடம் பால் கறக்க முயற்சி செய்தாள். மாமா காதல் சோகத்தில், ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’யை போட்டுவிட, மடிக்கு கையைக் கொண்டு போன அவளை பின் கால்களால் எத்தித் தள்ளியது மாடு. பாட்டுக்கும் மாட்டுக்கும் சம்பந்தமில்லை என்பதை உணராத அவள், வேறு பாடலைப் போடச் சொன்னாள். கடுப்பான மாமா, ‘‘பொம்ம கன்னுக்குட்டி செஞ்சுதான் பால் கறக்கணும். பாட்டைப் போட்டெல்லாம் கறக்க முடியாது’’ என்று சொல்லி புரிய வைப்பதற்குள் நொந்து நூலாகிவிட்டார்.
மாமாவின் கடை இப்போதும் இருக்கிறது. காதைப் பிளக்கும் சத்தங்களைத் தரும் ஒலிபெருக்கி குழாய்கள் அவரிடம் இல்லை. மாறாக நான்கைந்து ஸ்பீக்கர்கள் இருக்கின்றன. பாடலைக் கேட்க எப்போதும் அங்கு கூடியிருக்கும் திண்ணையில் தலையணை வைக்கப்பட்டிருக்கிறது. பாடல் போட்டால், சீரியல் பார்ப்பது தடைபடுவதாக அக்கம் பக்கத்துப் பெண்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். ‘‘ஒரு காலத்துல நா பாட்டுப் போட்டா’’ என்று அவர் சொல்ல ஆரம்பித்தால், கேட்பதற்குத்தான் ஆளில்லை.
(வாசம் வீசும்...)