மாலை சூடும் அரும்புகள்





‘‘எலேய், மாசாணம்... ஒன்னோட முதல் சம்சாரம் வனப்பேச்சி பெரிய மனுஷி ஆயிட்டாடா!’’
- தனது அந்தச் சிறிய வாடகை வீட்டின் பட்டக சாலையில் உட்கார்ந்தபடி செய்தித்தாளில் கண்களை மேய விட்டிருந்த மாசாணம், அந்தக் குரல் கேட்டு, தலையை வீசிப் போட்டுத் திரும்பினான்.

அவனது சொந்த கிராமமான அன்னஞ்சியில் வசித்து வருகிற அப்பா வழி உறவு காத்தாயி கிழவி. பரவசமும், இழப்பின் அவஸ்தையுமான இருவேறு முகப் பிரதிபலிப்போடு அவள் வேகமாய் வீட்டுக்குள் நுழைந்து அவனருகில் உட்கார்ந்தாள்.

அவனுக்கு இதயத் துடிப்பின் வேகம் இரட்டிப்பானது. கசப்பான அனுபவம் ஒன்று மீண்டும் நினைவுக்கு வந்ததில், நெஞ்செல்லாம் கடும் அமளி. இணக்கமில்லாத மன வழுக்கில், ‘‘அப்டீயா... அதுக்கென்ன இப்போ?’’ என்றான். வார்த்தைகளில் அலட்சியம்.
‘‘என்னடா படவா சொல்ற? அதுக்கென்ன இப்போவா? அவ யாரு... ஆயிரந்தேன் இருந்தாலும் ஓஞ் சம்சாரமில்லியா..!’’ - கோபச் சிலிர்ப்போடு குமுறினாள் கிழவி.
‘‘என்ன... பொஞ்சாதியா? மடத்தனமா உளறாம ஒஞ்சோலியப் பார்த்துக்கிட்டுப் பேசாம போ கெழவி’’ - அவளுக்கு முன்பாக வலது கையை நரம்புகள் துருத்தித் தெரியுமளவுக்கு நீட்டிப் பேசினான் அவன்.

அவளும் விடவில்லை. வீரியத்துடன் பெருங்குரலெடுத்துக் கத்தினாள். ‘‘எதுக்குடா இப்டி கிறுக்குப் பய கணக்கா பேசுற..? அன்னிக்கி நம்ப குலதெய்வக் கோயில்ல அம்புட்டு சனங்க முன்னால அந்தப் பச்ச மண்ணு கழுத்துல தாலியக் கட்டிப்புட்டு, இப்ப அவள யாருன்னே தெரியாத கணக்கா பேசுறியே. ஏதோ காலக் கெரகத்தால நீங்க ரெண்டு பேரும் பிரியும்படியா ஆயிருச்சு. அதுக்காக அந்தக் கல்யாணம் பொய்யின்னு ஆயிருமா?’’ - கிழவியின் சுருங்கிச் சிறுத்த கண்களில் நீர் பெருக்கெடுத்தது. நா தழுதழுத்தது.

அவளது இந்த அனுதாப வார்த்தைப் பீறிடல், அவனுக்குள் பெரும் கலவரத்தையே உண்டு பண்ணியது. ஜீரணிக்கத் திணறியது இதயம். வார்த்தைக் கசையடிகளால் நீர்த்து நிலை
குலைந்தது நிம்மதி. தவிப்பும், பயமுமாக வாசலைப் பார்ப்பதும், கிழவியின் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பதுமாக இருந்தான். குரலை வெகுவாகத் தணித்தபடி, ‘‘இதப் பாரு கெழவி... நா வேணாம்னு சொல்லியும், எல்லாருஞ் சேர்ந்து வற்புறுத்தி அந்தப் பாவத்தச் செய்ய வெச்சுட்டு, எம் மேல பழிய போடறது நல்லா இல்ல. நீ கத்துறத நிறுத்து. ஏஞ் சம்சாரம் மார்க்கெட்டுக்குப் போயிருக்கா. அவளுக்கு இதெல்லாந் தெரியாது. தெரிஞ்சதுன்னா நா இவள ஏமாத்தி ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டதா நெனச்சு, ஏங்கூட வாழப் புடிக்காமப் போய்ருவா’’ என்றவாறு இரண்டு கைகளைக் கூப்பிக் கும்பிட்டான்.

கிழவி முகத்தில் கண்ணீர் கிழித்துப் போயிருந்த ஈரக்கோட்டின் தடயத்தைத் துடைத்துக் கொண்டாள். ‘‘ஆமாடா மாசாணம்... ஒன்னச் சொல்லியுங் குத்தமில்ல. என்ன போதாத காலமோ... மாலையும் கழுத்துமாவே உங்களைப் பிரிச்சு உன்னை செயிலுக்கு அனுப்பிட்டாய்ங்க. அவள விடுதிக்கு அனுப்பிட்டாங்க. நீ அவ கழுத்துல கட்ன தாலியக் கூட அவுத்து வீசிட்டாய்ங்களாமே!’’ என்று ஆதங்கத்தோடு சொல்லி நிறுத்தி, பின் பெரு மூச்சிறைத்து விட்டு மீண்டும் தொடந்தாள்.

‘‘வனப்பேச்சி வயசுக்கு வந்ததைக் கூட அந்த விடுதியில வேல பாக்குற ஒரு புள்ளதேஞ் சொல்லிச்சு. அப்படியே பஸ்ஸேறிப் போயி அவளப் பாத்தேன். துரும்பாக் கெடந்தா. ‘எனக்கு இங்க இருக்கவே புடிக்கல பாட்டி. ஏதாச்சும் வெஷத்தக் குடிச்சுச் செத்து போயிறலாம்னு தோணுது. என்னை எதுக்கு இங்க அடைச்சு வச்சிருக்காங்க. நா அப்டி என்னதான் தப்புப் பண்ணிட்டேன்’னு அழுதா. என்ன நடந்துச்சுன்னே புரிபடாம தேம்பினா. நாந்தேன் ‘ஒண்ணுங் கவலைப்படாத தாயீ. சீக்கிரமே ஒனக்கு நல்லது நடக்கும்’னு சொல்லித் தேத்தி, அஞ்சாறு வடையும் அரை கிலோ சேவும் வாங்கிக் குடுத்துட்டு அப்டியே திருப்பூரு பஸ்ஸப் புடிச்சு இங்க ஓடியாந்தேன்’’ என்று அவள் சொல்லி முடிக்க, மாசாணத்தின் மனைவி கோதை காய்
கறிப் பையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்த காத்தாயி கிழவி, ‘‘மாசாணம், இதுதேன் ஓஞ் சம்சாரமா?’’ என்று போலிப் புன்னகையுடன் அவள் கையைப் பிடித்து பக்கத்தில்
உட்கார வைத்து கொண்டாள்.
இனியும் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காத மாசாணம், மெதுவாக எழுந்து போய் வீட்டின் பின்பக்க முருங்கை மர நிழலில் உட்கார்ந்தான். நடந்து முடிந்து விட்டிருந்த கசப்பான சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைக்கும்போதே தொண்டையில் ஆசிட் இறங்குவது போலான உயிர்த் திணறல். ‘கோதைகிட்ட இந்தக் கெழவி, வனப்பேச்சி பத்தி வத்தி வெக்கப் போறதும், அதனால கோதை சண்டை போட்டு பஞ்சாயத்து வச்சு, விஷயம் விவாகரத்து வரைக்கும் போகப் போறதும் நிச்சயம்’ என்று மனசு முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கல்யாணம் பற்றிய நினைப்பேயின்றி ஊரையொட்டியுள்ள மலைக்கு விறகெடுக்கப் போவதும், அதை விற்று வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் தருவதுமாக இருந்த மாசாணத்திடம் ஒரு நாள் ‘‘மாசாணம்... ஒனக்கு கல்யாணம்டா. பொண்ணும் முடிவாயிருச்சு’’ என்றாள் அம்மா போதும்பொண்ணு.
அப்போதே அவனுக்கு வயது முப்பத்தியிரண்டு. அம்மாவின் வார்த்தைகளில் அவனுக்கும் உடன்பாடிருந்திருக்க வேண்டும். ‘‘அப்டீயா? ஆமா, பொண்ணு எந்த ஊர்ல பாத்துருக்க?’’ - ஆவலுடன் கேட்டான்.

‘‘இந்த ஊருதேன்...’’
‘‘இந்த ஊர்ல யாரு... எனக்குத் தெரியாம?’’
‘‘அதேன்டா நம்ப ஒறவுக்காரரு காசியண்ணன் மக வனப்பேச்சி. நீயும் அவள அடிக்கடி பாத்திருப்ப...’’
அவள் சொல்லி முடிக்கவும் உச்சத்தில் நின்ற அவனது கல்யாண ஆவல், நொடிப் பொழுதில் சரிந்தது.
‘‘நீ யாரச் சொல்றம்மா? கிடை ஆடுகள மேய்க்கிற கூலி வேலைக்குப் போயிக்கிட்டிருந்துச்சே... அந்தச் சின்னப்புள்ள வனப்பேச்சியவா?’’ - உயிரற்று வந்தன வார்த்தைகள்.
‘‘அவளேதான்டா. இது நானா எடுத்த முடிவு இல்ல. அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டி கொண்டாடுற நம்ப குல தெய்வத் திருவிழா அன்னிக்கு வயசுக்கு வராத சின்னப்புள்ள ஒருத்திக்கும், அவ முறைப் பையனுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சு நேர்த்திக்கடனை நிறைவேத்துறது ஒனக்குத் தெரியாதா..? இந்தத் தடவ சீட்டெழுதிப் போட்டதுல ஓம் பேரும், வனப்பேச்சி பேரும் வந்துருக்குடா. அதனால ஊரே உன்னை மெச்சிக் கெடக்கு’’ - அம்மா முகத்தில் அப்படியோர் பிரகாசம்.
அவனுக்கு மயக்கமே வந்து விட்டது. ‘‘என்னம்மா சொல்ற? ஒனக்கு புத்தி மழுங்கிப் போச்சா? அந்தப் புள்ளைக்கி மிஞ்சிப் போனா பதினொண்ணோ, பன்னெண்டோ வயசிருக்கும். இருபது வயசு வித்தியாசம்’’ என்று சீறினான்.
‘‘அதனால என்னடா? இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ளாற வயசுக்கு வந்துடுவா. அப்புறம் எல்லாஞ் சரியாப் போய்ரும். நம்ப பரம்பரைல நெறைய கல்யாணம் இப்டி நடந்துருக்குது. அவுங்கல்லாம் செத்தா போனாங்க? இது நம்ப சனங்களோட ஊர்க் கட்டுப்பாடு; சாமி உத்தரவு. மீற முடியாது!’’
‘‘அப்டி மீறினா?’’

‘‘நாஞ் செத்துப் போய்ருவேன்!’’ - அம்மாவின் தீர்க்கமான வார்த்தைகளைக் கேட்டு கிடுகிடுத்துப் போனான் மாசாணம். தலையே போகிற துயரங்கள் வந்தபோதிலும் கூட அவள் உச்சரிக்காத வார்த்தைகள் அவை.
‘‘இந்தக் கல்யாணத்துக்கு நீ
ஒத்துக்க லேன்னு சொன்னதுக்கப்புறம் நம்ப பங்காளிக எல்லாருஞ் சேர்ந்து ஊர விட்டே நம்பள ஒதுக்கி வெச்சுருவாங்க. அந்த அவமானத்துல உசுர வுட்றதுக்கு, இப்பவே செத்துப் போறது ஒசத்தியில்லீயா..!’’ என்று கதறிவிட்டு அவள் சமையலறைக்குள் போனாள். பீதியுடன் அவளைப் பின்தொடர்ந்த மாசாணம், ‘‘எனக்காக யாரும் உசுர வுட வேணாம். நீ சொன்னபடியே நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’’ என்றான்.
இந்த விஷயம் காட்டுத்தீயின் கதியில் சில நூறு வீடுகளை மட்டுமே உள்ளடக்கிய அந்தக் குக்கிராமம் பூராவும் பரவி விட்டிருந்தது. அடுத்தநாள் அவன் வீதியில் நடந்தபோது, ஏராளமான விசாரிப்புகள். சகோதரி முறை உள்ளவர்களை விட, மாமன், மச்சான் உறவுமுறை உள்ளவர்கள்தான் அதிகம் வார்த்தைகளில் சீண்டினார்கள். ‘‘அட்யேய், ஓங்கல்யாணத்தன்னிக்கி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித் தர்றேன். ஓஞ் சம்சாரத்துக்குக் குடு’’ என்று உரிமையுடன் கிண்டலடித்தனர்.

அவமானமாக இருந்தது. காத்தாயி கிழவியிடம் போய் முறையிட்டான். ‘‘இது என்ன பாட்டி வழக்கம்? கொஞ்சமாச்சும் வயசுப் பொருத்தம் வேணாமா? அந்தப் பச்சப் புள்ளையக் கல்யாணம் பண்ணி... குடும்பம் நடத்தி... என்ன கூத்து இது? எங்கிட்டாச்சும் ஓடிட்டாக் கூடத் தேவல.’’

‘‘அப்டியெல்லாம் சொல்லாதய்யா. நாங்கூட இதே போல பெரிய மனுஷி ஆகுறதுக்கு முன்னாலதேன் ஒங்க தாத்தனுக்கு வாக்கப்பட்டேன். நாங்க புள்ள குட்டி பெத்து வாழலீயா..? அதுவும் ஒங்க ஆத்தா ரோஷக்காரி... நீ ஓடிப்போயிட்டீயின்னா, சொன்னது கணக்கா செத்தே போய்டுவா.’’ என்று சமாதானம் சொல்லி அனுப்பினாள் கிழவி.

சில தினங்களில் குலதெய்வக் கோயில் திருவிழாவில் மாசாணத்துக்கும், சிறுமி வனப்பேச்சிக்கும் திருமணம் முடிந்து, மணக்கோலத்தில் வீட்டிற்கு வந்து இருவரும் உறவுகள் புடை சூழ உட்கார்ந்திருந்தார்கள். கல்யாணம் பற்றி காவல் நிலையத்துக்கு யாரோ புகார் தர, இரண்டு ஜீப்களில் வந்திறங்கிய போலீஸ்காரர்கள், சிறுமியை ஏமாற்றி முறைகேடாகத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி மாசாணத்தை சிறைக்கு அனுப்பினர். வனப்பேச்சியை பக்கத்து நகரத்திலிருந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஆறு மாதக் கடுங்காவல். தண்டனை முடிந்தும் கூட மாசாணத்துக்கு சொந்த ஊர் போக அவமானமாக இருந்தது. திருப்பூருக்கு வந்து, நூற்பாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான். வனப்பேச்சியோ, அம்மாவோ, கிராமத்துப் பங்காளிகளோ இனி வேண்டாம் என்றுதான் எவருக்கும் தெரிவிக்காமல், தன்னுடன் வேலை பார்த்த பெண் தொழிலாளியான கோதையை, அவளது பெற்றோர் சம்மதத்துடன் எளிமையாக திருமணம் செய்துகொண்டிருந்தான்.

மனைவியிடமோ, அவளது பெற்றோரிடமோகூட தான் சிறையில் இருந்த விஷயத்தை இவன் சொன்னதில்லை. ‘வனப்பேச்சி பத்தித் தெரிஞ்சு போச்சுன்னா ஒரு நிமிஷமாவது கோதை நம்ப கூட குடும்பம் நடத்துவாளா’ என்ற திகில், ஏற்கனவே தினம் தினம் அவனை வதைத்துக் கொண்டிருந்தது. இப்போது காத்தாயி கிழவி வந்து வனப்பேச்சியின் பரிதாப நிலை பற்றிக் குமுறிக் கொட்டியிருந்ததால் இந்த பதைபதைப்பு இரட்டிப்பாய்எகிறிவிட்டிருந்தது.

‘‘என்னங்க, முருங்கை மரத்து நெழல்ல ஒக்காந்து அப்டி என்ன மணிக்கணக்குல யோசனை?’’ - கோதையின் குரல் கேட்டு ஒருவிதக் கலக்கத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் மாசாணம்.
அவள் முகத்தில் இறுக்கமும், உருக்கமும் இரண்டறக் கலந்திருப்பது தெரிந்தது. ‘‘எனக்குத் தெரிஞ்சிருச்சு...’’
‘‘என்ன தெரிஞ்சிருச்சு?’’ - அவன் குரலில் அதிர்ச்சி.
‘‘ஒங்களுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் நடந்து, அதனால நீங்க ஜெயிலுக்குப் போயிட்டு வந்தது... அந்தப் புள்ள இப்ப அரசாங்க காப்பகத்துல இருக்குறது... ரெண்டு நாளைக்கு முன்னாலதான் அவ பெரிய மனுஷியாகி இருக்காங்கிறது... எல்லாமே தெரிஞ்சிருச்சு. காத்தாயி பாட்டி எல்லாத்தையும் சொல்லிருச்சு’’ என்றாள்.
கட்டிக் காத்த ரகசியம் கசிந்து விட்டதால், கொட்டும் தேளாக அவள் அவதாரம் எடுக்கப் போவதாக பரிதவிப்பு. நாருடன் பூவாகி மணத்திருந்த கோதை, நீருடன் மண்ணெண்ணெயாய் ஒட்டாமல் விலகிப் போய்விடுவாளோ என வெலவெலப்பு.

‘‘இதப் பாரு கோத, எம்மேல ஒரு தப்புங் கெடையாது...’’ என்று சட்டென்று எழுந்தவாறு கெஞ்சல் தோரணையில் அவன் விளக்க முற்பட்டான்.
கண்களில் தாரை தாரையாய் நீர்ப்பெருக்கெடுத்து வழிய, வீட்டுக்குள் ஓடிப்போய் சிறிய தோள்பை ஒன்றில் ஏதேதோ எடுத்து வைத்துக்கொண்டு அதே வேகத்தில் வெளியில் போக ஆயத்தப்பட்டாள் அவள்.

‘‘அழுகையும், கோவமுமா எங்க கௌம்பிட்ட கோத? ஒங்க அம்மாகிட்டேயா?’’ மாசாணம் அவளை மறிப்பது போல குறுக்கிட்டுக் கேட்டான்.
“இல்ல... வனப்பேச்சிகிட்ட! பெரிய மனுஷியாகி அநாத கணக்காயிருக்குற அந்தப் புள்ளக்கி ஆறுதல் சொல்லிட்டு, அப்டியே அவள நம்ப வீட்டுக்கே அழைச்சிட்டு வர்றதுக்கும், காலம்பூராவும் அவள நம்பளோடவே வெச்சுக்கிறதுக்கும் அந்த காப்பகத்துல பேசப் போறேன். சக்களத்தியா இல்ல... நான் பெறாத புள்ளையா!’’ - தீர்க்கமான வார்த்தைகளில் சொல்லிவிட்டு வீதியிலிறங்கி கால்களை வீசிப்போட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி கோதைநடந்தாள்.
புயலாய் எதிர்பார்த்த ஒன்று பனியாய்த் தூறி சிலிர்க்கச் செய்தது போல பிரமிப்பு. அவளை ஆச்சரியம் மேலிட பார்த்தவாறிருந்தான் மாசாணம்.