ஆறாம் விரல்





சுண்டு விரலுக்கு அடுத்ததாக ஒரு ஆறாவது விரல்... நீளமாக, கிட்டத்தட்ட மோதிர விரல் மாதிரியே வளர்ந்திருந்தது தர்மலிங்கத்துக்கு. அவலட்சணமான அந்த ஆறாவது விரலால்தான் எத்தனை கேலி, கிண்டலை சந்தித்திருப்பான்.

அது மட்டுமா? அந்த அதிர்ஷ்டமில்லாத விரலால் இதுவரை ஏழு இன்டர்வியூக்களுக்குச் சென்றும் தர்மலிங்கத்துக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த முறை முழுக்கை சட்டை அணிந்து, அந்த விரல் தெரிந்து விடாமல் இருக்க கையை ‘பேன்ட்’ பைக்குள் போட்டுக்கொண்டு போனான்.
மேனேஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சட் சட்டென்று பதில் தந்தான். ‘‘ஓகே, நீங்க போகலாம்’’ என்றதும் எழுந்து நடந்தான்.
‘‘மிஸ்டர் தர்மலிங்கம்’’ என்ற மேனேஜரின் குரலில் திரும்பினான்.
‘‘உங்களுக்கு இடது கையில் ஆறு விரல்களா? சொல்லவே
இல்லையே...’’
‘‘ஆமாம் சார்! வெட்கமாயிருந்தது... அதனால்தான்...’’

‘‘யூ ஆர் அப்பாயின்ட்டெட்!  கண்டக்டர் வேலைக்குத்தான் இந்த இன்டர்வியூ. அதுக்கு இது ‘அடிஷனல் குவாலிஃபிகேஷன்’. விரல் இடுக்குகளில் ரூபாய் நோட்டுகளை ரகம் பிரித்து செருகிக் கொண்டு, அவசரம் அவசரமாக டிக்கெட் கொடுக்க வேண்டிய நெரிசலான டவுன் பஸ்ஸில் வேலை. உங்களால இன்னும் ஒரு விரல் இடுக்கிலும் நோட்டை செருகிக் கொள்ள முடியும்’’ என்று அதிகாரி சொல்ல. அந்த அதிர்ஷ்ட விரலை முத்தமிட்டபடி நடந்தான் தர்மலிங்கம்.