சுட்ட கதை சுடாத நீதி





அவனுக்கு நிரந்தரமில்லாத வேலை. சமையல்காரன் என்றாலும் அவ்வளவு ருசியாக சமைக்கத் தெரியாது. வேலையை சுத்தமாகச் செய்வான்; ஆனாலும் ஏதோ ஒரு விஷயத்தில் சொதப்பி விடுவான். எங்கு வேலைக்குச் சேர்ந்தாலும், சில நாட்களில் வெளியேற நேரும். இதனால் வேறு வழியின்றி வீட்டுக்குப் பக்கத்திலேயே இரண்டு ஹோட்டல்களைப் பிடித்து வைத்திருந்தான். அங்கு ரெகுலர் சமையல்காரர்கள் இல்லாத நேரத்தில் இவனுக்கு அழைப்பு வரும். போய் சமைப்பான்.

அன்றும் அப்படித்தான்... ஒரு ஹோட்டலில் அழைப்பு வந்து போயிருந்தான். ஒரு இளம் தம்பதி கார்லிக் சிக்கன் ஆர்டர் செய்தார்கள். அவசரமாக ரெடி செய்து, மல்லி இலை, வெங்காயம் எல்லாம் தூவி அலங்கரித்து அனுப்பினான். ‘‘உப்பு ஓவராக கரிக்கிறது’’ என்றார்கள். பதற்றத்தோடு அதை சர்வரிடமிருந்து வாங்கி, உப்பைக் குறைக்க காரம் சேர்த்து மறு அலங்காரம் செய்து அனுப்பினான்.
‘‘ஐயோ! இவ்வளவு காரம் போட்டால் யார் சாப்பிடுவார்கள்?’’ என்று கோபத்தோடு அவர்கள் கத்த, திரும்பி வந்தது சிக்கன். புளித் தண்ணீரும் உப்பும் சேர்த்து எண்ணெயில் வதக்கினான். அது வேறு ஏதோ போல வந்தது. பூண்டு சேர்த்து சமாளித்து, இன்னும் பிரமாதமாக அலங்கரித்து அனுப்பினால், ‘‘இவ்வளவு ஆறிப் போய் இருக்கே... என்னய்யா இது?’’ என கோபித்துக் கொண்டு எழுந்தே போய் விட்டார்கள்.

‘‘இன்னைக்கு நீ சமைச்சது போதும்’’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார் மேனேஜர். வெறுத்துப் போய் திரும்பும்போது அடுத்த ஹோட்டலில் அவசரமாக போனில் கூப்பிட்டார்கள்.
இவன் நுழையும்போதே மேனேஜர் சொன்னார்... ‘‘முதல்ல ஒரு பிளேட் கார்லிக் சிக்கன் ரெடி பண்ணு! நல்லா இருக்கணும். அவங்க பக்கத்து ஓட்டல்ல சாப்பிடப் போய், சரியில்லாம இங்க வந்திருக்காங்க...’’ ஏதோ உறுத்த, அவன் உள்ளே எட்டிப் பார்த்தான். அந்த ஹோட்டலில் கோபித்துக் கொண்டு எழுந்துவந்த அதே தம்பதி.