கனவு





பெண்ணைப் பார்த்ததும் குமரனுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மா ருக்மணியின் காதருகே சென்று, ‘‘அம்மா, இந்தப் பொண்ணையே பேசி முடிச்சுருங்கம்மா!’’ என்றான் கிசுகிசுப்பாக.

அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
‘‘ஏண்டா, உன் கனவுல ஒரு அழகான பொண்ணு வர்றதா சொல்லி, அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி எல்லா பொண்ணுங்களையும் தட்டிக் கழிச்சே. இந்தப் பெண்ணை மட்டும் எப்படிப் பிடிச்சது?’’

‘‘ஆமாம்மா, என் கனவுல வந்த பொண்ணு உருவம் இந்த சுதா மாதிரியேதான் இருந்துச்சி. இவதான் என் கனவுப் பெண்!’’ - தீர்க்கமாகச் சொன்னான் குமரன்.

பெண் பார்க்கும் படலம் முடிந்தது. குமரனின் வீட்டார் பூரண சம்மதம் தெரிவித்தனர். தரகர் திரும்பிப் பார்க்க, ‘‘இரண்டு நாளில் மேற்கொண்டு பேசலாம்’’ என்றார் பெண்ணின் அப்பா.
மாப்பிள்ளை வீட்டார் சென்றதும், ‘‘எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம்மா!’’ என்றாள் சுதா தன் அம்மாவிடம்.

‘‘ஏண்டி? பையனுக்கு நல்ல உத்யோகம். வசதியான குடும்பம். அவங்க அம்மாவும் பார்க்க நல்லவங்களா தெரியறாங்க. அப்புறம் என்ன?’’

‘‘இல்லம்மா, என் கனவுல அடிக்கடி ஒரு முரட்டு உருவம் வந்து மிரட்டுறதா சொல்வேனே... அந்த உருவம் மாதிரியே இவர் இருக்கார். அதான்...’’ என்றாள்.

‘‘உன் மனசுக்கு இப்படித் தோணினா, எதுக்கு ரிஸ்க்? இந்த வரனை வேண்டாம்னு சொல்லிட வேண்டியதுதான்’’ என்றாள் சுதாவின் அம்மா.