அநாதை




மஞ்சுளாவுக்கு சந்தோஷத்தில் தலை, கால் புரியவில்லை. காலையில் அவள் கணவன் சந்திரன், யாரிடமோ நல்ல முதியோர் இல்லம் பற்றி செல்போனில் விசாரித்தபடியே கிளம்பிப் போனான்.

வெகு காலமாக அவள் சொல்லி வரும் விஷயம்தான்... ‘தன் மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டால், அவள் தொந்தரவு இல்லாமல் அப்புறம் நிம்மதியாக இருக்கலாம்.’ இத்தனை நாள் அதற்குக் காது கொடுக்காமல் இருந்தவனுக்கு, இப்போதுதான் ‘புத்தி வந்தது’ என்று நினைத்துக் கொண்டாள். ஆனால், திடீரென அவன் எப்படி மனசு மாறினான் என்பதுதான் புரியாமல் குழம்பினாள்.வெளியில் போனவன் சந்தோஷமாக வந்தான்.

‘‘மஞ்சுளா! மேடவாக்கம் பக்கத்துல ‘இன்பம்’னு ஒரு இல்லம் இருக்கு. மாசச் செலவும் குறைவுதான். பெரிய கட்டிடம். நல்ல காற்றோட்டமா இருக்கு. அன்பாவும் பார்த்துக்கறாங்களாம். வாரத்துக்கு ஒரு தடவை டாக்டர் செக்கப்பும் இருக்காம்...’’
‘‘சூப்பர்ங்க... எப்ப உங்கம்மாவை அங்க சேர்க்கப் போறீங்க?’’
‘‘வாயக் கழுவுடி, விவரம் கெட்டவளே! ஊர்ல இருந்து ரெண்டு நாள் முன்னாடி உங்கம்மா எனக்கு போன் பண்ணியிருந்தாங்க. உன் தம்பியும் அவன் பொண்டாட்டியும் ரொம்ப கொடுமைப்படுத்துறாங்களாம். சரியா சாப்பாடு கூட போடறதில்லையாம். சதா திட்டறாங்களாம். ரொம்ப அழுதாங்க. அங்க இருந்து கஷ்டப்படறதை விட ஹோம்ல கௌரவமா இருக்கலாம்னு நான்தான் யோசனை சொன்னேன். நாளைக்கு அட்மிஷன் போடப் போறோம்!’’
மஞ்சுளாவின் காலடியில் மட்டும் ஒரு பூகம்பம் ஏற்பட்டது.