கமல் சொல்லிக் கொடுத்த கெட்ட வார்த்தை!





‘‘ஒரு திரைப்படம் எடுப்பதற்கு கேமரா எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கெமிஸ்ட்ரி. பொதுவா ஹீரோ, ஹீரோயின் இடையே  உள்ள கெமிஸ்ட்ரி பற்றித்தான் பேசுகிறோம். உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளிடமும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பது முக்கியம். கமலுக்கும் எனக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி இருக்கும்’’ என தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா.
‘‘கமலுடன் ‘மன்மத லீலை’ படத்தில் ஆரம்பித்து, நிறைய படங்களில் நடித்துள்ளேன். நாங்கள் இணைந்து நடிக்கும் படங்களில் காமெடி அவ்வளவு அருமையா ஒர்க்அவுட் ஆகும். அதுக்குக் காரணம், எங்க கெமிஸ்ட்ரிதான். ‘நெஞ்சங்கள்’, ‘ஊரும் உறவும்’, ‘கல்தூண்’ என்று மேஜர் சுந்தர்ராஜன் சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் தயாரித்து இயக்கிய ‘அந்த ஒரு நிமிடம்’ படப்
பிடிப்பில் எடுத்த போட்டோ இது. கமல்தான் படத்தோட ஹீரோ, ஊர்வசி ஹீரோயின். ஒரு க்ரைம் சீன் பற்றி கமலிடம் மேஜர் விளக்குவதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

இந்தப் படத்தில் ஒரு விசேஷம் இருக்கு. இது என்னோட விருகம்பாக்கம் வீடு. அப்போதான் புதுசா கட்டி கிரகப்பிரவேசம் பண்ணியிருந்தேன். ஷூட்டிங்கிற்காக கேட்டபோது என்னால மறுக்க முடியல. கிரகப்பிரவேசம் பண்ணி முதல் நாள் நடந்த ஷூட்டிங்கின் போதுதான் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்ததும், கமலுடன் சேர்ந்து நான் அடித்த லூட்டியெல்லாம் ஞாபகத்திற்கு வருது.

‘சகலகலா வல்லவன்’ படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தின் கேஷியர் எல்லாரையும் நக்கலடித்துக் கொண்டிருப்பார். அவரை வெறுப்பேற்ற நானும் கமலும் முடிவெடுத்தோம். அந்த நேரம் எங்களைப் பார்க்க வந்த சில்க் ஸ்மிதா, ‘கேஷியருக்கு நன்றி சொல்லணும். நல்ல தமிழ் வார்த்தைகளை சொல்லிக் கொடுங்க’ என்று கேட்டதுதான் தாமதம்... கெட்ட கெட்ட வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து, கேஷியரிடம் போய் சொல்லச் சொன்னோம். சில்க்கும் அப்படியே செய்ய, சில்க் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அழ ஆரம்பித்துவிட்டார் கேஷியர். சில்க் ஒன்றும் புரியாமல் திகைக்க, அப்புறம் நடந்த உண்மையைச் சொல்லி, இருவரையும் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தோம். மறக்கவே முடியாத ஜாலியான தருணம் அது!’’
நினைவோ ஒரு பறவை...
 அமலன்