வாஸ்து





‘‘சார், வீட்டு ஓனர் ஊர்ல இருந்து வந்துட்டாராம்... போலாமா?’’  புரோக்கர் ஹரியிடம் கேட்டார்.

‘‘சரி... போகலாம்!’’ என்று அவருடன் டூ வீலரில் கிளம்பினான்.

சுற்றிலும் இடம் விட்டு, நேர்த்தியாக காம்பவுண்ட் கட்டி நடுவில் மிக அழகாக இருந்தது அந்த வீடு. வாசலை ஒட்டிய தோட்டத்தில் பூச்செடிகள் அலங்கரிக்க, தோட்டத்தில் தென்னையின் காற்று தவழ்ந்தது. வெளியிலிருந்து பார்த்தபோதே ஹரிக்கு வீடு ரொம்பவும் பிடித்துப் போயிற்று. வீட்டு ஓனர் வரவேற்றார். உள்ளே கூட்டிப் போய் வீட்டையும் சுற்றிக் காண்பித்தார். ஆங்காங்கே வாஸ்துவுக்காக சிலைகள், படங்கள், மீன்தொட்டி என்று வீடு பக்காவாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

‘‘இன்டீரியர் மட்டுமில்ல தம்பி... வீட்டையும் வாஸ்து பார்த்துப் பார்த்து கட்டி இருக்கேன். எது எது எங்கே இருக்கணுமோ, கச்சிதமா அங்கதான் இருக்கும். தயங்காம வாங்கலாம்’’ என்றார் ஓனர்.
‘‘சார், வீடு பிடிச்சிருக்கு. புரோக்கர் ரேட்டைச் சொன்னார்... கொஞ்சம் இறங்கி வந்தா நல்லாயிருக்கும்!’’
‘‘சண் டே வாங்க... பேசுவோம்!’’
‘‘ஓகே சார்... ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?’’
‘‘கேளுங்க...’’
‘‘இவ்வளவு நல்ல வீட்டை ஏன் விக்கறீங்க?’’
சற்றே தயங்கிய வீட்டு ஓனர், பிறகு ‘‘ஓவர் கடனாயிருச்சி தம்பி’’ என்றார் முகத்தை சற்று இறுக்கமாக வைத்துக் கொண்டு!
மீன் தொட்டியிலிருந்து வாஸ்து மீன் ஒன்று அவரைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது ஹரிக்கு.