இயக்குநர் பாலா ஆபீஸ்தான் என் குருகுலம்!
‘‘மலையாள சினிமா எப்படி என் மனதுக்கு நெருக்கமோ அதே மாதிரி தமிழ் சினிமாவும் என் மனதுக்கு நெருக்கத்தைக் கொடுத்துள்ளது. அப்படித்தான் ‘சர்வபாரி பாலக்காரன்’,‘வணங்கான்’ தொடங்கி இப்போ ‘ரேபல்’ வரை நான் நடிக்கும் படங்கள் மனநிறைவைக் கொடுத்துள்ளது...’’ புன்னகையுடன் ஆரம்பித்தார் மமிதா பைஜு.
 எப்படி இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க?
எனக்கு தமிழ்அவ்வளவாக பேசத் தெரியாது. முடிந்தளவுக்கு தமிழில் பேச முயற்சிக்கிறேன். சின்ன வயசுல நிறைய தமிழ்ப் படம் பார்த்து, தமிழ் கத்துக்கிட்டேன்.அப்பா மாதிரி டாக்டராகணும் என்ற கனவுதான் இருந்துச்சு. எனக்கு டான்ஸ் நல்லா வரும். ஒன்பதாவது படிக்கும்போது ஸ்கூல் யூத் ஃபெஸ்டிவலில் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கினேன். அது செய்தியாக பேப்பரில் வந்துச்சு. அதைப் பார்த்துட்டுதான் மலையாள சினிமாவிலிருந்து அழைப்பு வந்துச்சு.
முதன் முதலாக கேமரா முன்னாடி நின்ற அனுபவம்?
அது ஓர் ஆச்சர்யம். சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் நடிக்க வந்தேன். எதுவுமே தெரியாமல் வந்தது ஒரு விதத்தில் நல்லதாகவும் போச்சு. ஏனெனில், சினிமாதான் என்னுடைய கனவாக இருந்து, நடிக்கப்போயிருந்தால் கொஞ்சம் டென்ஷன் இருந்திருக்கும்னு நெனைக்கிறேன். அப்போது, நான் பத்தாம் கிளாஸ் மாணவி. சினிமா பற்றி தெரியாததால் அங்கு என்னதான் நடக்கிறதுனு தெரிஞ்சுக்க நடிக்கப் போனேன். முதன் முதலில் கேமரா முன் நின்றபோது ஆர்வக்கோளாறு காரணமாக ஃபீல்ட் அவுட்டாகியெல்லாம் நடிச்சேன். எது சரி, எது தவறுனு தெரியலைன்னாலும் அது மகிழ்ச்சியைக் கொடுத்துச்சு.
தமிழில் உங்கள் முதல் படம் ‘வணங்கான்’. முதல் படத்திலேயே சூர்யா, பாலா என ஆளுமைகளுடன் வேலை செய்வோம்னு எதிர்பார்த்தீங்களா?
சினிமாவுக்கு புதுசா வர்றவங்க அந்த மாதிரி கனவிலும் நெனச்சுப் பாக்க முடியாது. எவ்வளவு வேகமாக வாய்ப்பு வந்ததோ அவ்வளவு வேகமாக படமும் என் கையைவிட்டுப் போயிடுச்சு. எதிர்பாராதவிதமாக அந்தப் படத்திலிருந்து நானும், சூர்யா சாரும் விலக வேண்டிய சூழ்நிலை உருவானது.
அந்தப் படத்தில் கிடைத்த அனுபவத்தை மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட ஐந்து மாதம் டிரெயினிங் கொடுத்தார். பாலா சார் இயக்கத்துல நாற்பது நாள் ஷூட் நடந்துச்சு. பாலா சாரிடமிருந்து நிறைய சினிமா நுட்பங்களை கத்துக்க முடிஞ்சது. பாலா சார் எனக்கு குரு மாதிரி. பாலா சார் ஆபீஸ்தான் என்னுடைய குருகுலம்.
லேங்வேஜ், ஆக்டிங், டயலாக் டெலிவரி என அடிப்படை சினிமாவை அங்கு கத்துக்கிட்டேன். நடிகையாக இல்லாமல் உதவி இயக்குநர் மாதிரி சாரிடமிருந்து சினிமா கத்துக்கிட்டேன். கேமரா முன்னாடி சரளமா நடிப்பது எப்படி என்பதை சாரிடமிருந்துதான் கத்துக்கிட்டேன். அது என்னுடைய கரியருக்கு பெரியளவில் உதவியிருக்கிறது. சூர்யாவிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
சூர்யா சாரைப் பார்த்துதான் புரொஃபஷனலாக இருக்கணும்னு முடிவு பன்ணினேன். ஃபேமிலி, சினிமா என எல்லாத்தையும் பிரமாதமாக ஆர்கனைஸ் பண்ணுவார். சிலபேரை பார்க்கும்போது அவர் மாதிரி வாழ்க்கை இருந்தால் நல்லா யிருக்கும்னு நினைக்கத் தோணும். சூர்யா சாரைப் பார்த்து அப்படி நெனைச்சுப்பார்த்திருக்கிறேன்.
‘ரேபல்’ படத்தில் உங்களுடைய ரோல் எப்படி இருக்கும்?
இது கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை. தமிழில் நான் நடிக்கும் இரண்டாவது படம். ஆனால், முதலில் ரிலீஸாகிறது. டைரக்டர் நிகேஷ் ரொம்ப கூல் பெர்சன். அவருக்கு மலையாளம் தெரியும் என்பதால் என்னால் டென்ஷன் இல்லாமல் நடிக்க முடிஞ்சது. டைரக்டர் மாதிரி இல்லாமல் ஃப்ரெண்ட் மாதிரி பழகியதால் டவுட் எதாவது இருந்தால் தயக்கம் இல்லாமல் ஓப்பனாக கேட்கும் சுதந்திரம் இருந்துச்சு.
டயலாக்ல மலையாளம் கலந்திருக்கணும் என்று சொன்னது, வசதியா இருந்துச்சு. இப்போது நான் காலேஜ் மூணாவது வருஷம் படிக்கிறேன். அந்த மாதிரி இருந்தால் போதும்னு இயக்குநர் சொல்லிட்டார். அந்த வகையில் நிறைய இடங்களில் என்னை கேரக்டருடன் கனெக்ட் பண்ணிக்க முடிந்தாலும் ஒரு மாற்றமும் இருந்துச்சு. இது 80 களில் நடக்கும் கதை. நடை, உடை எல்லாம் அதே மாதிரி இருக்கணும். அது மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்துச்சு.
ஜி.வி.பிரகாஷ் ?
ஜி.வி. பிரகாஷ் மாதிரி லெஜண்டுடன் நடிச்சது பெரிய அதிர்ஷ்டம். ஜி.வி.பிரகாஷ் சாருக்கு நான் பெரிய ரசிகை. குறிப்பாக பேக்ரவுண்ட் மியூசிக்கிற்கு பெரிய அடிமை. ஏற்கனவே அவருடைய படத்துக்கு ஆடிஷன் பண்ணியிருந்தேன். அதெல்லாம் ஞாபகத்துல வெச்சு பேசினார்.
அதன் பிறகு ‘வணங்கான்’ டைம்ல பாலா சார் ஆபீஸில் ஜி.வி.பிரகாஷ் சாரை சந்தித்திருக்கிறேன்.ஜி.வி.பிரகாஷ் சாருடன் நடிக்கும்போது எந்தவித அழுத்தமும் இல்லாமல் நடிக்க முடிஞ்சது. விட்டுக்கொடுத்து பழகத் தெரிந்தவர். எதாவது சொதப்பினாலும் டென்ஷனாகாமல் அடுத்த ஷாட் நல்லா பண்ணுவதற்கு என்கரேஜ் பண்ணுவார். ‘ரேபல்’ படத்துல என்ன மாதிரி சவால் இருந்தது?
சொல்றளவுக்கு பெரிய சவால் இல்லை. தமிழ்ப் படம் என்று வரும்போது எனக்கு இருக்கும் பெரிய சேலஞ்ஜ் மொழி. என்னதான் நான் தமிழில் பேசினாலும் மலையாள டச் வருவதைத் தவிர்க்க முடியாது.
இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த சாதகம் என்று கேட்டால், மலையாளம் கலந்து பேசினாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஏனெனில், படத்துல மலையாளியாக வர்றேன். சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டியிருக்கிறேன். அதையெல்லாம் சவாலாக சொல்ல முடியாது. படத்துல என்னுடைய கேரக்டருக்கு பெரிய சவால் இருக்காது. நீளமான வசனம் பேசியிருந்தாலும் என்னால் சமாளிக்க முடிஞ்சது. மலையாளத்தில் இரண்டு, மூன்று ஹீரோயின்கள் நடிக்கும் படத்துல உங்களை அதிகம் பார்க்க முடிகிறதே?
ஒரு படத்துல இன்னொரு ஹீரோயின் இருந்து அவங்க நல்லா நடிச்சிருந்தா அது எனக்கு உத்வேகம் தருவதோடு, அவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்ள முடியும் என்று நெனைக்கிறேன்.
என்னைவிட நல்லா நடிக்கிறாங்கனு விமர்சனம் வந்தால், அதைப்பார்த்து என் சைடுல என்ன மிஸ்ேடக் நடந்திருக்கு, எந்த இடத்துல நான் மிஸ் பண்ணினேன் என்றும் அவங்க எப்படி ஸ்கோர் பண்ணிணாங்க என்பதையும் அனலைஸ் பண்ணி என்னை அப்டேட் பண்ணிக்க முடியும்.
ஒரு படத்தில் நான் செகண்ட் ஹீரோயின் கூட கிடையாது. ஹீரோயின் ஃப்ரெண்டாகத் தான் வருவேன். அந்தக் கேரக்டரை என் ஏஜ் குரூப்ல இருக்கிறவங்களால் ரிலேட் பண்ணிக்க முடியும். நடிகையானபிறகு உங்கள் கேரக்டர் மாறியிருக்கிறதா?
சினிமாவுக்கு வந்த பிறகு பொறுப்பு கூடியிருக்கிறதாக நெனைக்கிறேன். நிறைய விஷயங்களை அப்சர்வ் பண்ணுகிறேன். பர்சனலாக அப்படியேதான் இருக்கிறேன். புரொஃபஷனலாக இருப்பதற்கு எனக்கு நானே புரஃபஷனல் டிரைனிங் கொடுத்து வருகிறேன்.
நீங்களே தேர்ந்தெடுக்கிற மாதிரி சான்ஸ் கிடைத்தால் என்ன மாதிரியான ரோல் செலக்ட் பண்ணுவீங்க?
மமிதா என்றால் கேர்ள் நெக்ஸ்ட் டோர் என்ற இமேஜ் இருக்கு. அதை உடைக்கப் பார்ப்பேன். எனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தணும்னு நினைப்பேன். வில்லியாக நடித்தால் ஒர்க் அவுட்டாகும்னு என்னால் நேர்மையுடன் சொல்லமுடியும்.
ஆக்ஷன், வுமன் சென்ட்ரிக் கதைகள் பண்ணுவேன்.காதல், கல்யாணம் பற்றி உங்கள் பார்வை எப்படி?
எனக்கு லவ் படத்துல நடிக்கப் பிடிக்கும். நிஜத்திலும் எனக்கு லவ் பிடிக்கும். எனக்கு லவ் மேரேஜ்தான் நடக்கும்னு எதிர்பார்க்கிறேன். ஆனால், லவ் மேரேஜுடன் என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடக்கூடாதுனு நெனைப்பேன்.
தனிப்பட்ட மமிதாவுக்கு என்ன பிடிக்குமோ அது தொடரும்னு நெனைப்பேன். அந்தவகையில் என்னுடைய சுதந்திரத்துக்கு தடையில்லாதவர் கிடைத்தால்தான் லவ் பண்ணுவேன். அது சீக்கிரத்துல நடக்காது. கிடைக்கிற வரை டிராவல் பண்ணுவேன். கிடைக்காமல் போகமாட்டார்கள். என்னை மாதிரியே என்னுடைய பார்ட்னருக்கும் ஃப்ரீடம் இருக்கணும். தமிழ் சினிமா?
எனக்கு தமிழ் பிடிக்கும். ஃபேமிலியாக தமிழ்ப் படம் பார்ப்போம். நயன்தாரா, அசின் படம் பார்த்திருக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்தவுடன் பாலா சார் படம் கிடைச்சது. எதிர்பார்க்காத வாய்ப்பு அது. சூர்யா சாருடன் நடிச்சதெல்லாம்... சான்ஸே இல்லை.தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை புதியவர்களுக்கு நிறைய வாய்ப்பு தர்றாங்க. நல்ல கேரக்டர்ஸ் கிடைக்கும். மலையாள இண்டஸ்ட்ரி எந்தளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு தமிழ் இண்டஸ்ட்ரியும் பிடிக்கும்.
எஸ்.ராஜா
|