நேஷனல் க்ரஷ்!



இன்றைக்கு இன்ஸ்டாக்ராமில் மூழ்கிக் கிடக்கும் இளையதலைமுறையினர், தங்களது ஸ்மார்ட் ஃபோனில் மேலே கீழே தட்டிவிடும் ரீல்களில் இவரது வீடியோக்கள் இல்லாமல் இருக்காது என்று அடித்துச் சொல்லுமளவிற்கு இளசுகளைக் கவர்ந்திழுத்திருக்கிறார் த்ருப்தி டிம்ரி.
‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் ‘அனிமல்’ படத்தில் இவரது நடிப்பையும், அழகையும் பார்த்து கிறங்கிப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.‘அனிமல்’ படத்தில் இவரது ஸோயா கதாபாத்திரத்தைப் பார்த்த ரசிகர்கள், த்ருப்தி டிம்ரியை ‘நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா’ என்று கொண்டாடுகிறார்கள்.

இவர் உத்தரகாண்டின் ருத்ரப்ரயாக்கில் பிறந்த மூக்குத்தி அழகி. பிப்ரவரி 23, 1995ல் பிறந்தவர். இப்போது த்ருப்திக்கு 29 வயது. பள்ளிப்படிப்பை உத்தரக்காண்டில் முடித்தவர், பட்டப்படிப்பில் சோஷியாலஜி படிப்பதற்காக தில்லிக்குக் கிளம்பினார். பட்டப்படிப்பை முடித்ததும், ஒரு நடிகையாக வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு புனேவுக்கு சென்றார். ஃப்லிம் & டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் நடிப்புப்பயிற்சி பெற்றார்.

சினிமாவில் அதிர்வை உருவாக்க சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் புத்திசாலித்தனமாக விளம்பரத் துறை பக்கம் கவனத்தைத் திருப்பினார். வசீகரமானவர்களை வளைத்துப் போடும் மாடலிங் துறை, இவரையும் இம்மியளவுகூட யோசிக்காமல் இழுத்துக்கொண்டது.2017ல் பாலிவுட் ஸ்டூடியோவில் நடிகையாக கேமரா முன் நின்றார். அது ஒரு காமெடி படம். ‘போஸ்டர் பாய்ஸ்’ என்ற பெயரில் வெளியான படத்தில் சன்னி தியோல், பாபி தியோல் நடித்திருந்தார்கள். இந்தப்படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இதனால், ஸ்ரீதேவி நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்த ‘மாம்’ படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் நடித்தார்.  2018ல் ஒரு வழியாக ‘லைலா மஜ்னு’ படத்தின் நாயகி ஆனார். ஆனால், ஆடிஷனில் இவரை முதலில் வேண்டாமெனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், த்ருப்தி இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் க்ரஷ் ஆக வேண்டுமென்ற விதியின் விளையாட்டாலோ என்னவோ, கதாநாயகியாக ஒப்பந்தமானார். அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், அநேகமாக த்ருப்தி டிம்ரி சினிமாவை விட்டு விலகியிருப்பார்.  

இதன் பிறகு அங்கு, இங்கு என தலை காட்டினாலும் பெயர் சொல்லும் அளவுக்கு இவருக்கு சரியான கதாபாத்திரங்கள் அமையவில்லை. இவருடைய இத்தனை வருட காத்திருப்புக்கு ஏற்றவகையில் அமைந்திருந்தது ‘அனிமல்’ பட கதாபாத்திரமும், அந்த நெருக்கமான காட்சியும்.தனது முதல் க்ரஷ் ரன்பீர் கபூர்தான் என்று பேட்டிகளில் கூறிய த்ருப்தி டிம்ரி, அதே ரன்பீருடன் ஆடையின்றி தோன்றிய அந்த ஒரே காட்சி அவரை இந்தியா முழுவதிலும் பிரபலமாக்கி இருக்கிறது.  

இன்று நேஷனல் க்ரஷ் ஆகியிருக்கும் த்ருப்தி டிம்ரி, விராட் கோலியின் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் சகோதரர் காமேஷ் ஷர்மாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.
இந்த காமேஷ் ஷர்மா தனது சகோதரி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து க்ளீன் ஸ்லேட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை 2013ல் தொடங்கியிருந்தார். இந்த நிறுவனம்தான் த்ருப்தி டிம்ரி நடித்த ‘புல் புல்’ திரைப்படத்தைத் தயாரித்தது.

‘புல் புல்’ பட ஷூட்டிங்கின் போது ஸ்பாட்டில் சந்தித்த த்ருப்திக்கு காமேஷ் மேல் ஒரு காதல் உணர்வு. அதேபோல் காமேஷுக்கு த்ருப்தி மேல் காதல் கலந்தது. இவர்களது காதலை 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதுதான் ஊருக்கு சொன்னார்கள்.

ஆனால், இடையில் என்ன நடந்த து என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களையெல்லாம் தேடிப்பிடித்து சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி விட்டார்கள். அதேபோல் இருவரும் ஒருவருக்கொருவர் அன்ஃபாலோ செய்தும் விட்டார்கள்!

காம்ஸ் பாப்பா