வாடகைக்கு புதிய துணிகள்!



நம்மூரில் துணிகளை வாடகைக்கு விடுபவர்கள் ரொம்பவே அரிது. அதைவிட வாடகைத் துணிகளை பயன்படுத்துவர்களும் கிடையாது. பள்ளி, கல்லூரிகளில் ஃபேன்ஸி டிரஸ் அல்லது ஆடல், பாடல் போட்டிகளுக்கு மட்டும் துணிகளை வாடகைக்கு எடுக்கும் பழக்கமுள்ளவர்கள் நாம். ஆனால், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் துணிகளை வாடகைக்கு விடும் கடை ஒன்று கடந்த ஒன்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

அதுவும் புதுத் துணிகளை வாடகைக்கு விடும் கடை என்பதே இதில் ஹைலைட். இந்தத் துணிகளை நீங்கள் விலைக்கும் வாங்கிக் கொள்ளலாம். இரண்டின் விலையும் அந்தப் புதுத் துணியில் இருக்கும் என்பது ஸ்பெஷல். இதற்கு ‘லீனா ஃபேஷன் லைப்ரரி’ என்று பெயர். இந்த ஃபேஷன் லைப்ரரி கடையை மூன்று சகோதரிகளும், அவர்களின் தோழி ஒருத்தியும் இணைந்து நடத்தி வருகின்றனர். ‘‘நாங்கள் இந்த ஃபேஷன் நூலகத்தைத் திறக்கக் காரணம், டெக்ஸ்டைல் தொழில் உலகிலேயே மிகவும் மாசுபடுத்தும் தொழில்களில் ஒன்றாக இருப்பதுதான்...’’ என்கிறார் இதன் இணை நிறுவனரான எலீசா யான்சென்.

‘‘கடந்த 2022ம் ஆண்டு ஐநா சபை வெளியிட்ட அறிக்கைப்படி உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தில் இரண்டு முதல் எட்டு சதவிகித பங்கை டெக்ஸ்டைல் இன்டஸ்ட்ரியே வகிக்கிறது. இதை முன்கூட்டியே தெரிந்துதான் இந்த முடிவிற்கு நாங்கள் வந்தோம். பலர் துணிகளாக வாங்கிக் குவிப்பார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் அவர்கள் பயன்படுத்துவது இல்லை.

இதுமட்டுமல்ல. உலகில் நீர் மாசுபாட்டிற்கு நான்கில் ஒரு பங்கு ஃபேஷன் துணிகளே காரணமாக இருக்கிறது. கடலில் தூக்கி எறியப்படும் மைக்ரோபிளாஸ்டிக்கில் மூன்றில் ஒரு பங்குக்கு ஃபேஷன் பொறுப்பு வகிக்கிறது. இது மீன்களுக்கும், மனிதர்களுக்கும் நச்சு தரக்கூடியது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த லைப்ரரியை திறந்தோம்...’’ என மேலும் குறிப்பிடுகிறார் எலீசா.

இந்த லைப்ரரியில் ஆன்லைன் பிரிவும் உள்ளது. இதன்வழியாகவும் துணிகளைப் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் 10 யூரோ கட்டணமாகச் செலுத்தி பதிவு செய்யலாம். பிறகு, அங்குள்ள சேகரிப்பிலிருந்து துணிகளை வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வாங்கிக் கொள்ளலாம். இப்போது நெதர்லாந்தின் பல நகரங்களில் இந்தக் கடையைத் திறந்துள்ளனர் எலீசா அண்ட் கோ-வினர்.

‘‘சிலருக்கு சில ஃபேஷன் துணிகள் மீது ஆசையிருக்கும். ஆனால், அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் திறன் இருக்காது. அல்லது அவ்வளவு விலை கொடுத்து வாங்கவேண்டுமா என யோசிப்பார்கள். சிலர் நமக்கு இது பொருத்தமாக இருக்குமா என்று ஒதுங்குவார்கள். அவர்களுக்கு எல்லாம் நாங்கள் சொல்லிக்கொள்வது- ‘வாங்கும்முன் முயற்சி செய்து பாருங்கள்’ என்பதுதான். ஏனெனில், பலர் வாடகைக்கு எடுத்துப் போட்டபிறகு பிடித்துவிட்டால் சொந்தமாக அதை வாங்கிக் கொள்கிறார்கள். ஆசையாக அணிய நினைப்பவர்கள் மட்டும் வாடகையில் தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இதன்மூலம், தேவையில்லாமல் துணிகளை அதிகம் வாங்கி தங்கள் சேகரிப்பில் வைக்க வேண்டியிருக்காது...’’ என்கிற எலீசா யான்சென், ‘‘சமீப ஆண்டுகளில் நாங்கள் 25 ஆயிரம் துணிகளை வாடகைக்குக் கொடுத்திருக்கிறோம். அப்படியென்றால் இவ்வளவு துணிகளும் மறுபயன்பாடு கண்டிருக்கிறது என்று அர்த்தம். நாங்கள் புதிதாக வாங்கவோ, உற்பத்தி செய்யவோ இல்லை. அதனால், எங்கள் நோக்கம் நிறைவேறி வருகிறது...’’ எனப் பெருமையாகச் சொல்கிறார்.  

பி.கே