தமிழக கடல் பகுதிக்கு ஒன்றிய அரசால் ஆபத்து...
மீனவர்களைக் குறிவைக்கும் நெடுவாசல் 2.0
மத்திய அரசின் அண்மைய அறிவிப்பைப் பார்த்து இது நிச்சயம் ‘நெடுவாசல் 2.0’தான் என அடித்துச் சொல்கிறார்கள் தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.சில ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரிப் படுகையை ஒட்டிய நெடுவாசலில் ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணறுகளை மூடவேண்டும் என்று விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். இதையொட்டி அந்தத் திட்டங்கள் எல்லாம் மூடுவிழா கண்டன.
 ஆனால், ‘நிலத்தில் தானே பிரச்னை... அதையே கடலில் செய்தால் என்ன’ என்று மல்லுக்கு வந்திருக்கிறது ஒன்றிய அரசின் அண்மைய அறிக்கை. அதாவது காவிரிப் படுகையை ஒட்டிய ஆழ்கடல் பகுதி உட்பட தமிழகத்தின் பல்வேறு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் அதை எடுப்பதற்கான உலகளவிலான ஏலத்தை ஜனவரி 3ம் தேதி அறிவித்து தனியாரின் வணிகக் கொள்ளைக்கு அச்சாரம் போட்டிருக்கிறது ஒன்றிய அரசு.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த வெற்றிச்செல்வனிடம் பேசினோம்.‘‘மோடி ஆட்சிக்கு வந்த 2014 முதல்தான் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் அதை எடுப்பதற்கு தனியாருக்கு லைசென்ஸ் கொடுப்பது என இரண்டு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.  தமிழகத்தைப் பொறுத்தளவில் காவிரிப் படுகையை ஒட்டிய நெடுவாசல் நிலப்பகுதியில் இதற்காக தோண்டப்பட்ட எண்னெய்க் கிணறுகளுக்கு எதிராக மக்கள் போராடியதில் இந்தத் திட்டமே கைவிடப்பட்டது. அப்போதே தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியிலும் ஆய்வு மற்றும் எரிவாயுவை எடுப்பதற்கான திட்டங்கள் இருந்தன.  ஆனால், நெடுவாசலில் நிலத்தில் தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக மக்கள் திரண்டதைப் பார்த்த மத்திய அரசு இந்த ஆழ்கடல் ஆய்வை கொஞ்சகாலம் தள்ளிப்போட்டது. இப்போது அந்தத் திட்டத்தை தூசு தட்டியிருக்கிறது...’’ என்று சொல்லும் வெற்றிச்செல்வன் இந்த ஆழ்கடல் திட்டம் மக்களின் கவனத்தைப் பெறாது என்று மத்திய அரசு கருதுவதே இந்த புதிய அறிவிப்புக்குக் காரணம் என்கிறார்.
 ‘‘பொதுவாக ஒரு திட்டம் என்றால் இரண்டு விஷயங்களை அரசு செய்யவேண்டும். ஒன்று சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை. மற்றது பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள். நெடுவாசலில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களால்தான் மக்கள் இந்தத் திட்டத்தில் உள்ள அபாயங்களை தன்னார்வலர்கள் மூலம் உணர்ந்தார்கள். ஆழ்கடல் என்றால் பிரச்னை இல்லை என்று அரசு நினைக்கிறது. வெறும் சுற்றுச்சூழல் தாக்கத்தை மட்டும் கணித்துவிட்டு தனியாருக்கு கடலை சொந்தமாக்கிவிடலாம் எனத் திட்டமிடுகிறது.
உண்மையில் ஆழ்கடல் திட்டம் என்பது பல லட்சம் மீனவர்களையும் மீன் வளத்தையும் பாதிக்கக்கூடியது. மீனவர்களின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை எனும் ஒரு குருட்டு நம்பிக்கையில் இந்த விஷயத்தில் மீண்டும் அரசு இறங்கியிருக்கிறது.
இது மீனவர்களை மட்டுமல்லாமல் கடலின் இயற்கைத் தன்மையையே மாற்றி பலருக்கும் ஆபத்தைக் கொண்டுவரக்கூடியது என்பதை ஒன்றிய அரசு நினைத்துப் பார்க்க மறுக்கிறது. விரைவில் தமிழக அரசும், மீனவர்களும் பொதுமக்களும் இந்த அறிவிப்பின் ஆபத்தை உணர்ந்து நெடுவாசலை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவார்கள்...’’ என வெற்றிச்செல்வன் முடிக்க, அதே அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் தொடர்ந்தார். ‘‘இப்போதைக்கு தமிழகத்தில் மொத்தம் நான்கு ஆழ் கடல் பகுதிகளை இந்த ஏலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று சென்னைக்கு அருகே ஆந்திரக் கடற்கரை முதல் பாண்டிச்சேரி, மரக்காணம், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆழ்கடல் பகுதி. மற்ற மூன்றும் கன்னியாகுமரி ஆழ்கடல் பகுதிகள். இந்த ஏலத்தில் இந்தியாவில் தமிழகம் உட்பட்ட மொத்தம் 78 கடல் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தளவில் 32 ஆயிரத்து 485 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கடல் தேர்வாகியிருக்கிறது.
நெடுவாசல் போராட்டத்தை ஒட்டி காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டபின் கடந்த வருடம் காவிரியை ஒதுக்கிவிட்டு தமிழகத்தின் பிற நிலப்பரப்புகளில் இந்த திட்டத்தைக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சித்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ‘காவிரி மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கு இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் தமிழகம் அதை எதிர்க்கும்’ என்று திட்டவட்டமாக பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
‘நிலத்தில்தானே எதிர்க்கிறீர்கள்... கடலில் கொண்டுவதால் என்ன செய்வீர்கள்’ என இந்த ஆழ்கடல் திட்டத்தை மீண்டும் ஒன்றிய அரசு முயற்சி செய்யும் அறிவிப்புதான் இது...’’ என்று சொல்லும் பிரபாகரன் இந்த ஆழ்கடல் திட்டத்தின் ஆபத்துகளையும் விவரித்தார்.‘‘நான்கில் மூன்று திட்டங்கள் இடம் பெறுவது கன்னியாகுமரி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதியை ஒட்டியது. உலகளவில் கடல் உயிரினங்கள் கடல் சார் பவளப் பாறைகளுக்கு இந்த மன்னார் வளைகுடா பகுதி மிகப் பிரபலம். இதை பாதுகாக்க தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்திவருகிறது.
நிலத்தில் விவசாயிகள் எதிர்க்கிறார்கள். கடலில் செய்தால் மீனவர்கள் எதிர்க்கமாட்டார்கள் எனும் ஒரு அபத்தமான நம்பிக்கையில் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர முயற்சிக்கிறது.
இந்தத் திட்டத்தை மீனவர்கள் மட்டுமல்ல... பொதுமக்கள் மற்றும் தமிழக அரசும் நிச்சயம் எதிர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...’’ அழுத்தமாகச் சொல்கிறார் பிரபாகரன்.
டி.ரஞ்சித்
|