கருப்பு உருளைக்கிழங்கு விவசாயி!
சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிலிருந்தே மனிதனின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்துவருகிறது உருளைக்கிழங்கு. இன்று உலகின் முக்கியமான பயிர் வகைகளில் ஐந்தாம் இடத்தில் உள்ளது உருளைக்கிழங்கு.  ஆனால், 1800 வருடங்களுக்கு முன்புதான் பெரு நாட்டில் உருளைக்கிழங்கை முறைப்படி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். பதினாறாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் ஸ்பானியர்கள் மூலமாக ஐரோப்பா முழுவதும் உருளைக்கிழங்கு பரவியது. அதற்குப் பிறகு பலரது அன்றாட பசியைப் போக்கும் ஓர் உணவாக பரிணமித்தது உருளைக்கிழங்கு. இதில் ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கருப்பு உருளைக்கிழங்கு.  தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு காய்கறிதான், இந்த கருப்பு உருளைக்கிழங்கு. வெளிப்புறம் கருப்பு நிறத்திலும், உட்புறம் ஊதா நிறத்திலும் இருக்கும். இந்த கருப்பு உருளைக்கிழங்கிலும் ஏராளமான வகைகள் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் இந்தியாவுக்குள் நுழைந்த கருப்பு உருளைக் கிழங்கை, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

இப்போது உத்தரப்பிரதேசம், பீகார் என குறிப்பிட்ட சில மாநிலங்களில் வசிக்கும் விவசாயிகள் மட்டுமே கருப்பு உருளைக்கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் முக்கியமான விவசாயி, ரவி பிரகாஷ் மௌ  ரியா.
மற்ற வகை உருளைக்கிழங்குடன் ஒப்பிடும்போது கருப்பு உருளைக்கிழங்கின் விலை அதிகம். அத்துடன் கருப்பு உருளைக்கிழங்கைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் மட்டுமே அதை வாங்குவார்கள். அத்துடன் அதன் சந்தை தேவையும் குறைவு. அதனால் கருப்பு உருளைக்கிழங்கு விவசாயத்தில் ஈடுபட பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில் கருப்பு உருளைக்கிழங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயம் செய்து வருகிறார் ரவி.

உத்தரப்பிரதேசத்திலுள்ள மன்சூர்பூர் எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர், ரவி பிரகாஷ் மௌரியா. அவருடைய குடும்பத்தினர் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்தனர். ரவியோ நகரத்தில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தார்.
அவருக்கு விவசாயம் செய்யும் எந்த திட்டமும் பெரிதாக இல்லை. 2016ம் வருடம் அவரது தந்தை இறந்துவிட, சொந்த ஊருக்குத் திரும்பினார். நகர வாழ்க்கையைவிட, கிராமம் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனது. தனது குடும்பத்தினரைப் போல விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தார் ரவி.ஆனால், அதில் வித்தியாசம் காட்ட விரும்பினார்.
அரிசி, கோதுமை, தக்காளி, மஞ்சள், இஞ்சி என பல வகையான பயிர்களை விவசாயம் செய்தார். இந்தப் பயிர்களுக்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது.
ஆம்; இந்தப் பயிர்கள் எல்லாமே கருப்பு நிறத்திலானவை; உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் மருத்துவக் குணம் கொண்டவை. வழக்கமாக எல்லோரும் செய்கின்ற பயிர் வகைகளையும், காய்கறிகளையும் விளைவிக்க ரவிக்கு விருப்பமில்லை. அவர் ஊரில் மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்திலேயே கருப்புப் பயிர்களை விளைவித்த ஒரே விவசாயி ரவிதான்.
மட்டுமல்ல, பெரிதாக வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல் விவசாயம் செய்து வந்தார். தன்னைப் பார்த்து மற்றவர்களும் ஆரோக்கியமான உணவுகளைத் தரும் பயிர்களை விவசாயம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கம். இந்நிலையில் கருப்பு உருளைக்கிழங்கு குறித்து கேள்விப்படுகிறார் ரவி. தனது உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் கருப்பு உருளைக்கிழங்கு விவசாயத்தில் இறங்கினார் ரவி. அதுவும் பரிசோதனை முயற்சியாகத்தான் செய்து பார்த்தார்.
ரேபரேலி என்ற ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயி மூலம் கருப்பு உருளைக்கிழங்கை விளைவிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் ரவிக்குக் கிடைத்தன. அறுபது சென்ட் நிலத்தில் கருப்பு உருளைக்கிழங்கைப் பயிரிட்டார்.
மற்ற பயிர்களைவிட இதற்கு அதிக நிலத்தை ஒதுக்கினார். இதற்காக 6 ஆயிரம் ரூபாய் செலவானாது. அவர் எதிர்பார்த்ததைவிட நல்ல விளைச்சல் கிடைத்தது. ஆம்; 9 ஆயிரம் கிலோ கருப்பு உருளைக்கிழங்கை அறுவடை செய்தார் ரவி. ஆனால், 60 சென்ட் நிலத்தில் வழக்கமான உருளைக்கிழங்கு தரும் விளைச்சலுடன் ஒப்பிடும்போது இது ரொம்பவே குறைவு. அதைப் பற்றியெல்லாம் ரவி யோசிக்கவில்லை. தனது பயன்பாட்டுக்குப் போக மீதியை விற்பனை செய்தார். நல்ல லாபம் கிடைத்தது. ரவியின் வித்தியாசமான விவசாயத்தைக் கேள்விப்பட்ட பலரும் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். அவரது மாவட்டத்தில் மட்டும் ரவியின் ஆலோசனையைக் கேட்டு ஐம்பதுக்கு மேற்பட்டோர் கருப்பு உருளைக்கிழங்கு விவசாயத்தில் இறங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் தங்களின் சொந்த பயன்பாட்டுக்காகவே கருப்பு உருளைக்கிழங்கை விளைவிக்கின்றனர்.
அதனால்தான் சந்தைகளில் கருப்பு உருளைக்கிழங்கை பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. ரவியின் மூலமாக குறைந்தபட்சம் ஐநூறு பேராவது கருப்பு உருளைக்கிழங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வருவார்கள். “2025ம் வருடம் இந்தியாவின் பெரும்பாலான காய்கறி சந்தைகளில் கருப்பு உருளைக்கிழங்கு கிடைக்கும்...” என்கிற ரவி, இப்போது கருப்பு உருளைக்கிழங்கை இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
சிறப்புகள்
ஏராளமான ஊட்டச்சத்துகளைத் தன்வசம் வைத்திருக்கிறது இந்த கருப்பு உருளைக்கிழங்கு. வைட்டமின் சி மற்றும் பி6, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், புரதம், நார்ச்சத்து, காப்பர் என நிறைய சத்துக்கள் இதில் இருக்கின்றன. அதே நேரத்தில் கொழுப்பின் அளவு குறைவு. நாம் பொதுவாக பயன்படுத்தும் உருளைக்கிழங்கு நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். காரணம், அதில் உள்ள கார்போஹைட்ரேட்.
ஆனால், கருப்பு உருளைக்கிழங்கு சர்க்கரையின் அளவை அதிகரிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இரத்த அழுத்தம் சீராக இருக்கவும் உதவி செய்கிறது. மட்டுமல்ல, உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை அகற்றும் ஒரு மருந்தாகவும் இதைச் சாப்பிடலாம். இதுபோக புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. முக்கியமாக இதன் சுவையும் அலாதியானது.
த.சக்திவேல்
|