பெண்கள் பாதி... பலேன்சியாகா மீதி!



நூறு வருடங்களுக்கு மேலாக ஃபேஷன் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பிராண்ட், ‘பலேன்சியாகா’. ஆடைகள், காலணிகள், ஹேண்ட் பேக்குகள் உட்பட ஏராளமான ஃபேஷன் பொருட்களைத் தனித்துவமாக தயாரித்து வருகிறது இந்நிறுவனம். 
விலை ரொம்பவே அதிகம். பல மடங்கு லாபம் வைத்து விற்கும் முதன்மையான பிராண்ட் இதுதான்.  தவிர, ஒரு காலத்தில் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்ட எத்தனையோ பிராண்டுகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. ஆனால், இன்றும் அந்தஸ்தின் அடையாளமாக நிலைத்து நிற்பது ‘பலேன்சியாகா’வின் தனிச்சிறப்பு.  

மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டில் பெண்களுக்கான பல நவீன ஆடைகளை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறது இந்த பிராண்ட். இதன் டிசைனைப் பின்பற்றித்தான் இன்றைய நவீன ஆடைகள் தயாராகின்றன. அதனால்தான் இந்த பிராண்டை உருவாக்கிய கிறிஸ்டோபர் பலேன்சியாகா இறந்தபோது, ‘மன்னர் இறந்துவிட்டார்’ என்று எழுதியது, ஃபேஷன் உலகின் பைபிள் என்று சொல்லப்படும் ‘வுமன்’ஸ் வியர் டெய்லி’ எனும் பத்திரிகை.

ஆறு வயதாக இருந்தபோதே தனது பூனைக்கு ஆடை வடிவமைத்த கிறிஸ்டோபர் பலேன்சியாகாவின் கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. ஸ்பெயினில் உள்ள கெட்டாரியா எனும் சிறு நகரில், 1895ம் வருடம் பிறந்தார் கிறிஸ்டோபல் பலேன்சியாகா. ஏழ்மையான மீனவக் குடும்பம். தந்தை ஜோஸ் பலேன்சியாகா மீன் பிடித்து, விற்பனை செய்து வந்தார். பலேன்சியாகாவின் சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார்.

அம்மா மார்ட்டினா தையல் தொழில் செய்துவந்தார். சிறுவன் பலேன்சியாகாவுக்கு அம்மாவின் தையல் இயந்திரத்தின் மீது பெருங்காதல். பள்ளி முடிந்து மாலை வேளையில் மற்ற சிறுவர்களுடன் விளையாடப்போகாமல் அம்மாவுக்கு உதவியாக இருப்பார் பலேன்சியாகா. அவருக்கு 11 வயதிலேயே ஊசி, நூலுடன் நல்ல பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. 12 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, அம்மாவின் தையல் கடையில் முழுநேரமாக வேலை செய்ய ஆரம்பித்தார். ஆம்; அம்மாவின் தையல் உதவியாளர் பலேன்சியாகாதான்.

பலேன்சியாகாவின் ஊரைச் சேர்ந்த ஒரு செல்வந்தப் பெண்மணி அவரின் வாடிக்கையாளராகவும், புரவலராகவும் மாறினார். “இவ்வளவு சின்ன வயசிலேயே தையலில் திறமையோடு இருக்கிறான்...”  என்று பலேன்சியாகாவைப் பாராட்டிய முதல் பெண்மணியும் அவரே. அந்தப் பெண்மணி மேட்ரிட் நகருக்கு பலேன்சியாகாவை அனுப்பி வைத்தார். அங்கே அவரது தையல் திறமைகளை வளர்த்துக்கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.  

அந்தப் பெண்மணி மூலமாக நிறைய இடங்களுக்குப் பயணித்தார் பலேன்சியாகா. குறிப்பாக பிரான்ஸின் பியாரிட்ஸ் என்ற நகரம். ஃபிரெஞ்ச் பெண்மணிகள் எப்படி உடை அணிகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பலேன்சியாகா மேற்கொண்ட பயணம் இது. இந்தப் பயணத்தின்போது தையல்காரர் என்ற நிலையிலிருந்து ஒரு ஃபேஷன் டிசைனராக பரிணமித்தார் பலேன்சியாகா. பெண்களுக்கான ஆடை வடிவமைப்பில் புதிய சரித்திரத்தைப் படைக்க ஆரம்பித்தார்.

ஆம்; ஸ்பெயினுக்குத் திரும்பிய பலேன்சியாகா, 1919ம் வருடம் தனது பெயரிலேயே  ஒரு பொட்டிக்கைத் திறந்தார். இதுதான் ‘பலேன்சியாகா’வின் முதல் கடை. பிசினஸுக்குள் நுழைந்த ஆரம்ப வருடங்களிலேயே ஒரு வெற்றிகரமான ஃபேஷன் டிசைனராக வலம் வந்தார். ஸ்பெயினின் அனைத்து ராயல் குடும்பங்களும் பலேன்சியாகாவின் வாடிக்கையாளர்களாக மாறின. தனக்கு விருப்பமான வகையில் துணிகளை உருவாக்கி, அதை தைத்து, விற்பனை செய்யும் ஃபேஷன் டிசைனராக உயர்ந்தார். இதுபோக வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியும் துணிகளை டிசைன் செய்து கொடுத்தார்.

அடுத்த சில வருடங்களில் மேட்ரிட் மற்றும் பார்சிலோனா நகரங்களில் கிளைகளைத் திறந்தார் பலேன்சியாகா. ஸ்பெயினின் அனைத்து முக்கிய பிரமுகர்களும் பலேன்சியாகாவின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள். 

ஸ்பெயினில் 1936ம் வருடம் உள்நாட்டுப் போர் மூண்டது. பலேன்சியாகாவின் அனைத்து கடைகளும் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. ஸ்பெயினைவிட்டு வெளியேற வேண்டிய நிலை. தயக்கத்துடனே ஸ்பெயினைவிட்டு வெளியேறி பாரிஸில் குடியேறினார் பலேன்சியாகா. 1937ம் வருடம் பாரிஸில் புதிய பொட்டிக்கைத் திறந்தார்.

பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஸ்பானிஷ் மறுமலர்ச்சி, கலை உலகில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. ஸ்பானிஷ் மறுமலர்ச்சியின் பாதிப்பில் டிசைன் செய்யப்பட்ட ஆடைகளை வைத்து ஃபிரான்ஸில் ஒரு ஃபேஷன் ஷோவை நடத்தினார் பலேன்சியாகோ. ஃபிரெஞ்ச் பத்திரிகைகள் எல்லாம் அவரைப் புகழ்ந்து தள்ளின. 

ஒரே ஃபேஷன் ஷோ மூலம் ஃபிரான்ஸின் பட்டி தொட்டியெல்லாம் பலேன்சியாகாவின் பெயர் பரவியது. ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன. பெரும் செல்வந்தர்கள் எல்லோரும் பலேன்சியாகாவின் அறிமுகத்துக்காகக் காத்துக்கிடந்தனர்.  

இரண்டாம்  உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். பலேன்சியாகா வடிவமைத்த ஆடைகளைக் காண்பதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆயிரக்கணக்கானோர் பாரிஸ் நோக்கிப் படையெடுத்தனர். மட்டுமல்ல, ஸ்பெயினின் சர்வாதிகாரியான ஃப்ராங்கோவின் குடும்பத்துக்குப் பிரத்யேகமான டிசைனரே பலேன்சியாகாதான். 

ஃப்ராங்கோவுடன் நெருக்கமானவர் ஹிட்லர். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படைகள் பாரிஸை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதுகூட,  பலேன்சியாகாவின் கடையை எதுவும் செய்யவில்லை. அந்த நெருக்கடியான சூழலிலும் அவர் தொடர்ந்து கடை நடத்தினார்  என்று வரலாற்று ஆய்வாளர்கள்சொல்கின்றனர்.

டியூனிக் டிரஸ், த பலூன் ஸ்கர்ட், பேபி டால் டிரஸ், பலூன் ஜாக்கெட் என விதவிதமான பெண்களுக்கான ஆடைகளை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தினார் பலேன்சியாகா.
ஃபேஷன் மூலம் பெண்களின் தோற்றத்தையும், நிழலையும் மாற்றியவர் பலேன்சியாகா என்று அவரைப் புகழ்கின்றனர். 1968ம் வருடம் ‘பலேன்சியாகா’வை  நிரந்தரமாக மூடிவிட்டு, ஓய்வு பெற்றார் பலேன்சியாகா. 1972ல் மரணமடைந்தார். அதற்குப் பிறகு சில வருடங்கள் ‘பலேன்சியாகா’ மூடப்பட்டே இருந்தது.

1986ல் ‘போகர்ட் குரூப்’பின் கைக்குப் போனது. வேர் இல்லாத மரம் போல ‘பலேன்சியாகா’ இயங்கியது. இருந்தாலும் பிராண்டின் பெயருக்காகவே அதன் மவுசு குறையவில்லை. ஆடைகள் தவிர்த்து ஹேண்ட் பேக்குகளும் வெவ்வேறு ஃபேஷன் பொருட்களும் அறிமுகமாகின. ஃபேஷன் சந்தையில் நிலைத்திருப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன. 

இன்று ‘கெரிங்’ என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ‘பலேன்சியாகா’ இருக்கிறது. சமீப வருடங்களில் வித்தியாசமான ஃபேஷன் தயாரிப்புகளை வெளியிட்டு இணையத்தில் பேசு பொருளாக மாறுவது ‘பலேன்சியாகா’வின் வாடிக்கை.

சில வருடங்களுக்கு முன்பு கிழிந்த, அழுக்கான காலணிகளை விற்பனைக்குக் கொண்டுவந்து டிரெண்டடித்தது. அந்த கிழிந்த காலணிகளின் விலை கூட பல ஆயிரங்களில் ஆரம்பித்து
லட்சங்களில் சென்றது. புது வருடத்தை முன்னிட்டு துண்டு வடிவில் ஒரு குட்டைப் பாவாடையை அறிமுகப்படுத்தியது ‘பலேன்சியாகா’. இந்திய மதிப்பில் இதன் விலை 77 ஆயிரம் ரூபாய். இப்படி ஃபேஷன் உலகில் விநோதமாகச் செய்வது ‘பலேன்சியாகா’வை  புகழ் வெளிச்சத்தில் இன்றும் வைத்திருக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கையை எப்பொழுதும் ரகசியமாகவே வைத்திருந்தார் பலேன்சியாகா. புகழ் வெளிச்சத்தை விரும்பாதவர். அவரது தலைமையின் கீழ் ‘பலேன்சியாகா’ இருந்தபோது, எந்த தயாரிப்புக்கும் விளம்பரம் கூட அவர் செய்யவில்லை. எவ்வளவோ நிருபர்கள் அவரைத் தேடி வந்தபோதும் நேர்காணலைக் கொடுக்கவில்லை.

தனது கடைசி காலத்தில் மட்டுமே அரிதாக சில நேர்காணலைக் கொடுத்திருக்கிறார். மட்டுமல்ல, அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்தார். டி’ அட்டெய்ன்வில்லி என்ற கோடீஸ்வரருடன் காதலில் இருந்தார் பலேன்சியாகா.

டி’அட்டெய்ன்வில்லிதான் பலேன்சியாகாவின் பிசினஸுக்குப் பொருளாதார ரீதியாக உதவியவர். ஃபேஷன் உலகில் தனது விருப்பங்களையும், கனவுகளையும் நிறைவேற்ற பலேன்சியாகாவுக்கு உறுதுணையாக இருந்தவரும் அவரே. 1948ம் வருடம் டி’ அட்டெய்ன்வில்லி மரணமடைய, நிலைகுலைந்து போய்விட்டார் பலேன்சியாகா. 

பிசினஸை நிறுத்திவிடலாம் என்று கூட நினைத்தார். காதலரின் மரணத்துக்குப் பிறகு அவர் வடிவமைத்த ஆடைகள் எல்லாம் கருப்பு வண்ணத்தில் இருந்தன. காதலரின் இழப்பை வெளிப்படுத்துவதற்காக கருப்பு வண்ணத்தில் ஆடைகளை வடிவமைத்திருந்தார். அந்த ஆடைகள் இன்றும் துயரத்தின், இழப்பின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

த.சக்திவேல்