டுவிட்டரை அலறவிடும் திரெட்ஸ்!
கடந்த வாரம் இணைய உலகையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது, ‘திரெட்ஸ்’. டுவிட்டரைப் போன்ற சமூக வலைத்தள app இது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பை இயக்கி வரும் ‘மெடா பிளாட்ஃபார்ம்ஸ்’-க்குச் சொந்தமானதுதான் இந்த ‘திரெட்ஸ்’.
இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ‘திரெட்ஸி’ல் இணைய முடியும். இதில் உங்களுக்கு விருப்பமான பதிவுகளை இடலாம். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர முடியும். ஆனால், தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இதில் இல்லை. ஜூலை 5ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது திரெட்ஸ். அறிமுகமான ஒரு மணி நேரத்திலேயே 10 லட்சம் பயனர்களைத் தன்வசமாக்கிவிட்டது. சமூக வலைத்தள வரலாற்றில் மிகப்பெரிய சாதனை இது.
ஆம்; 10 லட்சம் பயனர்களைத் தன்வசமாக்க நெட்பிளிக்ஸுக்கு 3.5 வருடமும், டுவிட்டருக்கு 2 வருடமும், ஃபேஸ்புக்கிற்கு 10 மாதங்களும், இன்ஸ்டாகிராமிற்கு 2.5 மாதங்களும், ஸ்பாட்டிஃபைக்கு 5 மாதங்களும், சாட்ஜிபிடிக்கு 5 நாட்களும் ஆனது. மட்டுமல்ல, ஜூலை 9ம் தேதி, அதாவது திரெட்ஸ் அறிமுகமாகி நான்கு நாட்களிலேயே பத்து கோடி பயனர்களைப் பெற்றுவிட்டது.
ஸ்பானிஷ், ஆங்கிலம், ரஷ்யன் என 31 மொழிகளில், அமெரிக்கா உட்பட 100 நாடுகளில் ‘திரெட்ஸின்’ சேவை கிடைக்கிறது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்குகிறது.
திரெட்ஸின் வரவு டுவிட்டரின் நிறுவனரான எலான் மஸ்க்கை அலறவிட்டிருக்கிறது. எலான் மஸ்க்குக்கு எதிராக மார்க் ஸுக்கர்பெர்க் தொடுக்கும் போராகவே திரெட்ஸைக் கருதுகின்றனர்.
தவிர, எலான் மஸ்க்கின் கைக்கு டுவிட்டர் வந்தபிறகு அவர் பல கட்டுப்பாடுகளை விதித்தார். அதனுடைய லோகோவை மாற்றுவது போன்ற கோமாளித்தனங்களையும் செய்தார். அதனால் பல டுவிட்டர் பயனர்கள் மாற்று தளத்துக்காக காத்திருந்தனர். இந்நிலையில் திரெட்ஸ் வரவே, லட்சக்கணக்கான டுவிட்டர் பயனர்கள் திரெட்ஸுக்கு தாவி விட்டனர்.
ஆனால், எலான் மஸ்க்கும் விடுவதாக இல்லை. சமீபத்தில் திரெட்ஸை கேலி செய்யும்விதமாகக்கூட எலான் டுவிட்டியிருந்தார். டுவிட்டரை பிரதியெடுத்துவிட்டது திரெட்ஸ் என்று சட்டப்படி அவர் வழக்குத் தொடுக்கப்போவதாக செய்திகள் வலம் வந்தன. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
டுவிட்டரை வீழ்த்துமா..?
இந்த threads தளம் டுவிட்டருக்கு போட்டி என்கிறார்கள். எல்லா இடங்களிலும் பேசும் அரசியல் வெட்டிக்கதையை இங்கும் வந்து பேசுங்கள் என்று திரெட்ஸ் அழைக்கிறது.
டுவிட்டரின் பெரிய பலம், அரசாங்கத்துடனான இணைப்பை நம் கையில் கொண்டு வந்து தருவது. வேறு எந்த சமூக ஊடகமும் தராத பலம் அது.
ரயிலில் கழிப்பறை சுத்தம், வெளிநாட்டில் விசா பிரச்னை, தங்கியிருக்கும் தெருவில் சட்டம் ஒழுங்கு... என அனைத்தையும் டுவிட் செய்து எளிதில் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.
செல்போன் நிறுவனங்கள், வங்கிகள் என பல நிறுவனங்களையும் தொடர்புகொண்டு - tag செய்து - உங்கள் சேவை சார்ந்த சிக்கலைத் தீர்க்கலாம்.
இதுபோன்ற காரணங்களுக்காகவே பலர் டுவிட்டரை தொடர்ந்து வைத்திருக்கின்றனர். அந்த அரசாங்க - நிறுவன தொடர்பு இடத்தை threads நிரப்புமா..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
த.சக்திவேல்
|