இந்திய fantasy படங்களில் இது புது முயற்சி! ‘மாவீரன்’ Exclusive
‘ஒரு ஓட்டு அப்படி என்ன செய்துவிடும்’ என்ற கேள்விக்கு எளிமையாகவும் நிதர்சனத்துடனும் பாமரனுக்கும் புரியும்படி வகுப்பெடுத்து, ‘ஓட்டுக்கு பணம் வாங்காதீர். அதனால் இவ்வளவு விளைவுகள் உள்ளன’ என தெளிவாக எடுத்துரைத்த படம் ‘மண்டேலா’.அப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வினின் அடுத்த படைப்புதான் ‘மாவீரன்’. முதல் படம் கொடுத்த பெயரும் புகழும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் ஹேர் ஸ்டைல், சரும நிறம், லுக் என படத்திற்கு அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. ரிலீஸ் பரபரப்பிற்கு இடையே நம்மிடம் பேசினார் ‘மண்டேலா’ புகழ் ‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஷ்வின்.
திரைக்கதை எழுத்தாளர் அஷ்வின் முதல் ‘மாவீரன்’ அஷ்வின் வரை உங்களைப் பற்றி சொல்லுங்க?
நாகர்கோவில்தான் எனக்கு பூர்வீகம். அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆசிரியர்கள். ஸ்கூல் படிப்பு எல்லாம் அங்கேதான். பிறகு சென்னை எம்ஐடியில் கல்லூரிப் படிப்பு. அதையும் முடிச்சதுக்குப் பிறகு பெங்களூருவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துட்டு இருந்தேன். காலேஜ்ல படிக்கும் பொழுது சினிமா மேல நிறைய ஆர்வம். பெங்களூருவில் வேலை செய்திட்டு இருக்கும்போது சினிமாவுக்காக ஒரு கிராஷ் கோர்ஸ் படிச்சேன். அதற்கு ஏற்ப ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முதல் விதை போட்டவர் பிரபு சாலமன் சார். அவர் கூட சில காலம் பயணம் செய்தேன்.
பெங்களூருவில் சினிமாவுக்காக ஒரு கோர்ஸ் செய்தப்ப, அங்கு எனக்கு பயிற்சியாளரா சஞ்சய் நம்பியார் சார் இருந்தார். ஒரு ஷார்ட் ஃபிலிம் ஸ்கிரிப்ட் எழுதிட்டு போய் அவர்கிட்ட காண்பித்தேன். அவர்தான் ‘சினிமா பார்த்து கதை எழுதாதே. உன் வாழ்க்கையில் நீ என்ன பார்க்கறியோ அதை கதையாக மாத்து’னு சொன்னார். தொடர்ந்து நிறைய குறும்படங்களுக்கு கதை எழுத ஆரம்பிச்சேன். இந்த நேரத்தில்தான் நண்பர் நித்திலன் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு என்னை வசனம் எழுதச் சொன்னார். எனக்கு ஆரம்பத்தில் தயக்கம். ‘சும்மா எழுது மாப்ள, உன்னால் முடியும்’னு ஊக்கம் கொடுத்தார் நித்திலன். முதல் எழுத்து பெரிய ஸ்கிரீனில் அங்கேதான் ஆரம்பித்தது.
‘மாவீரன்’ - இந்தப் பெயருக்கே பெரிய வரலாறு உண்டு... இந்தப் படம் என்ன வரலாறு கொடுக்கப் போகிறது?
இந்தப் பெயரைச் சொன்னபோது சிவகார்த்திகேயன் சார் துவங்கி பலருக்கும் நிறைய கேள்விகள். ஏற்கனவே ரஜினி சார் நடித்த ‘மாவீரன்’ படம் என்றைக்கோ மெகா ஹிட் சப்ஜெக்டாக இருக்கு. மேலும் தெலுங்கு ‘மகதீரா’ படமும் இங்கே ‘மாவீரன்’ என்கிற பெயரில்தான் வெளியானது. அப்படியிருக்க இந்தப் படத்திற்கும் ஏன் ‘மாவீரன்’ தலைப்பு என கேள்விகள் வந்தன. ஆனால், கதையாகப் பார்க்கும்பொழுது இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமா இருக்கும்னு நீங்களே சொல்வீங்க.
ஏற்கனவே ஹிட்டாகி இருக்கற இந்தத் தலைப்பு இந்தப் படத்துக்கு இன்னும் சரியான பொருத்தமா இருந்துச்சு. படம் ஆரம்பிச்சு சரியா ஐந்து நிமிடங்களிலேயே ஏன் ‘மாவீரன்’ அப்படிங்கற பெயர்க் காரணம் உங்களுக்குத் தெரிய வந்துடும். அதனால்தான் நான் கதையை வெளிப்படையாகச் சொல்லலை.
சிவகார்த்திகேயனுடன் வேலை செய்த அனுபவம் எப்படியிருந்தது..?
தயாரிப்பாளர் அருண் விஷ்வா மூலமாக என் நம்பர் வாங்கி ‘மண்டேலா’ படம் பார்த்திட்டு முதலில் என்னைப் பாராட்டினார். அதோடு நிறுத்தாமல் டெக்னீசியன் ஒவ்வொருத்தருக்கும் கால் செய்து தனித்தனியாகப் பாராட்டினார். பிறகு நானும் ஒரு சின்ன பிரேக் எடுத்திட்டு, அடுத்த கதைக்கான வேலைகளில் கவனம் செலுத்திட்டு இருந்தேன். அப்பதான் அருண் விஸ்வா மூலம் மறுபடியும் ஒரு அழைப்பு. ‘எஸ்.கே கூட வேலை செய்ய விருப்பமா? விருப்பம் எனில் சொல்லுங்க பேசலாம்’னு சொன்னார்.
அங்கே உருவானதுதான் ‘மாவீரன்’. ஒரு காட்சிக்கு இந்த அளவுக்கு நடிச்சா போதும்னு மீட்டர் செய்து நடிக்கறது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு நேச்சுரலாகவே எதார்த்தமான நடிப்பு கைவந்த கலையா இருக்கு. சொன்ன மீட்டர்ல எவ்வளவு நடிப்பு தேவையோ அதை கரெக்டா வெளிப்படுத்துவார். இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை உங்க இஷ்டப்படி செய்யலாம்னு ஏற்கனவே எஸ்.கே எனக்கு போதுமான சுதந்திரமும் கொடுத்துட்டார். சிவகார்த்திகேயனின் அடுத்த படம்... தொடர்ந்து ‘மண்டேலா’ பட இயக்குநரின் அடுத்த படைப்புனு ‘மாவீரன்’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கே?
எல்லா விதமான படங்களும் செய்யணும் என்பதுதான் ஓர் இயக்குநரா என்னுடைய ஆசை. அதனால் முதல் படம் சமூகம், சமூகம் சார்ந்த அரசியல், முழுக்க முழுக்க மக்கள் நலன் இப்படி படம் எடுத்தாச்சு. இந்தப் படம் முழுமையான ஃபேன்டஸி திரைப்படம். ஆனாலும் இந்தப் படத்திலும் சமூகத்திற்கான ஒரு சின்ன மெசேஜ் இருக்கு. எந்தக் கதையையும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனா, என்னைப் பொறுத்தவரை சமூகத்திற்கு சின்ன கருத்தாவது சொல்லிடணும்னு யோசிப்பேன்.
‘மண்டேலா’ மாதிரி படம் முழுக்க கருத்துக்களாகவும், அரசியல் நையாண்டியாகவும் இருக்காது. ஆனாலும் நிச்சயம் ஏதோ ஒரு சமூக அக்கறை இருக்கும்.
அரசியல்வாதி மிஷ்கின், நகரத்துப் பெண் அதிதி ஷங்கர்... மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்க..?
இந்தப் படத்தில் அதிதிக்கு முழுமையாகவே சிட்டி கேர்ள் லுக்தான். படத்தில் அவங்க ஒரு பத்திரிகையாளரா வராங்க. கண்ணு முன்னாடி என்ன நடந்தாலும் தட்டிக் கேட்கற தைரியமான பெண்ணா இந்தப் படத்தில் பார்க்கலாம்.
மிஷ்கின் சாரும், சுனில் வர்மா சாரும் ஒரு நல்ல காம்போவான அரசியல்வாதிகளா வருவாங்க. மிஷ்கின் சார் என்னதான் பெரிய இயக்குநரா இருந்தாலும் ஒரு நடிகரா ஸ்பாட்ல எதிலும் தலையிட மாட்டார். ஆனால், ஒருசில இடங்களில் ‘டேய்! இந்த இடம் சரியாடா? உனக்கு ஏதோ தப்பா தெரியலையா’னு கேட்பார். நானும் சில சந்தேகங்கள் எழுந்தா அவர்கிட்ட கேட்கறதுண்டு. அவர் ஒரு ஸ்ட்ரக்சர் கொடுத்து குழப்பத்தை சரி செய்துடுவார். அவர் கூட வேலை செய்தது நல்ல அனுபவம். நிறைய கத்துக்க முடிந்தது. அவர் கூட மனசு விட்டு நிறைய விஷயங்கள் பேசலாம்.
சரிதா மேடம் நீண்ட இடைவெளைக்கு அப்புறம் ஒரு நல்ல கேரக்டர் செய்திருக்காங்க. யோகிபாபுவுக்கு காமெடி, கலகல ரோல்தான். ஆனால், என்னுடைய மீட்டரில் எவ்வளவு காமெடியோ அந்த அளவுக்குதான். அடிக்கடி சொல்வார் ‘நீ ‘மண்டேலா’ படத்திலே நடிக்க வச்சுட்டு போயிட்ட... எல்லாரும் இப்போ அழுவாச்சி கேரக்டர் ரோலாதான் கேட்கிறாங்க’ன்னு சொன்னார். ‘வண்ணாரப் பேட்டையிலே...’ பாடல் எங்கும் டிரெண்டிங்கில் இருக்கு. இசை மற்றும் மற்ற டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க?
மியூசிக், பாரத் ஷங்கர். ‘மண்டேலா’ பட இசையமைப்பாளர்தான். அந்தப் படத்திலேயே ஆறு பாடல்கள் இருந்துச்சு. ஆனால், கதை ஓட்டத்தை இடையூறு செய்யாமல் கொடுத்திருப்பார். இப்பவும் ‘ஏலோ ஏலோ...’ பாட்டுக்கு நிறைய பேர் ரசிகர்கள் இருக்காங்க. இந்தப் படத்திலும் நல்ல நல்ல பாடல்கள் இருக்கும். என்னுடைய முதல் பட டீம்தான் ’மாவீரன்’ படத்திலும் வேலை செய்திருக்காங்க. ஒரு அஞ்சு நண்பர்கள் ஒண்ணா சேர்ந்து படம் செய்தா எப்படி இருக்குமோ அப்படிதான் ‘மாவீரன்’ ஷூட்டிங் ஸ்பாட் இருக்கும்.
சினிமாட்டோகிராபி விது ஐயன்னா, எடிட்டர் ஃபிலோமின் ராஜ்... எனக்கு நீண்ட நாட்கள் நண்பர், லோகேஷ் கனகராஜ், நான், ஃபிலோமின் எல்லாம் ஒண்ணா ரூம் மேட்ஸா சுத்திக்கிட்டு இருந்த நபர்கள்தான். லோகேஷ் கூடவும் அவர் தொடர்ந்து டிராவல் செய்திட்டு இருக்கார். தயாரிப்பு அருண் விஸ்வா.இந்தப் படத்துக்கு ஸ்டண்ட் யானிக் பென். அவர் ஹாலிவுட் ஸ்டண்ட் மேன். கொஞ்சம் நல்லாவே வித்யாசமான சண்டைக் காட்சிகளா செய்து கொடுத்தார். இந்தப் படத்துக்கு அந்த ஸ்டைல் ஆக்ஷன் தேவைப்பட்டது.
‘மாவீரன்’ சூப்பர் ஹீரோ படம்னு ஒரு பேச்சு அடிபடுதே?
எப்படிக் கேட்டாலும் கதை சொல்ல மாட்டேன். ஆனால், முழுக்க முழுக்க இந்திய சினிமாவிலே புது முயற்சியா இருக்கும். நல்ல ஃபேன்டசி ஐடியா படத்திலே இருக்கும். தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் சின்ன சமூகப் பொறுப்பும் சேர்ந்த படமா ‘மாவீரன்’ இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|