61 வயது ஆக்ஷன் புயல்!
உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஹாலிவுட் படம், ‘மிஷன் : இம்பாசிபிள் டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்’. விறுவிறுப்பான திரைக்கதையாலும், வித்தியாசமான ஆக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்களைத் தன்வசமாக்கிய ‘மிஷன்: இம்பாசிபிள்’ பட வரிசையில் ஏழாவதாக வெளியாகியிருக்கும் திரைப்படம் இது.
இந்தப் படம் இவ்வளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கவும், வசூலை அள்ளவும் முழு முதற்காரணம் இதன் நாயகன் டாம் குரூஸ் என்றால் மிகையாகாது. ஆக்ஷன் புயலாக வலம் வரும் டாமின் வயது 61 என்பது ஆச்சர்யம்.
*டாம் குரூஸும், மிஷன் இம்பாசிபிளும்
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் டாம் குரூஸ். நான்காவது படிக்கும்போதே பள்ளியில் நடந்த நாடகத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆறாவது படிக்கும்போது அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். டாமின் அம்மா இன்னொரு திருமணம் செய்துகொண்டார். அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்தார் டாம். 18 வயதில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி நியூயார்க் வந்தார்.
ஹோட்டலில் மேசையைத் துடைப்பது உட்பட பல வேலைகளைப் பார்த்து, பணம் சேர்த்தார். தொலைக்காட்சித் தொடர்களில் ஏதாவது நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வந்தவர், ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது தனிக்கதை.
உலகளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் நடித்தவர், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் என பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் டாம். அவரது திரைப்பட வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம்தான் ‘மிஷன்: இம்பாசிபிள்’. இதன் முதல் பாகம் 1996ம் வருடம் வெளியானது. இதில் ஈதன் ஹன்ட் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ஷனில் அசத்தியிருப்பார்.
எந்தவிதமான டூப்பும் இல்லாமல், உயிரைப் பணயம் வைத்து அவரே எல்லா சண்டைக்காட்சிகளிலும் நடித்திருப்பார். புகழடைந்து வரும் காலம் என்பதால் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் அவர் நடித்திருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் இன்றும், அதாவது புகழின் உச்சியில் இருக்கும் காலத்திலும், உண்மை எது... டூப் எது... என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி படமாக்க தொழில்நுட்பம் கைவசம் இருக்கும் காலத்தில் கூட டூப் போடாமல் உயிரைப் பணயம் வைத்து சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார் டாம்.
அதுவும் 57 - 59 வயதில். ஆம்; படம் ஆரம்பிக்கும்போது டாமின் வயது 57. முடியும்போது 59. படம் வெளியானபோது 61. அந்த சண்டைக்காட்சிகள்தான் ‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்’ படத்தின் ஹைலைட்.
*ப்ரொமோஷன்
ஒரு படத்தை எப்படி ப்ரொமோட் செய்தால் படத்துக்கான எதிர்பார்ப்புகள் எகிறும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், ‘மிஷன் : இம்பாசிபிள் டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்’. ஆம்; இரண்டு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய வீடியோக்கள்தான் படத்துக்கான முக்கிய ப்ரொமோஷன். முதல் ஆக்ஷன் காட்சியில் ஒரு டூவிலரில் பறக்கும் டாம் குரூஸ், உயரமான மலையிலிருந்து பள்ளத்தாக்கு நோக்கி குதிக்கிறார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம், அந்த ஆபத்தான காட்சியில் டூப் இல்லாமல் நடிப்பதற்காக டாம் குரூஸ் மேற்கொண்ட பயிற்சிகள்தான் முதல் ப்ரொமோஷன்.
ஒருவேளை இந்த ப்ரொமோஷன் வீடியோ வெளியாகவில்லை என்றால் படம் பார்ப்பவர்கள் அந்தக் காட்சியை கிராஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள்; டாம் குரூஸுக்கு யாரோ டூப் போட்டிருக்கிறார்கள் என்று சொல்லக்கூடும். ஆனால், அந்த ப்ரொமோஷன் டாம் குரூஸுக்கு மகுடம் சூட்டிவிட்டது. இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிக்காக டாம் மேற்கொள்ளும் சிரமமும், அவரது நம்பிக்கையும், உழைப்பும் பலருக்கு உந்துதலை அளிக்கக்கூடியது. மட்டுமல்ல, ஹாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் காட்சிக்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்ற வியப்பையும் ஏற்படுத்திவிட்டது.
அத்துடன் அந்தக் காட்சி திரையில் எப்படி வரும் என்பதைக் காண்பதற்கான ஆவலையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது. இரண்டாவது ஆக்ஷன் காட்சி ஒரு ரயிலில் நடக்கிறது. இதற்காக ஒரு ரயிலையே உருவாக்கியிருப்பது ஆச்சர்யத்தின் உச்சம்.
*ஈதன் ஹன்ட்
பெரும் ஆபத்துகள் மற்றும் சவாலான மிஷன்களை திறம்பட கையாள்வதற்காக ‘இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸ் (ஐஎஃம்எஃப்)’ எனும் அரசின் ரகசிய ஏஜென்சி இயங்கிவரும். இந்த ஃபோர்ஸை இயக்கும் ஏஜென்ட்தான் ஈதன் ஹன்ட். ஜேம்ஸ் பாண்டுக்கு நிகரான கதாபாத்திரம் இது.
*பட்ஜெட்
‘மிஷன்: இம்பாசிபிள்’ பட வரிசையில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் இதுதான். இதன் பட்ஜெட் சுமார் 2400 கோடி ரூபாய். படத்தின் இயக்குநரான கிறிஸ்டோபர் மெக்குவாரியும், டாம் குரூஸும் இணைந்து படத்தை தயாரித்திருக்கின்றனர். டாம் குரூஸ் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமும் இதுவே.
*கதை
தனது குழுவுடன் சேர்ந்து அதிக சக்தி வாய்ந்த, மர்மமான ஒரு வில்லனை எதிர்க்கிறார் ஈதன் ஹன்ட். இதுவரை அவர் வழிநடத்திய மிஷன்களிலேயே ஆபத்தான மிஷன் இது. மனித குலத்தை அழிப்பதற்காக பயங்கரமான ஒரு புது ஆயுதம் தயாராகிறது. அந்த ஆயுதம் கெட்டவர்களின் கையில் கிடைக்கவிடாமல் செய்வதற்காக ஈதன் மேற்கொள்ளும் மிஷன்தான் ஒன்லைன்.
*கொரோனா
இத்தாலியில் படப்பிடிப்பு தொடங்கியபோதே அங்கே கொரோனா தொற்று ஆரம்பித்துவிட்டது. படக்குழுவில் இருந்த 12 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர். அத்துடன் இத்தாலிய அரசு கடுமையான லாக்டவுன் விதிகளைக் கொண்டுவர, அங்கே படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை. கொரோனாவின் பிடியிலிருந்து படக்குழுவினரைப் பாதுகாக்க ஒரு கப்பல் வாடகைக்கு எடுக்கப்பட்டது. அந்தக் கப்பலுக்கான செல்வு சுமார் 5 கோடி ரூபாய். இத்தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்து கொடுத்திருக்கிறார் டாம் குரூஸ்.
*அடுத்த பாகம்
‘மிஷன்: இம்பாசிபிள் டெட் ரெக்கோனிங் பார்ட் டூ’ 2024ல் வெளியாகிறது. இதனையும் கிறிஸ்டோபர் மெக்குவாரியே இயக்குகிறார்.
த.சக்திவேல்
|