லைப்ரரி ஆகர்ஷணா!



பதினொன்று, பனிரெண்டு வயதுச் சிறுமிக்கு அவர் பெயரைத்தாண்டி என்ன பெயர் சூட்டி அழைப்பார்கள்..? அவர் பெற்றோர், உற்றார் செல்லப்பெயர் ஏதாவது சொல்லி அழைப்பார்கள். உடன் படிக்கும் தோழிகள் ஏதாவது பட்டப்பெயர், கொச்சைப் பெயர் சூட்டி கூப்பிட்டு வம்பு வளர்ப்பார்கள். ஆனால், இந்த 11 வயது சிறுமிக்கு ‘லைப்ரரி ஆகர்ஷணா’ என்றே பெயர் ஆகிவிட்டது. வெறுமனே உள்ளூரில் ஒரு தெருவில் மட்டுமல்ல, தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் முழுக்க இவர் பெயர் அத்துபடியாகி விட்டது.  

இந்த ஆகர்ஷணாவை கடந்த ஜூன் மாதம் கடைசி வாரம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், தன் அலுவலகத்தில் வைத்து பாராட்டிக் கொண்டிருந்தார். அப்போது இந்தச் சிறுமி அவரிடம் அளித்தது சுமார் 200 புத்தகங்கள்! கோவை போலீஸார் ஏற்படுத்தியிருந்த வீதி நூலகங்களுக்காகத்தான் இவர் அதை அளித்திருந்தார். அதற்கு அடுத்த மாதம் ஜூலையில் ஒரு நாள் சென்னையில் அப்போது தமிழக டிஜிபி ஆக இருந்த சைலேந்திரபாபு, இந்தச் சிறுமியைப் பாராட்டினார். காரணம், அங்கே குடிசைப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு நூலகத்திற்கு இவர் ஆயிரம் நூல்களைப் பரிசாகக் கொடுத்தது.

இப்படி பல்வேறு நூலகங்களுக்கு நூல்கள் பரிசாகக் கொடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பள்ளிகள், மருத்துவமனைகளில் இதுவரை தனிப்பட்ட முறையில்  ஏழு நூலகங்களை உருவாக்கியும் உள்ளார். இந்த நூல்களை எல்லாம் இவர் தனிப்பட்ட முறையில் விலைக்கு வாங்கித் தருவதில்லை. வீடு, வீடாகச் சென்று, நண்பர்களிடம் பேசி, அவர்களிடம் உள்ள நூல்களைப் பெற்றே இப்படி நூலகங்களை உருவாக்கி வருகிறார்.

இதை பத்திரிகைகளில் பார்த்த மக்கள் தங்களிடம் உள்ள நூல்களை ஆகர்ஷணாவிடம் ஒப்படைக்கத் தேடி வருகின்றனர். தேடி அழைக்கின்றனர். அவர்கள் வீட்டுக்கும் சென்று இவர் நூல்களைப் பெற்று லைப்ரரிகளுக்கு அளித்து வருகிறார்.இதற்காக தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன், பிரதமர் நரேந்திரமோடியின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். பள்ளி மாணவர்களிடம் மட்டுமல்ல, கல்லூரி மாணவர்களிடமும் கூட வாசிப்பு பழக்கம் அறவே இல்லாத நிலையில் நிறைய நூல்களை வாசிப்பதோடு, ஊர்தோறும் நூலகங்களை உருவாக்கும் இவருக்கு எப்படி வந்தது இந்த நூலக ஆர்வம்?

அவரிடமே பேசினோம். மொத்தமாய் ஆங்கிலத்திலேயே உரையாடினார். அதை அப்படியே தமிழ்ப்படுத்தினோம்.

‘‘நான் பிறந்தது கோயமுத்தூர் ஒண்டிப்புதூர். பெற்றோர்கள் என் சின்ன வயதிலேயே தொழில் நிமித்தம் ஹைதராபாத் சென்று விட்டனர். என் தாய்மொழி மலையாளம். இங்கே ஹைதராபாத்தில் ஷனத் நகரில் வசிக்கிறோம். இங்குள்ள பப்ளிக் ஸ்கூலில் இப்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் நிறைய புக்ஸ் படிப்பேன். ஃபிக்‌ஷன், நான் ஃபிக்‌ஷன் இரண்டிலுமே ஆர்வம். அப்படி நான் படிச்ச நிறைய புக்ஸ் என் வீட்டில் இருக்கு.

கொரோனா காலத்தில் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. எங்க அப்பா ஒரு ஹெல்த்கேர் சர்வீஸ்ல பொறுப்புல இருக்கார். அந்த வகையில அறிமுகமான ஒரு புற்றுநோய் மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு உதவ முடியுமா என அந்த மையப் பொறுப்பாளர்கள் அப்பாகிட்ட கேட்டிருக்காங்க.
எங்க அப்பாவும் நாங்க இருக்கிற அப்பார்ட்மெண்ட்ல எல்லார்கிட்டவும் பேசினார். அதில் 60 - 70 பேர் உணவு எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கே போய் உதவினாங்க. தினம், தினம் அவங்க கூட நானும் போவேன். அப்படி அங்குள்ள குழந்தைகள் எல்லாம் பழக்கமானாங்க.

அவங்க ஒரு நாள் நாங்க படிக்கறதுக்கு, பார்க்கிறதுக்கு கலரிங் புக்ஸ் ஏதும் வாங்கித்தரமுடியுமான்னு கேட்டாங்க. உடனே வீட்டில் வந்து இருந்த கலரிங் புக்ஸ் எல்லாம் எடுத்தேன். எங்க லோதா கேசா பாரடைஸ் அப்பார்ட்மெண்டில் மொத்தம் 801 பிளாட்டுகள் இருக்கு. அங்கெல்லாம் வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் புத்தகம் கேட்டு மெசேஜ் அனுப்பினேன். ஆளாளுக்குப் புத்தகம் கொடுத்தாங்க.

அதையெல்லாம் எடுத்துட்டுப் போய் அந்த புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு நூலகமே உருவாக்கித் தந்துட்டேன். அதுல அந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் ஏகப்பட்ட மகிழ்ச்சி. இவங்க மகிழ்ச்சியைப் பார்த்த பின்னாடி இதேபோல மத்த இடங்களிலும் செய்யணும்ன்னு தோணுச்சு. எங்க பகுதியில் உள்ள சனத்நகர் போலீஸ் ஸ்டேஷனிலும், இங்கே உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் இதேபோல நூல்களை பலரிடம் கலெக்ட் பண்ணி நூலகங்கள் அமைச்சேன்.

அப்படித்தான் கோயமுத்தூர்ல போலீஸார் வீதி நூலகம் அமைத்து செயல்படறதா செய்தி நெட்ல பார்த்தேன். அதுல கமிஷனர்கிட்டவே சாட்டிங்ல பேசினேன். நான் புத்தகம் கொண்டு வந்து தரலாமான்னு கேட்டேன். அவரும் தாராளமான்னு சொல்லியிருந்தார். கோயமுத்தூர்ல எங்க பாட்டி வீட்டுக்கு  வந்த சமயம் அங்கே போய் 200 புத்தகங்களை கொடுத்தேன். மே ஒன்றாம் தேதி சன் டிவியில் பார்த்துட்டு டிஜிபி கூப்பிட்டார். அப்புறம்தான் போலீஸ் டிஜிபியுடனும் பேசி, நூலகத்திற்கு நேரில் வந்து நூல்கள் கொடுத்தேன்!’’ புன்னகைக்கிறார் ஆகர்ஷணா.

இதுவரை இப்படி 7 நூலகங்களை உருவாக்கியிருக்கிறார். அதில் 5500 நூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டு நூலகங்கள் உருவாக்க வேண்டும் என்பது திட்டம்.
ஆனால், அது வெகுசீக்கிரமே நிறைவேறி விடும்போல் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் செய்தித்தாள்கள், வலைத்தளங்கள் பார்த்துவிட்டு இவரைப் புத்தகங்கள் கொடுக்க அழைக்கின்றனர். அதிலும் பல சுவாரஸ்யமான அனுபவங்கள்.

பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் இவர் செய்தியைப் படித்து விட்டு ஒரு 76 வயதுப் பெண்மணி அழைத்திருக்கிறார். இவரும் தன் தந்தையை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அவர் வீட்டை காலி செய்துகொண்டு யுஎஸ் போவதாகவும், தன்னிடம் உள்ள புத்தகங்களை இவரையே எடுத்துக் கொள்ளவும் சொல்லியிருக்கிறார். அப்படி அவர் கொடுத்த புத்தகங்கள் மட்டும் நூற்றுக்கணக்கில். அவை எல்லாமே தலா ரூ.5000 முதல் ரூ.10000 மதிப்புள்ள ஆங்கிலப் புத்தகங்கள். இப்படி இவரைத் தேடி வரும் புத்தகங்கள் கணக்கு வழக்கில்லை. அதனால் அதிகப்படியான நூலகங்கள் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்.

அது சரி. கவர்னர் தமிழிசையிடமும், மோடியிடமும் பாராட்டுப் பெற்றது எப்படி என்று கேட்டோம். அதற்கும் ஒரு கிளைக்கதை விரிந்தது.தெலங்கானாவில் மழைவெள்ளம். இதற்காக பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் மூலம் பலரும் நிதி திரட்டி அரசிடம் அளித்துக் கொண்டிருக்க, ஆகர்ஷணாவும் உண்டியல் வசூல் செய்து கவர்னர் தமிழிசையிடம் கொடுத்திருக்கிறார். அப்போது இவரிடம் பேசிய தமிழிசை ‘குட்டிப் பொண்ணு, அதுவும் கோயமுத்தூர் பொண்ணு’ என்றதும் உடன் அமர வைத்து இவரை நலம் விசாரித்திருக்கிறார்.

அப்போது இவர் கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் நூலகம் அமைத்துக் கொடுத்த கதையையும், அதுபோல எட்டு நூலகம் அமைக்க எண்ணியிருப்பதையும் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு வியந்த தமிழிசை தன் டுவிட்டர் பக்கத்தில் அதைப் பகிர்ந்து அமித்ஷாவிற்கும், பிரதமர் மோடிக்கும் டேக் பண்ணியிருக்கிறார்.

அதைப் பார்த்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகம் வியந்து பாராட்டி, இவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தப் பணியைத் தொடருமாறும், பத்து நூலகங்கள் அமைந்ததும் தகவல் தெரிவிக்குமாறும், அப்போது இவருடன் மங்கிபாத்தில் பிரதமர் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளனராம்.இது குறித்து அவர் அப்பா சதீஷிடம் பேசினோம். ‘‘ஆகர்ஷணா படிப்பிலும் ஃபர்ஸ்ட் கிளாஸ்தான். சுறுசுறுப்பிலும் ஃபர்ஸ்ட். நிறைய புத்தகங்கள் படிப்பதோடு, மற்றவரையும் படிக்கச் சொல்லி வலியுறுத்துவாள்.

அப்படிப்பட்டவள் இப்படி அவளே நூலகமாக மாறுவதற்கு அந்த கேன்சர் இன்ஸ்டிடியூட் குழந்தைகள் ஒரு காரணமாக அமைந்துவிட்டனர். இப்பவெல்லாம் என் வேலையை நான் பார்ப்பதை விட வீட்டிற்கு வந்தால், அப்பா இந்த இடத்தில், இந்த எண் உள்ள வீட்டில் நமக்குப் புத்தகம் தரத் தயராக உள்ளனராம், போலாமா என்று கேட்பதுதான் தவறாமல் நடக்கிறது.
நானும் உடன் சென்று புத்தகங்கள் வாங்கி வந்து கொண்டிருக்கிறேன். அதை மகிழ்ச்சியுடனே செய்து வருகிறேன்!’’ என்கிறார் ஆகர்ஷணாவின் அப்பா சதீஷ்.

கா.சு.வேலாயுதன்