இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் நோய்களும், அதற்கான தீர்வுகளும்…



நம் உடலின் இன்றியமையாத உறுப்பு கல்லீரல். உணவு செரிமானத்திற்கும், நச்சுப் பொருட்களின் வெளியேற்றத்திற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும், உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சேமிப்பிற்கும் ஆதாரமாக இருப்பது கல்லீரல்தான்.ஆனால், சமீபமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். குறிப்பாக, ஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு நோய் அதிகளவில் காணப்படுகிறது. இதுமட்டுமல்ல. மாற்று அறுவை சிகிச்சையில் கல்லீரல் மாற்றுதான் காஸ்ட்லி.

ஒருமுறை சிரோசிஸ் எனப்படும் சுருக்க நிலைக்கு கல்லீரல் சென்றுவிட்டால் பிறகு இயல்புநிலைக்குக் கொண்டு வருவது கடினம். பிறகு, மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாகிப்போகும். இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கும், பொருந்தக்கூடிய கல்லீரல் கிடைக்கவேண்டும். அதனால், கல்லீரலை ஆரோக்கியமாகப் பேண வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில் கல்லீரல் நோய்கள் பற்றியும், அதற்கான தீர்வு குறித்தும் சென்னை ஜெம் மருத்துவமனையின் இயக்குநரும், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் செந்தில்நாதனிடம் பேசினோம்.

‘‘நீங்க குறிப்பிட்டது மாதிரி இப்போதைக்குக் கல்லீரல்ல அதிகமாகக் காணப்படுகிற பாதிப்புனா அது கல்லீரல் கொழுப்புதான். நூறு பேருக்கு ஸ்கேன் பண்ணினால் முப்பது முதல் நாற்பது பேருக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு இருக்கு. இதற்கடுத்து, ‘வைரஸ் ஹெபடைடிஸ்’னு சொல்லப்படுற கல்லீரல் அழற்சி நோய் காணப்படுது. அதாவது, வைரஸால் கல்லீரல் பாதிப்பு அடைஞ்சு அழற்சியாகிடும். அப்புறம், மதுப்பழக்கத்தால் வரக்கூடிய ‘ஆல்கஹால் ஹெபடைடிஸ்’. இதனால், கல்லீரல் பாதிப்படைந்து அழற்சி நோய் வந்திடும். இந்த மூன்றும்தான் 90 சதவீத ஈரல் நோய்கள்.

இந்த மூன்று பாதிப்புகளும் இறுதியில் சிரோசிஸ்னு சொல்லப்படுற கல்லீரல் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். தவிர, கல்லீரல் புற்றுநோய்க்கும் வித்திடும். பிறகு, நோயாளியைக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குத் தள்ளிடும்.

இந்த மூன்று கல்லீரல் பாதிப்பையும் சீக்கிரமே கண்டறிந்தால் நாம் 90 சதவீத ஈரல் நோய்கள்ல இருந்து விடுபடலாம். தவிர, கல்லீரல் பாதிப்பு வராமலும் தடுக்கலாம்...’’ என நம்பிக்கையாகச் சொல்கிறவர் ஒவ்வொரு பாதிப்பையும் விளக்கமாக விவரித்தார்.

கல்லீரல் கொழுப்பு (Fatty liver)

இதற்கு முக்கிய காரணம் உடல்பருமன், அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிடுறது, அப்புறம் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது. இது வெவ்வேறு நிலைகளுக்குப் போய் இறுதியில் கல்லீரல் சுருக்கத்திற்கு வித்திடும். இதனை ஆரம்பத்துலயே கவனிச்சிட்டா மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மூலமாக நார்மல் கல்லீரலாக மாற்றமுடியும்.

அப்புறம், இந்தப் பாதிப்பை ஸ்கேன் மூலம் மட்டுமே கண்டறியமுடியும். குறிப்பிட்டுச் சொல்லணும்னா இதுக்கான அறிகுறிகள் தென்படாது. அதனால, யாரெல்லாம் உடல்
பருமானாக இருக்காங்களோ, யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யலையோ, யாரெல்லாம் கொழுப்பு அதிகமுள்ள உணவை உட்கொள்றாங்களோ அவங்களுக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகம்.

இந்தக் கல்லீரல் கொழுப்புல கிரேடு 1, கிரேடு 2, கிரேடு 3னு மூன்று வகை இருக்கு. இதில் கிரேடு 1, 2 பாதிப்பை உடற்பயிற்சி மூலமே சரிபண்ணிடலாம். கிரேடு 3ல், ரத்தத்தில் சில மாறுதல்கள் தெரியும். அப்ப கல்லீரல் செயல்பாட்டிலும் மாறுதல்கள் ஏற்படும்.இதை NASHனு சொல்வோம். ‘நான்-ஆல்கஹாலிக் ஸ்டீட்டோஹெபடைடிஸ்’ என்பதன் சுருக்கம்தான் நாஷ். 

 இது கொஞ்சம் சீரியஸ் என்றாலும் மீளக்கூடியதுதான். சரியான மருத்துவம் இதற்கு அவசியம். இந்த நாஷ் நிலையையும் கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கநிலைக்குப் போயிடும். இந்நிலையில் மீண்டும் ஈரலை நார்மல் நிலைக்கு திரும்ப மீட்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். கால்வீக்கம், வயிறுவீக்கம், ரத்த வாந்தி, பசியின்மை இதெல்லாம் கல்லீரல் சுருக்கத்தின் அறிகுறிகள்.  

வைரஸ் ஹெபடைடிஸ்  

இதை கல்லீரல் அழற்சினு சொல்வோம். இந்த அழற்சிக்கு முக்கியக் காரணம் ஹெபடைடிஸ் வைரஸ்கள். இந்த வைரஸ்களை ஏ,பி,சி,டி,இ என ஐந்து வகையாகப் பிரிக்கிறோம்.
இதுல ஏ மற்றும் இ வைரஸ்கள் தண்ணீர் மூலம் பரவும். தண்ணீரை சரியாகக் காய்ச்சிக் குடிக்காமல் இருப்பதும், சுத்தமில்லாத  தண்ணீரில் சமைக்கிறது மூலமாகவும் இந்த வைரஸ்கள் பரவும். ஆனா, இந்த வைரஸ்கள் ஒண்ணு அல்லது ரெண்டு மாசத்துல உடல்ல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்போது தானாகவே வெளியே போயிடும். தொண்டை வலி மாதிரிதான். அதுவாக வரும், போகும்.

ஆனா, அந்த பி அண்ட்

சி வைரஸ்கள் ஆபத்தானவை. இதுல டி வைரஸும் இதனுடன் சேர்ந்திடும். இவை ரத்தம் மூலம் பரவும் வைரஸ்கள். பாதுகாப்பற்ற உடலுறவு, ஏற்கனவே பயன்படுத்திய போதை ஊசியை இன்னொருவர் பயன்படுத்துவது உள்ளிட்டவை மூலம் பரவும். இந்த வைரஸ்கள் உடம்பில் தங்கி ஆண்டுக்கணக்குல புற்று அரிக்கிறமாதிரி உடம்பை பாதிச்சு, ஈரலையும் பாதிக்கும். முதல்ல கல்லீரல் அழற்சி வரும். அப்புறம், கல்லீரல் சுருக்கத்திற்கு கொண்டு போகும். இதுல தடுப்புமுறைகள்னு பார்க்கிறப்ப பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது போதை மருந்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கிறதுதான்.  

இதுல பி வைரஸுக்கு தடுப்பூசி இருக்கு. யாரெல்லாம் அதிக ஆபத்துல இருக்காங்களோ அவங்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்படுது. அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள் மாதிரியானவர்கள். காரணம், நாங்க நோயாளிகளை கையாள்றோம். 

ஆபரேஷன் பண்றோம். அதன்மூலம் எங்களுக்கு பரவாமல் தடுக்க இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கிறோம். சி வைரஸுக்கு தடுப்பூசி இல்ல. ஆனா, சி வைரஸுக்கு சிறந்த மருத்துவம் இருக்கு. மாத்திரைகள் இருக்கு. இன்றைய தேதிப்படி இந்தியாவில் 4 கோடிப் பேர் பி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு பி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாது. டெஸ்ட் பண்ணினால்தான் தெரியும்.

சி வைரஸ்லயும் 60 லட்சம் முதல் ஒரு கோடிப் பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்லுது. அதனால இதை பொதுமக்களின் சுகாதாரப் பிரச்னையாகவே பார்க்கிறோம்.

இந்த கல்லீரல் அழற்சியை தடுக்கத்தான் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ம் தேதியை உலக கல்லீரல் அழற்சி நாளாக அனுசரித்து விழிப்புணர்வை உண்டாக்குது. 

கல்லீரலில் அழற்சி ஏற்பட இதுதவிர மற்ற காரணங்களும் இருக்கு. எலி மருந்து சாப்பிட்டாங்கனு படிக்கிறோம் இல்லையா.

இந்த எலி மருந்து கல்லீரலைப் பாதிக்கும். அதுபோல, பாராசிட்டமால் மாத்திரை ஓவர்டோஸும் கல்லீரலைப் பாதிக்கும். அதனால, மருத்துவரிடம் பரிசோதிக்காமல் பாராசிட்டமால் எடுக்கக்கூடாது.இதேபோல ஒருசில நாள்பட்ட நோய்களுக்காக எடுக்கும் மருந்துகளும் கல்லீரலைப் பாதிக்கும். உதாரணத்திற்கு டிபி மாத்திரைகள் எடுத்துக்கிறோம். இவை ஈரலைப் பாதிக்கலாம். ஆனா, மருத்துவர்கள் பரிசோதனை மூலம் இதனைத் தொிந்து கொண்டே ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க. அதனால, நோயாளிகள் கவலைப்பட வேண்டியதில்ல.

ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ்

மதுப்பழக்கத்தால் ஈரல் கடுமையாகப் பாதிக்கும். இதில் முதல்ல கல்லீரல் வீங்கும். அப்புறம், சுருங்கி சிரோசிஸ் நிலையை அடைஞ்சிடும்.மது உட்கொள்ளும்போது அது குடல்ல இருந்து உறிஞ்சி ரத்தத்திற்குப் போய், பிறகு ஈரல் வழியாகத்தான் நச்சுப்பொருளை வெளியேற்றும். அதனால, அளவுடன் எடுத்துக்கணும். பொதுவாக, எல்லா உறுப்புகளுக்கும் ஒரு திறன் இருக்கு. அதைத்தாண்டி போகும்போது வேலை செய்யாது. அதனால, ஆல்கஹால் என்கிற நஞ்சு உடல்ல தங்கி ஈரலைப் பாதிச்சு அதன் செயல்திறனை இழக்கச் செய்திடும். சிலர் ‘நான் ரெண்டு ஆண்டுகளாகத்தான் குடிக்கிறேன். அதுவும் அப்பப்பதான் எடுத்துக்கிறேன். ஆனா, ஈரல் பாதிக்கப்பட்டிருக்கு. என் நண்பர் பத்தாண்டுகளாக மொடாக் குடிகாரராக இருக்கார்.

அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லையே’னு கேட்குறாங்க. அது ஒருவரின் உடல்வாகினையும், தாங்கும்திறனையும் பொருத்தது.கல்லீரல் கொழுப்பாகட்டும், கல்லீரல் அழற்சி ஆகட்டும், மதுப் பழக்கத்தால் வரும் கல்லீரல் அழற்சி ஆகட்டும் இதெல்லாம் கல்லீரல் சுருக்க நிலைக்குப் போயிடுச்சுனா அதன்பிறகு கட்டுப்படுத்தத்தான் முடியுமே தவிர, குணப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வரவே முடியாது.

சிலர் கல்லீரல் சுருங்கினா வளர்ந்திடும்னு தவறான எண்ணமும் வச்சிருக்காங்க. இப்ப கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஈரல் கொடுக்கிறாங்க இல்லையா... அவங்ககிட்ட பாதி ஈரல் எடுக்கறோம். அதுவும் நோயற்ற ஈரலாக இருந்தால்தான். அதாவது, 60 சதவீத ஈரல் நல்லநிலையில் இருந்தால் எடுக்கலாம். அது இரண்டரை மாதத்தில் வளர்ந்திடும். ஆனா, பட்டுப்போன மரத்தில் எப்படி கிளைவிடும்?

அதேமாதிரிதான் சிரோசிஸ்னு வந்தால் ஈரல் கெட்டுப்போயிடுச்சு. அது இனி வளராது. இதை மக்கள் புரிஞ்சுக்கணும். அதனால், மூன்று நோய்களையும் தடுக்கக்கூடிய விஷயத்துல நாம் கவனம் செலுத்தணும்.

விழிப்புணர்வு

இதய நோய்களுக்கு இருக்கும் அளவுக்கு கல்லீரல் நோய்க்கு விழிப்புணர்வு இல்ல. பொதுமக்கள் இதயத்தை நல்லா வச்சுக்கணும். அதுக்காக உடற்பயிற்சி செய்யணும்னு நினைக்கிறாங்க. அதேபோல வயிற்றையும், கல்லீரலையும் ஆரோக்கியமாக வச்சுக்கணும்.புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் தீங்குனு நமக்கே தெரியும். ஆனாலும் இப்ப புகைபிடிப்பவர்களும், மதுகுடிப்பவர்களும் அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்காங்க. இதுல மதுப்பழக்கம் நேரடியாகக் கல்லீரலைப் பாதிக்கக்கூடியது.  

அதனால, கல்லீரல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு இந்தியாவில் நிறைய வரணும். இப்ப புள்ளிவிவரப்படி 4 கோடிப் பேர் பி வைரஸாலும், ஒரு கோடிப் பேர் சி வைரஸாலும் பாதிப்பு உள்ளவங்களாக இருக்காங்க. இதில்லாமல் எண்ணிலடங்கா மதுப்பழக்கம் உள்ளவங்க தனி. இதையெல்லாம் கணக்கிடுகிறபோது 130 கோடிப் பேர்ல பத்து கோடிப் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுறாங்க. இது சமூகத்தில் பெரிய பிரச்னை. இதயம் போலவே கல்லீரலும் முக்கியமான உறுப்பு. அது செயலிழந்தால் நம் உயிருக்கு ஆபத்து.

என்ன உணவு சாப்பிடலாம்?

கல்லீரலுக்கு முதல் எதிரி கொழுப்பு. அதனால, பெரும்பாலும் கொழுப்பு உள்ள உணவுகளை அளவுடன் எடுத்துக்கணும். அந்தக் கொழுப்பை உடற்பயிற்சி மூலம் கரைக்கணும்.  
ரெண்டாவது, ஸ்டார்ச் அதிகமுள்ள ஐட்டங்கள். அரிசி உள்ளிட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை அளவுடன் சாப்பிடணும். அதுவும் கொழுப்பாக மாறி ஈரல்ல படியும். புரோட்டீன் நிறைய சாப்பிடலாம்.

இதுல ரொம்ப முக்கியமானது சமமான உணவுமுறை. அதாவது, 2500 கலோரி சாப்பிட்டால், அந்த கலோரியை எரிக்க உடற்பயிற்சி செய்யணும். உட்கொள்றதும், வெளியேறுவதும் சமமாக இருக்கணும். வரவும், செலவும் சரியாக இருந்தால் சேமிப்பு கல்லீரல்ல இருக்காது. நாம் பணத்தை சேமிக்கலாம். கொழுப்பை சேமிக்க வேண்டாம்.

பேராச்சி கண்ணன்