சிறுகதை - பிம்பம்
‘‘புவனா டீச்சருக்கு சிறந்த ஆசிரியைக்கான பரிசு கிடைத்திருப்பதை முன்னிட்டு நடக்கவிருக்கும் விழாவில் தாங்களும் கலந்துகொண்டு...’’விழா அழைப்பிதழை மறுமுறையும் பார்த்தேன். அகஸ்டின் அண்ணன்தான் அனுப்பியிருந்தார். நான் படித்த பள்ளியில் இப்போது அவர்தான் தலைமை ஆசிரியர். நான் புவனா டீச்சரிடம் படித்தவன் என்பதாலும், தற்போது பட்டணத்தில் நல்ல நிலையில் இருப்பதாலும் விழாவில் நானும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்.
படிக்கிற காலத்திலிருந்தே என் மேல் புவனா டீச்சருக்கு அன்பும், பாசமும் அதிகம். இது அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்த அனைவருக்கும் தெரியும். இப்போது அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கும்போது அவரைப் பாராட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் அதுவும் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில்தான் எனக்கு புவனா டீச்சர் பாடம் எடுத்தார்கள். ஆறாம் வகுப்பில் பாப்பு டீச்சரின் செல்லப் பிள்ளையாக இருந்த எனக்கு ஏழாம் வகுப்புக்கு போகவே மனம் வரவில்லை.
அப்போது வீட்டில் படிக்கப் போக மாட்டேன் என்று அழுது அரற்றியதும், ‘‘காலை ஒடிச்சு அடுப்புல வச்சிடுவேன்’’ என்று உம்மா மிரட்டியதும் விசயமறிந்து பாப்பு டீச்சரே வீட்டிற்கு வந்ததும் இன்னமும் நினைவில் இருக்கிறது.‘‘எதுக்குல அழுத நீ? புது டீச்சரும் என்ன மாதிரிதாம்ல. நல்லவுகதான். என்கிட்ட எப்படி ராசா மாதிரி இருந்தியோ அதே மாதிரி அவுக கிட்டயும் நீ இருக்கலாம். இங்க பாரு. டீச்சரே வந்திருக்காவ’’ புவனா டீச்சரையும் அழைத்துக் கொண்டே பாப்பு டீச்சர் வந்திருந்தார்கள்.
அதன் பிறகு என்னோடு நெடுநேரம் பேசி என்னை சமாதானம் செய்து அருணா ஐஸ் கடைக்கு அழைத்துப் போய் பால் ஐஸ் வாங்கித் தந்ததும்தான் எனக்கு புவனா டீச்சர் மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.ஆனால், வகுப்புகள் துவங்கி கொஞ்ச நாளாவதற்குள்ளேயே புவனா டீச்சரை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அதன் பின்னால் பாப்பு டீச்சர் காணாமல் போய் விட்டார்கள். பார்த்தால் வணக்கம் போடுவதோடு சரி. ஆனால், புவனா டீச்சர் என்ன சொன்னாலும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல செய்து கொண்டிருந்ததை எல்லோரும் அதிலும் குறிப்பாக பாப்பு டீச்சரே ‘‘எலேய், என்னமோ அழுதுக்கிட்டிருந்தே’’ என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.
அதைப் பற்றியெல்லாம் எனக்கு அக்கறை இல்லை. மாயாண்டியை ஒரு தடவை அடித்து விட்டார்கள் என்பதற்காக அவன் புவனா டீச்சரை கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியதைத் தாங்க முடியாமல் அவனிடம் சண்டை போட்டதில் அவன் கல்லெடுத்து என் நெற்றியில் அடித்த வடு புவனா டீச்சரின் பெயரோடு இன்றும் இருக்கிறது.பரிட்சை முடிந்தால் தேர்வுத்தாள்களை திருத்துவதோடு பாப்பு டீச்சரின் வேலை முடிந்து விடும். மதிப்பெண்களைக் கூட்டி மொத்த எண்ணிக்கையை எழுதுவது எனது வேலை. இதை பாப்பு டீச்சர், புவனா டீச்சரிடம் சொல்லி விட்டதால் தேர்வு முடிந்து பரிட்சை தாள்களைத் திருத்தியதும் எனக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
மதிப்பெண்களைக் கூட்டுவதென்பது ஆசிரியரிடமிருந்து மாணவனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம். அது புவனா டீச்சரிடமிருந்து எனக்குக் கிடைத்த சந்தோசத்தை செல்வமுத்துவிடம் சொன்னேன். அவன்தான் வகுப்பில் ரெண்டாவது வருபவன். அவனிடம் சொன்னால் அவனுக்குக் கோபமும் பொறாமையும் வருமென்று தெரிந்துதான் சொன்னேன். நினைத்த மாதிரியே அவனுக்குக் கோபம் வந்து என்னைத் திட்டியபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது.அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. வேதக் கோவிலைக் கடந்து போகும் வழியில் பாப்பு டீச்சர் வேதக் கோவிலில் இருந்து வெளியில் வருவதைப் பார்த்தேன். வணக்கம் சொன்னேன். ‘‘எங்கல போற?’’
‘‘புவனா டீச்சர் வீட்டுக்குப் போறேன் டீச்சர்...’’ ‘‘என்ன, கணக்கு கூட்டிப் போடவா? நாந்தான் உன்னக் கூப்பிடச் சொன்னேன். புவனா டீச்சர் வேலைய முடிச்சுட்டு சாயங்காலம் எங்க வீட்டுக்கு வர்றியா? நான் வேணும்னா உங்க வீட்டுல சொல்லிடுதேன்...’’‘‘சரி டீச்சர்...’’ சொல்லி விட்டு உற்சாகமாக நடந்தேன். என்ன இருந்தாலும் பாப்பு டீச்சரும் என் அபிமான டீச்சர்தான். என்னை நாடகத்தில் முதல் முதலாக நடிக்க வச்சதும் அவங்கதான். போகிற வழியில் பன்னீர் மரங்களைச் சுற்றி கொஞ்சம் பேர் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதில் என் வகுப்பறைத் தோழனும் இருந்தான்.
‘‘ஏய் சிலுவ, என்ன பூ சேக்குறியா?’’ ‘‘ஆமா... நீ எங்கடேய் போத?’’ ‘‘நான் புவனா டீச்சர் வீட்டுக்குப் போறேன்டேய்...’’ ‘‘கணக்கு கூட்டிப் போடவாடேய்?’’ ‘‘ஆமா...’’
சிலுவை சட்டென்று பக்கமாக வந்தான். குரலைத் தாழ்த்திக் கொண்டான். ‘‘எலேய் மக்கா, எனக்கு ஒரு பத்து மார்க்கு கூட்டிப் போடுடேய். நான் பட்டுப் பூச்சி புடிச்சி தீப்பெட்டிக்குள்ள வச்சு தருதம்டேய்...’’ ‘‘சரிடேய். ஆனா, யாருக்கும் சொல்லக் கூடாது. சரியா?’’‘‘யாருக்கும் சொல்ல மாட்டேண்டேய்...’’ சிலுவை அந்தோணியார் மேல் சத்தியம் செய்தான். அந்தோணியார் உவரி கோவிலில் இருக்கும் சத்தியமுள்ள கடவுள். அவர் மேல் சத்தியம் செய்தால் தவறவே கூடாது - ஆத்தங்கரை நாச்சி மேல செய்யுற சத்தியம் மாதிரி அது.
நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. சின்ன வயசிலேயே பட்டுப் பூச்சிக்காக சின்னச் சின்ன தவறுகள் செய்யத் துவங்கும் மனம் பெரியவனான பிறகும் தொடர்கிறது - ஏதோ ஒரு சமாதானத்தைச் சுமந்தவாறு. பேருந்து செட்டிகுளத்தில் நின்றது. இன்னும் 10 நிமிடங்கள்தான். ஊர் வந்து விடும். இன்று மாலை விழா நடக்கவிருக்கிறது. பள்ளி வளாகத்தில்தான். பெர்னாந்து அடிகளார் தலைமையில் என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் பலரும் வாழ்த்திப் பேசும் விழாவில் நான் ஒருத்தன்தான் வாழ்த்திப் பேசப் போகும் பழைய மாணவன் என்று அகஸ்டின் அண்ணன் எழுதியிருந்தார்கள்.
அதை நினைக்கக் கொஞ்சம் பெருமையாக இருந்தது. வெளியே எட்டிப் பார்த்தேன். இருபது வருடங்களுக்குப் பிறகும் மாறாத அதே ஊர் போலத்தான் இருந்தது செட்டிகுளம். எனக்குக் கொஞ்சம் சிரிப்பு வந்தது.கால்வாய்க்காரன் தெருவைக் கடந்து புளியடி மாரியம்மன் கோயில் தெருவையும் கடந்து போனால்தான் புவனா டீச்சர் வீடு இருக்கிறது. நேரமாகி விட்டது. டீச்சர் பத்து மணிக்கு வரச் சொன்னார்கள். இப்போதே சிலுவையிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போய்விட்டது. வேதக் கோவிலில் பூசை முடிந்துவிட்டதென்றால் மணி ஒன்பதரையைத் தாண்டி விட்டது என்றுதானே அர்த்தம்?
வேகமாக நடந்தேன். வீட்டு வாசலில் பூவரச மரம் இருக்குமென்று டீச்சர் அடையாளம் சொன்ன வீட்டை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டேன். வீட்டு வாசலில் ஒரு கதவு முழுமையாக அடைத்திருக்க இன்னொரு கதவு முழுசாக மூடாமல் இருந்தது. மெல்ல உள் நுழைந்தேன். வீட்டின் முன்னறையில் மேசை மீது திருத்திய பரிட்சை தாள்கள் கிடந்தன. சரி டீச்சர் வருவதற்குள் சீக்கிரம் கூட்டி முடித்து விடுவோமென்று வேலையைத் துவங்கினேன்.
முதலில் சிலுவையின் பரிட்சை தாளைத்தான் தேடினேன். கிடைத்தது. கூட்டியபோது 28 வந்ததை அப்படியே 38 என்று எழுதி சுழித்து வைத்தேன். யாராவது பார்க்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டபோதுதான் அந்த சப்தத்தைக் கேட்டேன். எங்கிருந்து அந்த சத்தம் வருகிறதென்று முதலில் சரியாகத் தெரியவில்லை. கூர்ந்து கேட்டபோது அடுத்த அறையிலிருந்து அது வருவது தெரிந்தது. யாரோ உடம்பு சரியில்லாமல் முனகுவது போன்ற சத்தம். கூட்டல் போடுவதைக் கொஞ்சம் நிறுத்தி விட்டு இருந்த இடத்திலிருந்து நாற்காலி மேலேறி அங்கிருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போது ஒரு ஆளின் வெற்று முதுகு மட்டும் தெரிந்தது.
கூர்மையாகக் கவனித்தபோதுதான் புவனா டீச்சரையும் பார்க்க முடிந்தது. நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்வதற்குள் அந்த ஆள் எழுந்து விட அவரது முகத்தை நன்றாகப் பார்த்தேன். கூடவே புவனா டீச்சரும் எழுந்ததும் அவசரமாகக் கீழிறங்கி விட்டேன். தீர்த்தபதியிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அவன்தான் பொம்பளங்களப்பத்தி நெறய தெரிஞ்சு வச்சிருக்றவன். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததில் கணக்கு போடுவது மறந்து போனது. கொஞ்ச நேரத்தில் புவனா டீச்சர் வெளியே வந்தார்கள். என்னை முன்னறையில் பார்த்ததும், ‘‘எப்ப வந்தே?’’ என்று கேட்டார்கள்.
‘‘இப்பதான் வந்தேன் டீச்சர். நீங்க வர வரைக்கும் கூட்டிப் போடலாம்னு தொடங்கினேன்.’’ புவனா டீச்சரின் தலைமுடி கலைந்திருந்தது. வழக்கமாக வகுப்பறையில் பார்க்கும் டீச்சருக்கும் இப்போது பார்க்கும் டீச்சருக்கும் வித்தியாசமாக இருந்தது.‘‘சரி, நீ இன்னிக்குக் கூட்டல் போட வேண்டாம். எனக்கு இன்னம் கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்கு பள்ளிக்கூடத்துல வச்சு பாக்கலாம். சரியா?’’ என்று சொன்னதும் நான் புறப்பட யத்தனித்தேன்.
‘‘இரு. இந்தா. பால் ஐஸ் வாங்கிச் சாப்பிடு’’ என்று டீச்சர் காசு தர வாங்க மறுத்தேன். டீச்சரே வலிந்து என் கையில் காசை வைத்ததும் ஐஸ் கடைக்குக் கூடப் போகாமல் பறந்தேன் தீர்த்தபதியைக் காண.தீர்த்தபதி அவன் வீட்டில் இல்லை. வாசகசாலைக்குப் போயிருப்பதாக வீட்டில் சொன்னார்கள். பொய் சொல்லியிருக்கிறான் என்று புரிந்தது. அப்படியானால் மாரியம்மன் கோவிலுக்குப் பின்னாலுள்ள பண்ணை வயலில் கிணற்றடியில்தான் இருப்பான் என்று நான் யூகித்தது சரியாகவே இருந்தது.
‘‘எலேய் சின்னாரு...’’ என்று உற்சாகமாக வரவேற்றான் தீர்த்தபதி. கையில் தூண்டிலும், பக்கத்தில் சிரட்டையில் மண்புழுவுமாக மீன் பிடிப்பதில் கண்ணாயிருந்தவனுக்கு அந்த நேரத்தில் என்னை அங்கே கண்டது ஆச்சரியம் தந்திருக்க வேண்டும். தீர்த்தபதியிடம் நடந்ததைச் சொன்னேன். அவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. தூண்டிலை ஓரமாக எடுத்து வைத்து விட்டு வெகு நேரம் சிரித்தான். ‘‘எலே மக்கா, என்ன நடந்ததுன்னு தெரியலியாடேய்’’ என்று எகத்தாளமாகக் கேள்வி வேறு கேட்டான்.
எனக்குப் புரியவில்லை. ‘‘வேற ஒண்ணுமில்லலேய். லீவு நாளுல்லா. அதான் டீச்சரோட புருசன் வீட்டுக்கு வந்திருப்பாரு. அவரு வருவாருன்னு டீச்சருக்கு தெரியாம இருந்திருக்கும். அதான் உன்ன வீட்டுக்கு வரச்சொல்லிட்டாவ போலிருக்கு...’’ அதன்பிறகு தீர்த்தபதி சொன்ன விசயங்களெல்லாம் கேட்கும் மனநிலை எனக்கு இல்லாமல் போனது. டீச்சரைப் பற்றி எனக்குத் தெரியாததெல்லாம் கூட தீர்த்தபதிக்குத் தெரிந்திருப்பதால் ஏற்பட்ட அவமானம்தான் காரணம். வழக்கமாக தீர்த்தபதியிடம் பேசுவது போலப் பேசிக் கொண்டிருக்காமல் நேரமாகி விட்டதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்கு உடனே திரும்பிவிட்டேன்.
அடுத்த நாள் பள்ளிக் கூடத்தில் புவனா டீச்சர் என்னிடம், ‘‘நேத்து வீட்டுக்கு எப்ப வந்த?’’ என்று கேட்டார்.எனக்குக் கொஞ்சம் உதறலாக இருந்தது. ‘‘வேதக் கோயில்ல பூச முடிஞ்சதுக்கப்புறம்தான் வந்தேன்...’’‘‘என்னதாவது பாத்தியா?’’தீர்த்தபதி சொன்னதில் இருந்து பார்க்கக் கூடாத எதையோ பார்த்து விட்டோமென்று மட்டும் தெரிந்தது. ‘‘இல்லியே டீச்சர்...’’ ‘‘சரிசரி பாத்தாலும் அதப் பத்தி யாருகிட்டயும் பேசக் கூடாது என்ன? நல்ல பையன்லா நீ. இனிமே யாரு வீட்டுக்குப் போனாலும் அந்த வீட்டுல யாரு இருக்காங்கன்னு கேட்டுட்டுத்தான் உள்ள போவணும். என்ன சரியா?’’ என்னை அணைத்துக் கொண்டார்கள் புவனா டீச்சர்.
‘‘சிலுவைக்கு 10 மார்க்கு கூடப் போடச் சொன்னது யாரு?’’ அந்தக் கேள்வியை நான் எதிர்பார்க்கவேயில்லை. எனக்கு அப்படியே மூச்சுமுட்டிப் போனது. ஒண்ணுக்கு வந்துவிடும்போல இருந்தது. ‘‘அது வந்து டீச்சர்...’’ என்று நான் வார்த்தை வராமல் முனகினேன்.‘‘பரவாயில்ல... ஆனா, இந்த மாதிரி கம்ர்கெட்டுக்கு ஆசப்பட்டு தப்பு செய்யுறது நல்லதில்ல. கம்ர்கெட்டு வாங்கி சாப்பிடறத விட ஒழுக்கமா டீச்சர் உன் மேல வச்சிருக்கற நம்பிக்கய காப்பாத்துறதுதானே முக்கியம்...’’
எனக்கு அழுகை வந்து விட்டது. ‘‘தெரியாம செஞ்சிட்டேன் டீச்சர்...’’ என்று டீச்சர் கையைப் பிடித்துக் கொண்டு அழத் துவங்கியதும், புவனா டீச்சர் ஆறுதலாய் என்னை அணைத்துக் கொண்டார்கள்.‘‘சரி... அழக்கூடாது. செஞ்சது தப்புன்னு உனக்கு தெரிஞ்சா போதும். தப்புன்னு தெரிஞ்சு அதை செஞ்சா அவங்களுக்கு கடவுள் பெரிய தண்டனை குடுப்பாரு. நீ நல்ல பையன்தானே? அதனாலதான் சொல்றேன். புரிஞ்சுதா? கண்ணைத் தொடச்சுக்கோ. சிலுவ கிட்ட எதுவும் சொல்லாதே...’’ டீச்சரே என் கண்ணைத் துடைத்துவிட்டதும்தான் எனக்கு விட்டுப் போன மூச்சு ஒழுங்காக விழ ஆரம்பித்தது.
டீச்சர் அப்போதும் பால் ஐஸ் வாங்கக் காசு தந்தார்கள். அதிலிருந்து எனக்கு டீச்சர் மீது இன்னமும் நெருக்கம் அதிகமாகி விட்டது. டீச்சருக்கும் என் மேல் அன்பு அதிகமாகியிருந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்.பேருந்து புதிய நிலையத்துக்குள் நுழைந்தது. இறங்கி நடக்க ஆரம்பித்தபோதும் புவனா டீச்சரைப் பற்றியே நினைவு ஓடிக் கொண்டிருந்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் டீச்சர் வீட்டுக்குப் போக வாய்ப்பே கிடைக்கவில்லை - தீர்த்தபதி பலமுறை என்னைத் தூண்டி விட்டும்.
வீட்டிற்குப் போகும் வழியில் சுடலை நின்றுகொண்டிருந்தான். ‘‘என்ன மக்கா, இன்னிக்குப் பேசுதியோ?’’ என்று கேள்வி கேட்டான். நலம் விசாரித்தான். என்னோடு புவனா டீச்சரிடம் படித்தவன். இப்போது ஊரிலேயே பால் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். ‘சாயங்காலம் பார்க்கலாமெ’ன்று கிளம்பிப் போனான்.மாலையில் பள்ளிக்கூடம் போனபோது கொடிகள் தோரணங்கள் கட்டி பள்ளி வளாகமே களைகட்டியிருந்தது. விழாவுக்கான அலங்காரங்கள். மேடையில் ஒலிபெருக்கி. மாணவர்களின் கூட்டம். ஒருசில வகுப்பறைத் தோழர்களையும் கூட்டத்தில் பார்க்க முடிந்தது. கூட்டம் துவங்கி சம்பிரதாயங்கள் முடிந்து என்னைப் பேச அழைத்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது.
எல்லோரையும் போலவே டீச்சரின் பண்புகளைப் புகழ்ந்த நான், ‘‘டீச்சர் எனக்கு வலியுறுத்திய விசயங்களில் தலையாயதாக ஒழுக்கம் இருந்தது. ஒழுக்கத்தை விட்டு விட்டால் என்ன கல்வி கற்றும் பயனில்லை என்று அவர்கள் ஆரம்பத்தில் எனக்கு வலியுறுத்தியதால்தான் இன்றைக்கு நான் இந்த நிலையில் இருக்கிறேன்...’’ என்று சொன்னபோது பலத்த கையொலி.
தொடர்ந்து பேசி விட்டு நான் அமர்ந்தபோது எனக்கு நிறைவாக இருந்தது. என் இருக்கைக்குப் பக்கத்திலிருந்த ஃபிரான்சிஸ் சார், ‘‘நல்லா பேசுனலேய்...’’ என்று வழக்கம்போலப் பாராட்டினார். வஞ்சகமில்லாமல், நல்லது செய்யும் எல்லோரையும் பாராட்டுவது அவரது வழக்கம்.அகஸ்டின் அண்ணன், கல்வி அதிகாரி, ஊர் பெரியவர்கள் என எல்லோரும் பேசி முடித்து இறுதியாக புவனா டீச்சரின் ஏற்புரை வந்தது. டீச்சர் என்ன சொல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் இருக்கை முனைக்கு நகர்ந்தேன்.
கொஞ்சம் நடுக்கத்துடனேயே துவங்கியது புவனா டீச்சரின் உரை. எல்லோருக்கும் நன்றி தெரிவித்த அவர், ‘‘நான் இவ்வளவு தூரம் வேலை செய்யுறதுக்கும், அர்ப்பணத்தோட கல்வியைக் கற்றுத் தருவதற்கும் காரணமாக இருந்த என் கணவரை மேடைக்கு அன்போடு அழைக்கிறேன்...’’ என்று சொல்ல பலத்த கரவொலி. நானும் உற்சாகமாகவே கையொலி எழுப்பினேன். அகஸ்டின் அண்ணன் மேடைக்குக் கீழே போய் அவரை அழைத்துக் கொண்டு மேலே வரும்வரை அவரை சரியாகப் பார்க்கமுடியவில்லை.
மேடையேறி அவர் கீழே இருப்பவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு மேடையிலிருக்கும் எங்களுக்கு வணக்கம் சொல்லும்போது நான் அதிர்ந்து போனேன். ‘இதுவல்ல.. நிச்சயமாக இதுவல்ல இருபது வருடங்களுக்கு முன்னால் நான் பார்த்த முகம்...’எனக்குள் என்னவோ உடைந்தது போல இருந்தது. எந்த டீச்சரை ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாகக் கொண்டிருந்தேனோ அந்த டீச்சர்... என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலுமிருக்க முடியவில்லை. ‘‘இதுபோன்றதொரு மாணவன் எனக்குக் கிடைத்தது...’’ டீச்சர் என்னைப் பற்றித்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். கேட்கும் நிலையில் நான் இல்லை. என்னை யறியாமல் என் கண்கள் பனித்தன.‘‘கிறுக்குப் பயலே, எதுக்கு இப்போ அழுத, டீச்சர் உன்னப் பத்தி பெருமையா சொல்றதுல கண்ணீர் வருதாக்கும்...’’ ஃபிரான்சிஸ் சார் அருகிலிருந்து கேலி செய்தவாறே அணைத்துக்கொண்டார். என் கண்ணீரின் பொருள் அவருக்குப் புரியாது.
- ஆசிப் மீரான்
|