ஒரு சிறு நிலத்துக்காக பெரும் பொய்!
அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி எனும் இறுதி நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் மணிப்பூர் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குக்கீஸ் பழங்குடி இன மக்கள்.
கடந்த மே மாதம் 3ம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம், ‘மணிப்பூரின் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட இந்து சமூகமான மெய்தி சமூகத்தையும் பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும்’ என்ற உத்தரவுக்குப் பின்னணியில் அம்மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாஜகவின் இந்துத்துவா அரசியல் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மெய்தி சமூகத்தின் சில பிரிவுகள் பட்டியல் இனத்திலும், பல பிரிவுகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இருந்தாலும் இந்த எல்லா மெய்தி சமூகமும் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 10 வருடங்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மணிப்பூரின் 3 முக்கியமான சமூகங்கள் மெய்தி, குக்கீஸ் மற்றும் நாகா இன மக்கள். இதில் மெய்திகள் அதிமாக பிற்படுத்தப்பட்ட சமூகம். மற்ற இரண்டுமே பழங்குடி மக்கள். நிலவியல்படி மணிப்பூரின் 90 சதவீத பரப்பு மலையும் மலை சார்ந்த காடுகளும்தான்.
இதில்தான் பழங்குடிகளான குக்கீஸ் மற்றும் நாகா இன மக்கள் வாழ்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகமான மெய்தி களில் பெரும்பான்மையானோர் மணிப்பூரின் தலைநகரான இம்ஃபால் உட்பட சமவெளி பகுதிகளில் வசிக்கிறார்கள்.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆள்வதற்கு முன்பாக இந்தியாவின் சமூகப் பிரிவுகளுக்கு குறிப்பிட்ட பெயர் எல்லாம் கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இன்னாருக்கு இன்ன பெயர் என்று சூட்டப்பட்டது. அப்படித்தான் மணிப்பூரிலும் குக்கீஸ், நாகா, மெய்தி என்று மக்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே மணிப்பூரின் மற்ற சமூகங்களைவிட மெய்தி சமூகப் பிரிவு ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. இதனால் தங்களை பழங்குடி என்று சொல்வதற்கு அவை எதிர்ப்புக் காட்டின.
இன்றைய நிலையில் ஒரு தலைநகருக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் அதுவும் அரசு வேலை, அரசு சேவைகளில் மிகவும் முன்னணியில் இருக்கும் சமூகம் இந்த மெய்தி சமூகம்தான்.
குக்கீஸ் மற்றும் நாகா போன்ற பழங்குடி சமூகங்களைவிட சமூக நிலையில் முன்னேறிய இடத்தில் இருக்கும் மெய்தி சமூகம், இன்று தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கையை வைத்து போராடுவதற்கு பின்புலமாக பழங்குடிகளைப் பற்றிய சில பொய்ப் பிரசாரங்களே காரணம் என்கிறார்கள்.
‘சென்னையின் மக்கள்தொகை நெருக்கம் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களைவிட அதிகம்தான். அதற்காக சென்னை மக்கள் மற்ற நகர மக்களின் நிலத்தை ஆக்கிரமிக்க முடியுமா..? அதுபோல்தான் மணிப்பூரின் தலைநகரான இம்ஃபால் உட்பட 10 சதவீதமான நிலத்தில் வசிக்கும் 53 சதவீதமான மெய்தி மக்கள், மணிப்பூரின் 90 சதவீதமான நிலத்தில் வசிக்கும் குக்கீஸ் மற்றும் நாகா பழங்குடி மக்களின் நிலத்தை ஆக்கிரமிக்கத் துடிப்பதும்...’ என்று சொல்லும் அரசியல் ஆர்வலர்கள், பழங்குடிகள் வசிக்கும் 90 சதவீதமான நிலத்தில் 67 சதவீதமான நிலம் வேளாண்மை செய்யமுடியாத அல்லது மக்கள் வசிக்கமுடியாத காடுகளாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
அதுபோல மணிப்பூரின் பழங்குடிகள் பற்றிய இன்னொரு பிரசாரம் இந்த குக்கீஸ் மக்கள் கஞ்சா பயிரிடுகிறார்கள் என்பது. இந்த கஞ்சா பணத்தைக் கொண்டு நவீன துப்பாக்கிகளை வாங்கி தீவிரவாதத்துக்கு உதவுகிறார்களாம்.‘கஞ்சா பயிரிடுவது உண்மைதான். அதை வைத்து துப்பாக்கி வாங்குவதும் உண்மைதான்.
ஆனால், இதைத் தடுக்கவேண்டியது அரசுதானே. கஞ்சா பயிரிடும் முதலாளிகளும் துப்பாக்கி வாங்கும் முதலாளிகளும் தலைநகரான இம்ஃபாலிலும், அன்னிய நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களைத் தடுப்பது அரசின் கடமையல்லவா..?
அதைவிட்டுவிட்டு கஞ்சா பயிரிடும் கூலிகளான பழங்குடிகளைக் குற்றம் சாட்டுவது சரியில்லை...’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அதுபோல மியான்மர், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து எல்லாம் குக்கீஸ்கள் இந்த குற்றச் செயல்களுக்காக மணிப்பூருக்கு படையெடுக்கிறார்கள். மணிப்பூரின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி சமூகத்தைவிட குக்கீஸ் மக்கள்தொகை இந்த அன்னிய படையெடுப்பால் அதிகரிக்கப்போகிறது என்று சொல்வதையும் மறுக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
உதாரணமாக, 1901ல் குக்கீஸ் சமூகம் ஒரு சதவீதமாக இருந்தனர். இன்று அவர்களது மக்கள் தொகை 22 சதவீதம் என கதைவிடுபவர்கள் அரசின் சென்சஸ்ஸையே இதற்கு ஆதாரம் காட்டுகிறார்கள்.
உண்மையில் 1901ல் குக்கீஸ் மக்கள்தொகை 14.5 சதவீதமாக இருந்தது. 2011ல் இது வெறும் 16 சதவீதம்தான். ஆகவே, மியான்மர், பங்களாதேஷ் ஊடுருவல் எல்லாம் மெய்திகளைத் தூண்டிவிடும் செயல் என ஆணித்தரமாக சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். அதேபோல் 53 சதவீத மெய்தி மக்களுக்கு இம்ஃபால் உட்பட்ட 10 சதவீத இடமும், 40 சதவீதமாக இருக்கும் குக்கீஸ் இன மக்களுக்கு 90 சதவீத இடமும் இருப்பது அநியாயம் என்பது பொய்ப் பிரசாரம் செய்பவர்களின் வாதம்.
பொதுவாக இந்த நிலப் பிரச்னையை ஒரு பிரசாரமாக எடுத்துச் சொல்வதற்கான காரணம், மலைப்பிரதேசங்களில் பழங்குடிகளைத் தவிர்த்த மற்ற மக்கள் நிலம் வாங்க முடியாது என்ற சட்டம்தான். ஏதோ இம்ஃபாலில் பெரிய நில நெருக்கடியில் மெய்தி மக்கள் மடிந்து விழுவது போலவும், அதை சரிசெய்ய மெய்திகளையும் பழங்குடிகளாக்கிவிட்டால் பிரச்னை தீர்ந்தது போலவும் ஒரு பிம்பத்தை அரசியல்வாதிகள் கட்டமைக்கிறார்கள்.
அத்துடன் மெய்திகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் அவர்களது வாக்கு அப்படியே தங்களுக்குக் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். குறிப்பாக ஆளும் பாஜகவின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்கிறது.
ஆனால், இந்த நிலப் பிரச்னையை நீதிமன்றங்கள் சரி செய்யமுடியாது. இதைச் செய்ய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும். மணிப்பூர் நீதிமன்றம் இந்தப் பிரச்னையை எடுத்திருப்பது பெரிய தவறு. இதைத் தெரிந்த பாஜக அரசு, இந்த நிலப் பிரச்னையை மெய்திகளுக்கு ஆதரவாக சாதிக்க மதத்தை நுழைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒருகாலத்தில் வடகிழக்கு மாநில மக்கள் எல்லோருமே ஒருவகை பழங்குடிகளாகத்தான் இருந்தார்கள். பிறகுதான் ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு மதத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அப்படி மெய்தி மக்களும் இந்து மதத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவர்களாக மாறிய குக்கீஸ்கள் இன்றும் அதே மதத்தில் தொடர்கிறார்கள்.
மதத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் பாஜக, மணிப்பூர் விஷயத்திலும் மதத்தை வைத்து குட்டையைக் குழப்பியிருக்கிறது. மெய்தி மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்ஃபாலில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட சர்ச்சுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன அல்லது எரிக்கப்பட்டிருக்கின்றன.
நிலம் ஒரு சிறிய பிரச்னைதான். அதையும் நாகலாந்து, மிசோரம் போன்ற மூன்றாம் தரப்பை வைத்துப் பேசும்போது இந்த பிரச்னையை எளிதாக சமாளிக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொல்கிறார்கள். இது சாத்தியமில்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.பாஜக குட்டையைக் குழப்பியிருப்பதால் இனி மெய்திகளோடு சேர்ந்து வாழ்வது கடினம்... ஒன்று தனிநாடு இல்லையேல் மணிப்பூரோடு சேராத ஒரு தனித்த நிர்வாக சபை எனும் முடிவுக்கு குக்கீஸ்கள் வந்திருக்கிறார்கள்.
ஒரு சிறு நிலத்துக்காக பழங்குடிகளை கஞ்சா வியாபாரிகள், பர்மா வந்தேறிகள், ஆயுத ஏஜெண்டுகள்... என்று மிரட்டுவது வாக்கு அரசியலுக்கு உதவலாம்; ஆனால், பிரச்னைகளை முழுமையாகத் தீர்க்க உதவாது என்பதே எதார்த்தம்.
டி.ரஞ்சித்
|