பங்குச் சந்தையில் இடம்பெற உழைக்கும் ஸ்மார்ட் விவசாயி!



இந்தியாவின் முதல் பத்து பணக்கார விவசாயிகளின் பட்டியலை ஓர் இணைய விவசாய இதழ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார் சச்சின் கேல்.
நாக்பூரைச் சேர்ந்த பிரபலமான விவசாயி இவர். ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் மாதிரி ஸ்மார்ட் விவசாயியாக வலம் வருகிறார் சச்சின்.

இவர் விவசாயத்துக்குள் நுழைந்தது, விவசாயத்திலும் கோடிகளை அள்ள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது போன்ற விஷயங்கள் பலருக்கும் உந்துதல் அளிக்கக்கூடியது.
தங்களின் குழந்தைகள் நன்றாகப் படித்து டாக்டராகவோ அல்லது எஞ்சினியராகவோ வர வேண்டும் என்பது இந்திய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் கனவு. இப்படியான ஒரு பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர்தான் சச்சின் கேல்.

பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக நன்றாகப் படித்தார். நாக்பூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிக்க சச்சினுக்கு இடம் கிடைத்தது. எஞ்சினியரிங் முடித்த பிறகு எம்.பி.ஏ.வும் படித்தார். அடுத்து சட்டப் படிப்பிலும் பட்டம் பெற்றார். படிப்பு முடித்தபிறகு ஒரு மின்னாலையில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார் சச்சின். அடுத்த சில வருடங்களில் குர்கானில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேலாளர் வேலை கிடைத்தது. வருட வருமானம் 24 லட்ச ரூபாய்.

இப்படியான ஒரு வேலை கிடைத்துவிட்டால் மற்றதைப் பற்றி எதையும் யோசிக்க மாட்டார்கள். ஆனால், சச்சினோ வேலை செய்துகொண்டே பொருளாதார வளர்ச்சி சார்ந்து முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இறங்கினார். மற்ற நிறுவனங்களுக்கு வேலை செய்வதைவிட, சொந்தமாக தொழில் செய்வதுதான் சிறந்தது என்ற எண்ணம் முனைவர் பட்ட ஆராய்ச்சியின்போதுதான் அவருக்குள் உருவாகியது.

“தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் உணவுத்துறை சார்ந்த தொழிலைத்தான் முதலில் தேர்வு செய்தேன். பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் கைவிடும் துறை இது. பணம் சம்பாதிக்காமல் கூட ஒருவரால் உயிர் வாழ்ந்திட முடியும். ஆனால், உணவு இல்லாமல் யாராலும் வாழ முடியாது. உங்களுக்கான உணவை நீங்களே உற்பத்தி செய்வதற்கு தெரிந்திருந்தால் எந்த நிலையிலும் உங்களால் பிழைத்திருக்க முடியும்...” என்கிற சச்சின் விவசாயியாக மாற காரணம், வசந்த் ராவ் கேல்.

சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள மேத்பர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த் ராவ் கேல். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு விருப்பமான விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

மேத்பரிலேயே நெல் பயிரிட்டிருந்தார். அவர் விளைவித்ததையே உண்டு வாழ்ந்தார். இன்னொரு பக்கம் “ஓய்வு காலத்தை வீட்டில் ஜாலியாக கழிக்கலாம். பென்சன் வரும். வயசான காலத்தில் எதற்கு இந்த விவசாயம்...’’ என்று அவரைச் சுற்றியிருந்தவர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

எதையுமே கண்டுகொள்ளாமல் முழு மனதுடன் விவசாயத்தில் ஈடுபட்டார் வசந்த். இவரது பேரன்தான் சச்சின் கேல்.தாத்தாவைப் பார்ப்பதற்காக அடிக்கடி மேத்பருக்கு வருவார் சச்சின். அப்போது விவசாயம் குறித்த சுவாரஸ்யமான விசயங்களைப் பற்றி பேரனிடம் உரையாடுவார் தாத்தா. விவசாயத்தில் தொழில் அதிபராக வேண்டும் என்பதை தாத்தாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே பூர்வீக நிலமான 25 ஏக்கரை பேரனுக்குக் கொடுத்து, விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தார் தாத்தா.

ஆரம்ப நாட்களில் சச்சினின் பண்ணையில் வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருந்தது. காரணம், கூலி. மற்ற இடத்தில் கொடுப்பதைவிட அதிக கூலியைக் கொடுக்க, நூற்றுக்கணக்கான விவசாயிகள் அவரது பண்ணையில் வேலை செய்ய முன்வந்தனர். 25 ஏக்கரிலும் நெல் பயிரிட்டிருந்தார். குறிப்பிட்ட சில மாதங்களில் நெல் விளைந்து, அறுவடை செய்யப்பட்டது.

மறுபடியும் நெல் பயிரிட எட்டு மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். இந்த எட்டு மாதங்களும் நிலம் அப்படியே வெறுமையாக இருக்கும். சச்சினுக்கு மட்டுமல்ல, அவரது பண்ணையில் பணிபுரியும் விவசாயிகளுக்கும் வேலை இருக்காது. இந்நிலையில்தான் ஸ்மார்ட்டாக சிந்தித்தார் சச்சின். வருடத்தின் 365 நாட்களும் விவசாயம் நடப்பதற்கான திட்டங்களைத் தீட்டினார். வருடத்தின் எந்த காலத்தில், எந்த காய்கறிகள் விளையுமோ, அந்த காய்கறிகளை மட்டுமே பயிரிட்டார். இதுபோக நெல் விவசாயமும் நடந்தது.

அவரது பண்ணையில் டிசம்பரில் ஒரு காய்கறி விளையும். பிப்ரவரியில் இன்னொரு காய்கறி விளையும். இப்படி விளைந்ததை அவரே நேரடியாக சில்லறை விற்பனைக் கடைகளுக்கு விநியோகம் செய்தார். வெறுமனே, தான் மட்டுமே முன்னேறாமல், பல விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் காரணமாக இருக்கிறார் சச்சின். அதனாலேயே இந்திய அளவில் கவனத்துக்குரிய ஸ்மார்ட் விவசாயியாக வலம் வருகிறார்.

ஆம்; தன்னைப் போலவே அவரைச் சுற்றியிருந்த மற்ற விவசாயிகளும் நெல் விவசாயம் மட்டுமே செய்து வந்தததைக் கவனித்தார் சச்சின். அந்த விவசாயிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் நெல்லை விளைவித்து, அறுவடை செய்துவிடுகின்றனர். அடுத்த எட்டு மாதங்களுக்கு அவர்களுடைய நிலம் வெறுமையாக இருந்ததையும் கவனித்தார் சச்சின்.

அப்போது அவர்கள் பொருளாதாரத்துக்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கின்றனர். இது சச்சினை பாதித்தது. எட்டு மாதங்களுக்குப் பிறகு அந்த விவசாயிகள் மீண்டும் நெல்லையே பயிரிட்டனர். நிலம் வெறுமையாக இருக்கும் எட்டு மாதங்களில் அந்தந்த காலங்களில் விளையும் காய்கறிகளைப் பயிரிடலாம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை தந்து, வழிகாட்டியிருக்கிறார் சச்சின். அவரது ஆலோசனை விவசாயிகளைக் கவர, சச்சினுடன் கூட்டாளிகளாக மாறினார்கள்.

ஆம்; விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை வாங்கி, நேரடியாக சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கிறார் சச்சின். இதற்காக ஒரு நிறுவனத்தையும் உருவாக்கியிருக்கிறார். இதனால் விவசாயிகளுக்கும், அவருக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.  சச்சினின் நிறுவனத்தின் உதவியால் 137 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அந்த விவசாயிகள் 200 ஏக்கர் நிலத்தில் நெல்லையும், அந்தந்த காலங்களில் விளையும் காய்கறிகளையும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இவர்களது பிசினஸுக்குப் பாலமாக இருக்கிறார் சச்சின். இதுபோக தனது நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். அவரது நிறுவனத்தின் டர்ன் ஓவர் வருடத்துக்கு 2 கோடி ரூபாயை எட்டிவிட்டது.தனது நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் இடம் பிடிக்க வேண்டும். விவசாயிகளும், விவசாயமும் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிக்க வேண்டும் என்பது சச்சினின் கனவு.

த.சக்திவேல்