Must Watch



த அவுட் - லாஸ்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘த அவுட் - லாஸ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது. ஒரு வங்கியில் மேனேஜராக இருக்கிறான் ஓவன். அங்குள்ள லாக்கர், ஓவனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. பார்க்கர் என்ற பெண்ணுடன் காதலில் இருக்கிறான் ஓவன். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

பார்க்கருக்கும், அவளது பெற்றோருக்கும் இடையில் தொடர்பே இல்லை. அமேசான் காட்டுக்குள் வாழ்வதாக எல்லோரிடமும் சொல்லி வைத்திருக்கிறாள் பார்க்கர்.
திருமணத்துக்கு கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில், பார்க்கரின் பெற்றோர் வந்து சேர்கின்றனர். மாமனார், மாமியாரின் வருகை ஓவனை குஷிப்படுத்துகிறது. அப்பா, அம்மா வருகை பார்க்கரிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

திருமணத்துக்கு ஓரிரு நாட்கள் இருக்கும்போது ஓவன் வேலை செய்யும் வங்கி கொள்ளையடிக்கப்படுகிறது. ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் தனது  மாமனாரும், மாமியாரும் கொள்ளையர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் ஓவனுக்கு எழ, சூடுபிடிக்கிறது திரைக்கதை. ஆக்‌ஷனும், காமெடியும் கலந்து கட்டி திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்த பியர்ஸ் பிராஸ்னன் அதகளம் செய்திருக்கிறார். படத்தின் இயக்குநர் டைலர் ஸ்பின்டெல்.

மெம் ஃபேமஸ்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘மெம் ஃபேமஸ்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. ஓர் அழகான தெலுங்கு கிராமம். இளைஞர்களான மஹியும், துர்காவும், பாலியும் நெருங்கிய நண்பர்கள். வாழ்க்கையில் எந்தவிதமான லட்சியமும் இல்லாமல், வேலைக்குப் போகாமல் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சுற்றியிருக்கிறவர்கள் எல்லோருமே அவர்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். அவமானப்படுத்துகின்றனர்.

மட்டுமல்ல, கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் முக்கியமான காரணத்துக்காக 5000 ரூபாயை வாங்கி, பந்தயம் கட்டி கிரிக்கெட் விளையாடுகின்றனர். அங்கே நடக்கும் தில்லுமுல்லு காரணமாக பணத்தை இழந்து விடுகின்றனர். இந்தச் சம்பவம் அவர்களை மேலும் அவமானத்துக்குள்ளாக்குகிறது. மூன்று நண்பர்களும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க, அர்த்தமுள்ள காரியம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர்.

வெட்டியாக ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த நண்பர்கள் ஊரே மெச்சும்படி ஆகிறார்களா என்பதே மீதிக்கதை. நட்பு, காதல், கிராமத்து வாழ்க்கை, சின்னச் சின்ன அழகான நிகழ்வுகள் என நகர்கிறது திரைக்கதை. படத்தை இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சுமந்த் பிரபாஸ். இது இவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அஃப்வாஹ்

ஒரு நல்ல அரசியல் திரில்லர் படம் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘அஃப்வாஹ்’ எனும் இந்திப்படம். வட இந்தியாவில் உள்ள ஒரு கிராமம். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே அடிக்கடி கலவரம் நடக்கும் பகுதி அது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கிறது. 

இளம் அரசியல்வாதி விக்ரம் அந்தக் கிராமத்துக்குப் பிரசாரம் செய்ய வருகிறார். அவருடைய பேச்சு அங்கே கலவரத்தைத் தூண்டுகிறது. கலவரம் வெடிக்கிறது. விக்ரமின் அடியாட்கள் கலவரத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். அத்துடன் விக்ரமின் ஆள் ஒருவன் அங்கிருந்தவரை கொலை செய்துவிடுகிறான்.  

இந்தச் சம்பவம் வீடியோவாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இது விக்ரமின் வருங்கால மனைவியான நிவிக்கு ஒரு அவநம்பிக்கையைத் தருகிறது. இச்சூழலில் அந்த ஊருக்கு வருகிறார் ரஹாப். விளம்பரத் துறையில் பெரிய ஆளுமை அவர். இந்நிலையில் விக்ரமுடன் திருமணம் வேண்டாம் என்று வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் நிவி. விக்ரமின் ஆட்கள் நிவியைத் தேடி வருகின்றனர். அப்போது நிவிக்கு ரஹாப் உதவ, இருவரின் எதிர்காலமும் என்னவாகிறது என்பதே திரைக்கதை. எங்கேயும் சலிப்புத் தட்டாமல் வேகமாகச் செல்லும் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதிர் மிஸ்ரா.

ஹவா

பங்களாதேஷிலிருந்து சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம் , ‘ஹவா’. இந்த பெங்காலி மொழிப்படம் ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. பெரிய படகில் பத்துக்கும் மேலான மீனவர்கள், மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் செல்கின்றனர். பயணத்தின்போதே என்ஜினை இயக்குபவருக்கும், மீன் பிடிக்கும் சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.  

ஓர் இடத்தில் நிறைய மீன்கள் கிடைக்கின்றன. அந்த மீன்களை இடையிலே தரகர்களுக்கு விற்று நல்ல லாபம் பார்க்க மீனவர்கள் நினைக்கின்றனர். ஆனால், என்ஜினை இயக்குபவர் அதற்கு எதிராக மாற, அந்த திட்டம் கைவிடப்படுகிறது. இன்னும் கடலின் ஆழமான பகுதிக்குச் செல்கின்றனர். அங்கே எடை அதிகமான மீன் ஒன்று வலையில் மாட்டுகிறது. கடலுக்குள் இருப்பதை மேலே எடுக்கும்போதுதான் அது மீன் அல்ல, ஓர் இளம் பெண் என்று தெரிய வருகிறது.  

அந்தப் பெண் யார்? அங்கே எப்படி வந்தாள்? ஆண்கள் மட்டுமே இருக்கும் படகை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே திரைக்கதை. ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் ‘ஹவா’வை இயக்கியிருப்பவர் மேஜ்பவுர் ரஹ்மான் சுமோன்.

தொகுப்பு: த.சக்திவேல்