டார்க்நெட்
5.பட்டுச் சாலை
ராஸ் அல்பிரிக்ட்டிற்கு இப்போது ஒரு நம்பிக்கை வந்தது. அவரே தனக்குத் தெரிந்த கணினி அறிவால் டார்க்நெட்டில் ஒரு வெப்சைட்டை உருவாக்கி விட்டார். கொஞ்சம் போல் போதை மருந்துகளை ஸ்டாக் வைத்துக் கொண்டார். ஆனால், வெப்சைட்டிற்கு என்ன பெயர் வைப்பது?
சில்க் ரோட் - பட்டுச் சாலை.வரலாற்றில் ஈரானை ஒட்டி இருக்கும் சாலையின் பெயர் சில்க் ரோடு. ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் முக்கிய வர்த்தக சாலையாக பண்டைக் காலத்தில் இருந்தது. இதன் வழியே பட்டு ஏற்றுமதி நடந்ததால் அதை பட்டுச்சாலை என அழைத்தார்கள். வரும் காலத்தில் தன் வலைத்தளம் கூட மிகப் பெரிய வர்த்தகத்தை நிகழ்த்தப் போகிறது என்பதைக் குறிப்பதற்காக இந்தப் பெயரை ராஸ் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.
ஒரு சுபயோக சுப தினத்தில் டார்க்நெட்டில் தன் வலைத்தளத்தை தொடங்கி விட்டார். ஆனால், போதை மருந்து வாங்க யாரும் வரவில்லை. அதனால் ராஸ் தன் வலைத்தளத்தை பிரபலப்படுத்த முடிவெடுத்தார். வேறு வேறு பெயர்களில், டார்க்நெட் உள்ள வலைத்தளங்களில் மிக எளிதாகக் கிடைக்கும் போதை மருந்தைப் பற்றி எழுதினார். சில நாட்களில் இந்த யுக்தி வேலை செய்தது. பலர் வலைத் தளத்திற்கு வரத் தொடங்கினார்கள். ஆனால், அவர்களுக்கு போதை மருந்து வாங்க பயம். நிறைய சந்தேகம், குழப்பங்கள் இருந்தன. டார்க்நெட்டில் இருந்த மின்னஞ்சலுக்கு தங்கள் கேள்விகளை எழுதினார்கள். ராஸுக்கு இது ஒரு நல்ல சகுனமாக தெரிந்தது. பலர் விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள்... தன் வலைத்தளம் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. ஆனால், அவர்களின் கேள்விகள் சரிதான். ராஸ் சின்னச் சின்ன கேள்வி - பதில்களாக, டார்க்நெட்டில் எப்படி ஆர்டர் செய்ய வேண்டும்... எப்படி கிரிப்டோகரன்ஸியில் பணம் கட்ட வேண்டும்... தங்கள் முகவரிகளை எப்படி தவறானதாக கொடுக்க வேண்டும்... என்பதைப் பற்றி விளக்கி தன் வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் போட்டார்.இதைப் படித்துவிட்டு பலர் வலைத்தளத்தில் போதை மருந்தை வாங்க ஆர்டர் கொடுத்தார்கள். ஆனால், இதில் சிக்கல் வரத் தொடங்கியது.
முதல் சிக்கல், போதை மருந்தை ராஸ் வாங்க வேண்டும். ஆர்டர்கள் அதிகமாக போதை மருந்தின் அளவும் கூடத் தொடங்கியது. அவ்வளவு போதை மருந்தை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்வதோ வீட்டில் வைப்பதோ சுலபமல்ல. போலீஸிடம் சிக்க வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சிக்கலுக்கு முடிவு எடுப்பதற்குள்ளாக அடுத்த சிக்கல் முளைத்தது. ராஸ் ஒரே வகையான போதைப் பொருளை விற்றுக் கொண்டிருந்ததால் பலர் வெறுப்பாகி வாங்குவதை நிறுத்திவிட்டனர். விற்பனை குறையவே ராஸுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
யோசித்தபடி இருந்த ராஸுக்கு டார்க்நெட் மின்னஞ்சலில் சில மின்னஞ்சல்கள் வந்தன. அவை அமெரிக்காவில் உள்ள போதை மருந்து ஏஜென்ட்களிடம் இருந்து வந்திருந்தது. அவர்கள் தங்களுக்கும் இப்படி ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுக்க முடியுமா எனக் கேட்டிருந்தார்கள். ராஸ் முடியாது என பதிலளித்தார்.
அப்படி என்றால் உங்கள் வலைத்தளத்தில் எங்கள் போதை மருந்துகளை விற்கிறீர்களா என கேட்டார்கள்.ராஸுக்கு ஒரு யோசனை வந்தது. ஏஜென்ட்கள் தங்கள் போதை மருந்துகளை பட்டியலிட்டு அதை அவர்கள் விற்கலாம். ஆர்டர் தகவல்களை அவர்களுக்கு ராஸ் அனுப்பிவிடுவார். ஆர்டர்களுக்கு ஏற்றபடி கொரியரில் ஏஜெண்டுகள் அனுப்ப வேண்டும். தன் வலைத்தளத்தை பயன்படுத்துவதற்காக ஒரு கமிஷன் கொடுத்தால் போதும். கிட்டத்தட்ட குட்டி அமேசான் வலைத்தள கான்செப்ட். மிகப்பெரிய ஹிட். அமெரிக்காவில் இருந்த பல நூறு ஏஜென்ட்கள் தங்கள் போதை மருந்தை பட்டியலிட்டார்கள். சில்க் ரோடு வலைத்தளத்தில் பலநூறு போதை மருந்துகள்... அதை வாங்க பல்லாயிரம் கஸ்டமர்கள். கமிஷன் தொகை லட்சங்களில் வரத் தொடங்கியது. ரிஸ்க்கும் குறைவு.ஆனால், பிரச்னைகள் வராமலா. புதுப் பிரச்சனைகள் வரத் தொடங்கின. கஸ்டமர்களிடமிருந்து புகார்கள். போதை மருந்து மாற்றி வருகிறது, குறைவாக வருகிறது, ஆர்டர்கள் வருவதே இல்லை... போன்ற புகார்கள் வரத் தொடங்கின. நாள் ஒன்றுக்கு வரும் ஆயிரக்கணக்கான புகார்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு?
கஸ்டமர் கேர்.டார்க்நெட்டில் பல குழுக்களில் வேலைக்கு ஆள் வேண்டும் என ராஸ் விளம்பரம் கொடுத்தார். 10 பேர்களை வைத்து டார்க்நெட்டில் ஒரு கஸ்டமர் சென்டரை உருவாக்கி விட்டார். இதனால் கஸ்டமர் கேர் தேவைகள் உடனே தீர்க்கப்பட்டன. ஏஜென்ட்களின் புகார்களும் தீர்க்கப்பட்டதால் இரண்டு பக்கமும் மகிழ்ச்சி. சில்க் ரோடு வலைத்தளத்தின் போதை வியாபாரம் கூரையைப் பிடித்துக் கொண்டு கொட்டியது.ஆனால், மீண்டும் ஒரு சிக்கல்.
போதை மருந்து ஏஜென்ட் எனும் பெயரில் பல போலியானவர்கள் உள் நுழைந்து பணத்தை சுருட்டத் தொடங்கினார்கள். சரியான போதை மருந்தைக் கொடுக்கவில்லை. கொடுக்கும் மருந்துகளிலும் எடை குறைவு. இந்தச் சிக்கல்களை கஸ்டமர் கேரால் தீர்க்க முடியவில்லை. இதனால் மீண்டும் கஸ்டமர்கள் அதிருப்தி அடைந்தார்கள். ராஸ் இந்தச் சிக்கலை தீர்க்க தீர்வுகளைத் தேடினார். இரண்டு தீர்வுகள் கிடைத்தன.முதலாவது ரிவ்யூ சிஸ்டம். அமேசான் வலைத்தளத்தில் இருப்பது போல் ஐந்து நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டன. போதை மருந்தின் எடை, அதை விற்கும் ஏஜென்ட்டுகளுக்கு நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டு கஸ்டமர்களை ரிவ்யூ செய்யக் கூறினார். இந்த ரிவ்யூ சிஸ்டத்தால் மிக எளிதாக கஸ்டமர் கேர் மாறுவது தடுக்கப்பட்டது. அடுத்ததாக டார்க்நெட்டில் இருந்த எஸ் கிராவ் எனும் முறையைப் பின்பற்றினார்.
டார்க்நெட்டில் பல நிறுவனங்கள் இந்த எஸ் கிராவ் சர்வீஸைக் கொடுத்தது. இதன்படி கஸ்டமர் ஒருவர் பணத்தைச் செலுத்தியவுடன் அதை இந்த எஸ் கிராவ் நிறுவனம் வைத்துக் கொள்ளும். ஏஜென்டிடம் கொடுக்காது. ஆனால், ஏஜென்ட்டிடம் பணம் வந்து விட்டதற்கு ஒரு உத்தரவாதத்தை மட்டும் கொடுக்கும். ஏஜென்ட் சரக்கை அனுப்பி வைப்பார். அதைக் கூறியவரின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும்.
கஸ்டமருக்கு சரக்கு சேர்ந்து விட்டது என்பது உறுதியானவுடன் அதற்கான பணத்தை இந்த எஸ் கிராவ், சர்வீசஸ் ஏஜென்டிடம் கொடுத்து விடும். இந்த முறையின் மூலம் கஸ்டமர்கள் ஏமாறுவது முற்றிலுமாக நின்று விட்டது. டார்க்நெட் இன் அமேசான் என்று சில்க் ரோடை வெறும் வியாபார மதிப்பில் மட்டும் கூறவில்லை. மாறாக கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்ட உயர்தரமான சர்வீஸ், மிக கச்சிதமான ஒரு அமைப்பையே சுட்டிக் காட்டுகிறோம். அப்படி ஒன்றை ராஸ் உருவாக்கி விட்டார். சிறியதாக இருந்தால் பரவாயில்லை. கோடிக்கணக்கில் போதை மருந்து வியாபாரம் செய்தால்? போலீசுக்கு தெரியாமலா இருக்கும்..?அப்படித்தான் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உள்ளே வந்தது.
(தொடரும்)
வினோத் ஆறுமுகம்
|