ஹன்சிகாவுக்குள் யோகிபாபு!
‘மச்சான் டேய் எல்லாம் மாறிப்போச்சுடா!’ ‘தங்கச்சி ஏன் மச்சானோட சண்டை போடுற!’ - இப்படி யோகிபாபு ஹன்சிகாவாக மாறிப்போனால் என்ன நடக்கும்? இதுதான் கதை என ஓரளவு நமக்கு புரியவைக்கிறது ‘பார்ட்னர்’ படத்தின் டிரெய்லர். டாம் பாய் சேட்டைகள், பையனைப் போல் நடை, பாவனை என அனைத்துமாக மாறி கியூட், நாட்டி ரோலில் ஆதியுடன் அதகளம் செய்யும் ஹன்சிகா நம்மை ஈர்க்கிறார்.
வாழ்த்துகள். நடிக்க வந்து 20 வருடங்கள் முழுமையாகிவிட்டதே..? நன்றி... நன்றி. 20 வருஷங்கள் ஆச்சா! ஓ மைகாட்! ஆமால்ல... முதல் படம் ‘ஹவா’ 2003ல வெளியாச்சு. ஆனால், என்னதான் வட இந்தியப் பொண்ணா இருந்தாலும் எனக்கு தமிழ் சினிமா கொடுத்த வரவேற்புதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. உண்மையாகவே அந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு..? சோஹைல் நலமா..?
ரொம்ப நல்லா இருக்கு. அவரும் நலம். ஆறு மாசமா திருமதி வாழ்க்கை! இன்னும் தாண்ட வேண்டிய கிணறு நிறைய இருக்கு. சோஹைல் செம ஸ்மார்ட், நல்லா பார்த்துக்கறார். திருமணத்திற்குப் பிறகு பெரிய மாற்றம் ஏதேனும் உண்டா? பொறுப்புகள் கூடியிருக்கா?
என்னுடைய முகவரி மட்டும்தான் மாறியிருக்கு. மத்தபடி எதுவும் மாறலை. அதிலும் அம்மா வீட்டுத் தெருவிலேயேதான் வீடு. ஒரே ஒரு மாற்றம் - இப்போ என் ரூம்ல ஒரு பார்ட்னர் இருக்கார்! பொறுப்புகள் அவருக்குதான் கூடியிருக்கு. என்னைப் பார்த்துக்கணும்ல! நான் ஜாலியா இருக்கேன். இப்பவும் நிறைய படங்கள், ஷூட்டிங் எல்லாம் போயிட்டுதான் இருக்கேன். ‘பார்ட்னர்’ - ஹன்சிகாவிற்குள் இருக்கும் யோகிபாபுவா?
ஹை! கதையக் கேட்கறீங்க பார்த்தீங்களா... சரி, டிரெய்லர்லயே காண்பிச்சுட்டாங்களே. ஆமாம்... கிட்டத்தட்ட அதுதான். ஆனால், அதன்பிறகு என்ன நடக்குது, நான் மாறினேனா, சரியாச்சா இல்லையா... என்னால் ஹீரோ ஆதி வாழ்க்கையிலே என்னென்ன குழப்பங்கள் உண்டாச்சு... இதெல்லாம்தான் கதை. கேட்கவே செம ஜாலியான கதையா இருந்துச்சு. உடனே ஓகே சொல்லிட்டேன்.
யோகி பாபுவின் நடை, பாவனைகளை எப்படி உங்களுக்குள் கொண்டு வந்தீங்க?
நான் யோகிபாபுன்னு எடுத்துக்கலை, டாம் பாய், பசங்க எப்படி நடப்பாங்க, பேசுவாங்க, எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வாங்கன்னு நிறைய கவனிச்சேன். நிறைய யோகிபாபுவின் கேரக்டர்கள், அவருடைய மேனரிசம் எல்லாம் கூட வீடியோக்கள், படங்கள்னு ஒண்ணு விடாம பார்த்து அப்படி செய்திருக்கேனா தெரியாது. ஆனாலும் முயற்சி செய்திருக்கேன். இந்தக் கால அகலமா வெச்சு நடக்கணும், சத்தமா சிரிக்கணும், யோகிபாபு பெரும்பாலும் இந்த டி-ஷர்ட்டை மேலே சுருட்டி விட்டுட்டே இருப்பார், அதெல்லாம் கூட கவனிச்சேன். ஷோல்டரைத் தூக்கின மாதிரி நடக்கணும். இப்படி நிறைய ஸ்டடி.
ஹீரோ ஆதி, இயக்குநர் மனோஜ் தனபால் பற்றி சொல்லுங்க?
ரெண்டு பேர் கூடவும் முதல் படம். டைரக்டர் தனபாலுக்கும் இது முதல் படம். ஆதி செம கூல், சில் ஃபிரெண்ட்லி. அதே சமயம் நடிப்பிலே கொஞ்சம் டஃப் கொடுக்கறார். சட்டுன்னு ஒரு சீனை முடிச்சிட்டு போயிடுவார். எதுக்குமே அலட்டிக்கறதே கிடையாது. மனோஜை முதல் பட இயக்குநர்னே சொல்ல முடியாது. எல்லாமே பெர்ஃபெக்ஷனா இருக்கணும். எங்கேயும் தப்பு நடக்கக் கூடாதுங்கறதிலே கறார் பேர்வழி. ஆனால், செட்டு செம ஜாலியா இருந்துச்சு. ‘ரோமியோ ஜூலியட்’, ‘ குலேபகாவலி’ படங்களுக்கு அப்பறம் திரும்பவும் ஒரு காமெடி படம். நானும் செம ஜாலி.
ரிலேஷன்ஷிப் அட்வைஸ் ப்ளீஸ்!என்னது அட்வைஸா! என்னமோ கல்யாணம் ஆகி எனக்கு ஒரு ஆறு வருஷம் ஆன மாதிரி கேட்கறீங்களே! இப்போதான் ஆறு மாசம் ஆகியிருக்கு. ஆனாலும் ஒண்ணு சொல்றேன்... எதையும் யாருக்காகவும் மாத்திக்காதிங்க. நீங்க நீங்களா இருங்க. அவங்களையும் அவங்களாவே இருக்க விடுங்க. உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?
‘காந்தாரி’, ‘கார்டியன்’, ‘ரவுடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஸ்ருதி’, ‘105 மினிட்ஸ்’, ‘மேன்’... இதெல்லாம் லைன் அப்ல இருக்கு. ஒவ்வொண்ணா அறிவிப்புகள் வரும். இப்போதான் சில ஹீரோயின் சப்ஜெக்ட்களும் கேட்க ஆரம்பிச்சிருக்கேன். 20 வருடங்கள் ஓடினது தெரியலை. இனிமேல் கதைகள் கேட்க வேண்டிய நேரம் வந்திடுச்சு. ‘மை 3’ வெப் சீரீஸ் கூட வரப் போகுது. இப்போதைக்கு இதுதான்.
திருமணம் எப்போது..? குழந்தை எப்போது..? இந்தக் கேள்விகளைக் கண்டால் என்ன தோணும்?
அப்பாடா நீங்களாவது கேள்விய மாத்தீட்டீங்களே! நல்லது. ஆக்சுவலி இந்தக் கேள்விகள் அதிகம் பெண்கள் கிட்டதான் கேட்கப்படுது. நமக்கும் கரியர் இருக்கு. திருமணம் ஆகி ஆறு மாசம்தான் ஆச்சு... இந்தக் கேள்வி எல்லாம் கேட்காதிங்க பாஸ்னுதான் சொல்லணும். ஆனால், நம்ம சமூகம் அப்படி பழக்கிடுச்சு. ஸோ அந்தக் கேள்விகளை எப்படி பாசிடிவ்வா ஹேண்டில் செய்யணுமோ செய்திடுவேன்.
ஏன் உடம்பைக் குறைச்சிட்டீங்க..?
ஹாஹா! ஹெல்த்தியா இருப்போமே. இன்னைக்கு அதுதானே அவசியம். ஒல்லியோ, பெல்லியோ எல்லோரும் ஆரோக்கியமா இருப்போம். அதுதான் முக்கியம்.
ஷாலினி நியூட்டன்
|