சம்பவம், சமூகம்,சட்டம்,மீடியா... ‘ஆர் யூ ஓகே பேபி’யின் எமோஷனல் சீக்ரெட்
‘‘இது ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியோ அல்லது நிகழ்ச்சியின் பின்புலத்தில் நடக்கற பிரச்னையோ நிச்சயமா கிடையாது...’’ பேசத் துவங்கும் முன்பே பொறுப்புத் துறப்பு வாசகத்துடன் ஆரம்பித்தார் இயக்குநர், எழுத்தாளர், கதையாசிரியை லட்சுமி ராமகிருஷ்ணன். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின், அபிராமி , ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஆர் யூ ஓகே பேபி’. இந்தப் படத்தை லட்சுமி ராமகிருஷ்ணனுடன் இணைந்து இயக்குநர் விஜய் தயாரித்திருக்கிறார். என்ன கதைக்களம்?
சமூகத்தில நடந்துகிட்டு இருக்கற, ஆனா சினிமாவில் பேசப்படாத, தேவைப்படற ஒரு கதை. அதைச் சுத்தி நிகழ்கிற சட்டப் பிரச்னை மற்றும் சமூகப் பிரச்னை சேர்ந்ததுதான் இந்தக் கதை. அதாவது ஒரு கதை அல்லது ஒரு சம்பவத்தை சட்டம் எப்படி கையாள்கிறது, சமூகம் எப்படி கையாள்கிறது, மீடியா அதை எப்படி கையாள்கிறது என்பதுதான் ‘ஆர் யூ ஓகே பேபி’.
தலைப்புக்கு என்ன காரணம்?
‘ஆர் யூ ஓகே பேபி’னு தமிழகம் முழுக்கவே சொல்ல வைத்தவர் விஜய் சேதுபதி. அவரைத் தவிர யாரும் இந்தத் தலைப்பை வெளியிட சரியான நபராக இருக்க மாட்டாங்கன்னு தோணுச்சு. அதனால்தான் அவர்கிட்ட கேட்டேன். அவரும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணிக் கொடுத்தார். இந்தக் கதை முழுக்க முழுக்க ஒரு பிறந்த குழந்தையைச் சுற்றி நடக்கும் பிரச்னைதான். அந்தக் குழந்தை ஓகேவா என்பதுதான் கதை.
மீடியா பின்னணியில் நடக்கும் சில காட்சிகள் உண்மையாகவே உங்களுக்கும் நடந்ததா இல்லை கற்பனையா?
மீடியாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே உயர் அதிகாரிக்கும் அதற்கு அடுத்த கட்டத்தில் வேலை செய்பவருக்கும் இடையே ஒரு சின்ன அரசியலோ அல்லது பிரச்னையோ இருந்துகிட்டுதான் இருக்கும். மீடியா என்கிறதால கொஞ்சம் பெரிதா பார்க்கறோம். இல்லைன்னு மறுக்க மாட்டேன்.ஆனால், எனக்கு நடந்துச்சானு கேட்டா எனக்கு இந்த மாதிரி பிரஷர் எல்லாம் கிடையாது. இன்னொரு விஷயம் - இந்தக் கதை லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றியோ அவருடைய சொந்த எமோஷன் பற்றியோ, பின்னணி பத்தியோ, ரியாலிட்டி நிகழ்ச்சிகள் குறித்த உண்மைகளோ எதுவும் கிடையாது.
சமுத்திரக்கனி, மிஷ்கின் இருவருமே பிசியாக இருக்கிறார்கள்... எப்படி பிடித்தீர்கள்?
ரெண்டு பேருமே கதையைப் படிச்சுப் பார்த்துட்டு கண்டிப்பா நடிப்பேன்னு சொன்னாங்க. அதேபோல இருவருமே இயக்குநர்கள். ஆனா, நடிகர்களா மட்டும்தான் ஸ்பாட்ல இருந்தாங்க. தங்களோட வேலை என்னவோ அதை சரியா செய்து கொடுத்தாங்க. இவங்க இல்லாம அபிராமி இந்தப் படத்தில் அடுத்த ஹைலைட். ரொம்ப வருசமாவே அபிராமி கூட ஒரு படம் பண்ணணும்னு முயற்சி செய்துட்டே இருந்தேன். இந்த முறைதான் கைகூடுச்சு. இந்தப் படத்தில் அபிராமி ரோலும் நிச்சயம் பேசப்படும்.
இன்னொரு சர்ப்ரைஸ் ஆன ஒரு கேரக்டர் இருக்காங்க. ‘இவங்கள எங்கே பிடிச்சீங்க’னு இயக்குநர் விஜய் கூட படம் பார்த்திட்டு கேட்டார். அவங்க பெயர் முல்லை அரசி. கூத்துப்பட்டறைல இருந்து வந்தவங்க. ரொம்ப போல்டான கேரக்டரை செய்திருக்காங்க. ‘ஆடுகளம்’ நரேன் ஒரு முக்கியமான ரோலில் நடிச்சிருக்கார்.
‘ஹவுஸ் ஓனர்’ படத்திற்குப் பிறகு ஏன் நிறைய இடைவேளை எடுத்துக்கிட்டீங்க?
என் கணவருக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்ல. அவரைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு வந்துச்சு. அடுத்து எனக்கு உடல்நிலை சரியில்லை. தொடர்ந்து பேரப் பசங்க வரவு... அம்மாவா சில கடமைகள் செய்ய வேண்டியதா இருந்துச்சு. எல்லாம் முடிஞ்சதும் இந்தப் படத்தை இப்ப முடிச்சிட்டேன். என்னதான் பெண்கள் மேல வந்தாலும், படிச்சாலும், சாதனைகள் படைச்சாலும் இன்னமும் ஒரு கண் கரியர்ன்னா இன்னொரு கண் குடும்பமாதான் அவங்களுக்கு இருக்கு. இதைத்தான் சமுதாயமும் அடிப்படையிலிருந்து சொல்லிக்கொடுத்து வளர்த்தெடுக்குது.
இப்ப மாற ஆரம்பிச்சிருக்கு. நிச்சயமா இந்த மாற்றம் பெரிய அளவில இருக்கும். ஆண் - பெண் பேதமே இல்லாமல் குடும்பம் என்பது ரெண்டு பேருக்கும் பொதுவானதா மாறணும்னு நினைக்கிறேன்.
படத்திற்கு இசை இளையராஜா... இந்த மேஜிக் நடந்தது எப்படி?
படத்துக்கு மிகப்பெரிய பலம் ராஜா சார் இசை. நான் நினைச்சுக்கூட பார்க்காத, கனவிலும் நினைக்காத ஒரு பாக்கியம். இந்தப் படத்துக்கு நிறைய இடங்கள்ல ராஜா சாருடைய பின்னணி இசை உயிர் கொடுத்திருக்கு. என்னுடைய மத்த படங்களுக்கு செய்த கிருஷ்ண சேகர்தான் இந்த படத்துக்கும் சினிமாட்டோகிராபி. எடிட்டரும் என்னுடைய முந்தைய படங்களுடைய எடிட்டர் பிரேம்தான். ‘ஆர் யூ ஓகே பேபி’ எப்படிப்பட்ட திரைப்படமாக இருக்கும்?
திரில்லர், ஹாரர், ரொமான்டிக்... இப்படி ஏதாவது ஒரு ஸோனருக்குள் இந்தப் படத்தைக் கொண்டு வரவே முடியாது. என்னைச் சுற்றி நான் கடந்து வந்த பல உண்மைச் சம்பவங்களில் இருந்து எடுத்துக்கிட்ட ஒரு கதை; சொல்ல வேண்டிய கதை. என்னால் எப்படிச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லியிருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|