கலர் கலர்...what கலர்... சினிமா கலர்!



ஒரு திரைப்படத்தில் டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் எனும் கலரிஸ்ட் என்பவரின் வேலை என்பது மிக முக்கியம். அவர்தான் படத்தின் இறுதித் தோற்றத்தை நிர்ணயம் செய்பவர். போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலையில் காட்சிகளை மெருகேற்றுவது இவர்களின் முக்கிய வேலை. ஒரு படம் வெற்றி பெற்றாலும் இவர்கள் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. ஆனாலும் அவர்கள் ஓசையில்லாமல் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அப்படி ஏராளமான படங்களில் கலரிஸ்ட்டாக பணிபுரிந்து வருபவர் கோபால் பாலாஜி.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘ஓ2’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஆடை’, கடைசி விவசாயி’, ‘நவரசா’, ‘இறுதிச் சுற்று’, ‘ஜெய்பீம்’, ‘டாணாக்காரன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உட்பட ஏராளமான படங்களுக்கு இவர்தான் கலரிஸ்ட். இப்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘பாபா பிளாக்‌ஷீப்’, ‘ஜோஸ்வா’, ‘கேப்டன் மில்லர்’ உட்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கலரிஸ்ட்டாக உங்கள் பயணம் எப்படி ஆரம்பமானது?பொதுவாக பலருக்கு நடிகராகணும், டைரக்டராகணும்னு லட்சியம் இருக்கும். எனக்கு விஷுவல் எஃபெக்ட் துறையில் பெரிய ஆளாக வரணும் என்ற ஆசை இருந்துச்சு. அப்போது அந்தத் துறைக்கு உதவியாளர்களை வேலைக்கு எடுக்கமாட்டார்கள். அதனால் உதவி எடிட்டராகத்தான் சினிமாவில் என்னுடைய பயணம் ஆரம்பிச்சது. உதவியாளராக ஒர்க் பண்ணிய முதல் படம் ‘கும்மாளம்’.

சினிமா டிஜிட்டலுக்கு மாறியதும் டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியனாக (DIT) ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அப்படி எடிட்டிங்கிலிருந்து DIT... DITயிலிருந்து கலரிஸ்ட்டாக மாறினேன்.
கலரிஸ்ட் என்பவரின் வேலை என்ன?ஒரு காட்சியை காலை முதல் மாலை வரை படம் பிடித்திருப்பார்கள். காலையில் ஒருவித லைட்டிங் இருக்கும். மாலையில் வேறுவித லைட்டிங் இருக்கும். அந்தக் காட்சி ஐந்து நிமிடம் திரையில் வருகிறது என்றால் ஒரே சமயத்தில் நடப்பதுமாதிரிதான் திரையில் காண்பித்திருப்பார்கள்.

கலரிஸ்ட்டாக எங்கள் வேலை என்ன என்று பார்க்கும்போது கலர் டைமிங்கை காட்சிக்குத் தகுந்த மாதிரி பிரித்துத் தரணும். காலை, மதியம், மாலை என காட்சிகளை பல பகுதிகளாகப் பிரித்து காண்பிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, படத்துக்கான லுக்கை நிர்ணயிப்பதிலும் எங்கள் பங்கு இருக்கும். அடிதடி படம் என்றால் சிவப்பு கலர், ஹாரர் த்ரில்லர் படங்கள் என்றால் நீலக் கலர் என்று கதைக்களத்துக்கு ஏற்றமாதிரி லுக் தரவேண்டும்.  

இயல்பாகவே மனிதனின் கண்கள் நெருப்பை பார்க்கும்போது அவர்களையும் அறியாமல் அச்சம் எழும். அப்படி கலர் மூலம் ஒரு மூட் எங்களால் உண்டாக்க முடியும். அதை ‘லுக் ஆஃப் த ஃபிலிம்’னு சொல்வோம். தவிர, நியூ டெக்னாலாஜியுடன் புதுப் புது கலர் டோன் தருவதும் எங்கள் வேலை.

கலரிஸ்ட்டுக்கான தேவை இப்போது எப்படி இருக்கிறது?

சினிமா ஃபிலிம்ல ஷூட் பண்ணும்போதும் கலரிஸ்ட்டுக்கான வேலை இருந்தது. ஆனால், RGB வேல்யூவுக்குள்தான் அவர்களால் வேலை செய்ய முடிந்தது. அப்படித்தான் 70, 80 வருட சினிமாக்களை பார்த்திருக்கிறோம்.நவீன டெக்னாலஜி வந்த பிறகு ஒரு படத்தோட 25 சதவீத கிராஃபிக்ஸ் வேலைகளை கலரிஸ்ட் மூலம் பண்ணிடலாம். ‘புதுப்பேட்டை’, ‘காக்கி’ (இந்தி) டைமிலிருந்து எல்லா படங்களும் டிஜிட்டல் கலர் கரெக்‌ஷன் தொழில்நுட்பத்தில் வெளிவர ஆரம்பித்தது. இன்றைய தொழில்நுட்பத்தில்  ஒரு திரைப்படத்தில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலை வந்துள்ளது.

நீங்கள் பணிபுரிந்த படங்களில், ஒரு கலரிஸ்ட்டாக உங்களுக்கு மனநிறைவு கொடுத்த படம் எது?

சன் நெக்ஸ்ட்டில் டால்பி விஷனில் ஒளிபரப்பு செய்கிறார்கள். அந்த தொழில்நுட்பம் உயர்தரமானது. அந்தத் தரத்தை தியேட்டர்களில் எதிர்பார்க்க முடியாது. ஐமேக்ஸ் மாதிரி ‘எல்இடி’ திரையில் சாத்தியம். டிவியில் ரிலீஸாகும் படமாக இருந்தாலும் சரி, தியேட்டரில் வெளியாகும் படமாக இருந்தாலும் சரி, எல்லா படங்களையும் டால்பி விஷனில்தான் பண்ணுகிறேன்.

அப்படி பண்ணிய ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘அந்தகாரம்’, ‘ஜெய்பீம்’, ‘டாணாக்காரன்’, ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற படங்கள் மனநிறைவைக் கொடுத்தது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது? குறிப்பாக எந்தக் காட்சி சிலாகிக்கும்படியாக இருந்தது?

இயக்குநர் கெளதம் வாசுதேவ்மேனன் டெக்னீஷியன்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர். ஒளிப்பதிவாளர் சித்தார்த் மிகப் பிரமாதமாக படமாக்கியிருந்தார். மும்பை லொகேஷன்களை பல படங்களில் பார்த்திருப்போம். திருச்செந்தூர் லொகேஷன் அப்படி அல்ல. அதற்காக ஒரு லுக் கொடுத்தபோது பேசப்பட்டது.

மற்ற டெக்னீஷியன்களுக்கு கிடைக்கும் பாராட்டு மாதிரி கலரிஸ்ட் டெக்னீஷியன்களுக்கு வெளிப்படையாக பாராட்டு கிடைக்கிறதா?

சூப்பர் ஹிட்டான படங்களில் டெக்னீஷியன்களின் ஒர்க் சிறப்பாக இருக்கிறது என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. நம்முடைய ஒர்க் மட்டும் தனியாகத் தெரி
கிறது என்றால் மற்ற துறையின் வேலை சரியில்லை என்பதுபோல் ஆகிவிடும். அதை மீறி சில படங்களுக்கு பாராட்டு கிடைக்கும். எனக்கு அப்படி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு மற்ற இண்டஸ்ட்ரியிலிருந்தும் பாராட்டு கிடைத்தது. சமீபத்தில் வந்த ‘மாடர்ன் லவ் சென்னை’க்கும் கிடைத்தது.

ஒளிப்பதிவாளருக்கும் கலரிஸ்ட்டுக்குமிடையே புரிதல் எப்படி இருக்க வேண்டும்?

சினிமா டிஜிட்டலுக்கு மாறுவதற்கு முன் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் என பல கட்டங்களுக்குப் பிறகுதான் எங்களிடம் படம் வரும். இப்போது அப்படி இல்லை. படப்பிடிப்பு நடக்கும்போதே எங்கள் வேலை ஆரம்பித்துவிடுகிறது. படப்பிடிப்பு நடக்கும்போதே படத்தோட லுக்கை டெவலப் பண்ண ஆரம்பித்துவிடுவோம். அந்த லுக்கை ஷூட் பண்ணும்போதே கேமராவில் பார்க்க முடியும். படம் முடித்த பிறகு கலர் கரெக்‌ஷன் பண்ணுவதிலிருந்து மாறி ஐம்பது சதவீத வேலைகளை படப்பிடிப்பு நடக்கும்போதே பண்ணுகிறோம். அதனால் லைட்டிங் ஷார்ப்பாக பண்ண முடியும்.

படம் உங்கள் கைக்கு வந்த பிறகு எங்கிருந்து உங்கள் வேலை ஆரம்பமாகும்?

சிலர் முழுப் படம் பார்த்துவிட்டு வேலையைச் செய்வதுண்டு. நான் முழுப் படம் பார்க்கமாட்டேன். ஏனெனில் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் சூழ்நிலை உருவாகும். சவுண்ட் இல்லாமல் பார்க்கும்போது அது சலிப்பைத் தரும். அதனால் முதன் முறையாக படம் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யம் கிடைக்க வேண்டும் என்பதால் ஷாட் பை ஷாட்டாக பார்ப்பேன். அதனால் ஒவ்வொரு ஷாட்டும் புதுசா தெரியும். அந்த அணுகுமுறையில் வித்தியாசமான ஒர்க் பண்ண முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.

ஒளிப்பதிவாளர்களில் யாருடன் அதிகமாக உங்களுக்கு ஒத்துப்போகும்? குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?

என் வேலையே அவர்களுடன்தான் என்பதால் இண்டஸ்ட்ரியில் இருக்கும் எல்லோரையும் எனக்குத் தெரியும். பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், நீரவ்ஷா, திரு, ‘ஜெயிலர்’ விஜய் கார்த்திக் என எல்லோரிடமும் நட்பு உண்டு. ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் தனித்துவமான ஸ்டைல் இருக்கும். பி.சி சார் லைட்டிங் வேறு, சந்தோஷ் சிவன் சார் லைட்டிங் வேறு. எல்லோரும் யூனிக் ஸ்டைலில் ஒர்க் பண்ணுகிறார்கள்.  

சில படங்களை ஊட்டி, கொடைக்கானல் என்று பசுமையான இடங்களில் வண்ணமயமாக  படமாக்கியிருப்பார்கள். அந்த மாதிரி படங்களில் உங்கள் வேலை எப்படி இருக்கும்?
என்னுடைய நண்பர் பண்ணிய படம் ‘அவள்’. அந்தப் படம் ஊட்டியில் எடுத்த படம். அது ஹாரர் படமாக இருந்ததால் குளுமைக்கு பதில் நீலக் கலர் சேர்த்திருப்பதை கவனித்திருக்கலாம்.
லண்டன் எப்போதும் கூலாக இருக்கும். ஆனால், பல படங்களில் லண்டன் மாநகரை பல வண்ணங்களில் காண்பித்திருப்பதை கவனித்திருக்கலாம்.

இயற்கையை அப்படியே காட்டுவதை விட அதற்காக ஒர்க் பண்ணும்போது அது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். பல படங்களில் இயற்கை வண்ணம் அப்படியே இருக்காது. இப்போது மக்களிடம் உள்ள செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்கள் அனைத்துமே அதிக தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. அதனால் நம்முடைய வேலை சிறப்பாக இருந்தால் மட்டுமே தனித்துவமாகத் தெரிவோம்.

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்