Pan India நடிகையாக ஜொலிக்கும் ஈரோட்டு பெண்!



சினிமா மீதுள்ள ஆசையால் எஞ்சினியரிங் முடித்த கையோடு திரைத்துறைக்கு வந்தவர் ஐஸ்வர்யா மேனன். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘தமிழ்படம் - 2’, ‘நான் சிரித்தால்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘வேழம்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சமீபத்தில் பான் இந்திய படமாக வெளிவந்த ‘ஸ்பை’ ஹிட்டடிக்கவே தெலுங்கு இயக்குநர்கள் ஐஸ்வர்யா மேனனை வைத்து கதை எழுதுமளவுக்கு அவருக்கு டோலிவுட்டில் ராணி உபசரிப்பு கிடைக்கிறதாம். புன்னகையுடன் நம்மிடம் பேசினார்.

தெலுங்கு சினிமாவில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். ‘ஸ்பை’ தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட். தெலுங்கில் என்னுடைய முதல் படமே பான் இந்திய படமா வெளிவந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.
என்னுடைய கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டது என்று படம் பார்த்தவர்களுக்கு தெரியும். லவ் டிராக், பனி மலையில் உருண்டு புரண்டு சண்டையிடும் ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த ரோல். நடிகையாக பெர்ஃபாமன்ஸ் பண்ணுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைச்சது.

தெலுங்கு ஆடியன்ஸிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைச்சது. நான் வெளியூர் பெண் என்பதால் தங்கள் வீட்டு பெண் மாதிரி என்னை பார்த்துக் கொண்டார்கள். என்னுடைய டீம்ல இருந்தவர்கள் எல்லோரும் டீன் ஏஜ் குரூப்ல இருந்தவர்கள். எல்லாருமே எனர்ஜியோடு, ஃப்ரெண்ட்லியா வேலை செய்தோம்.

‘ஸ்பை’ படத்துக்காக நீங்கள் துப்பாக்கி சுட கற்றுக்கொண்டீர்களாமே?

படத்துல எனக்கு ரா ஏஜென்ட் ரோல். லுக், துப்பாக்கி ஏந்தும் விதம் என எல்லாவற்றிலும் நிஜ ரா ஏஜென்ட்டை கண் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அதற்கு இயக்குநர் கேரி, அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதனால் நான், ஹீரோ நிகில் உட்பட முக்கிய நடிகர்கள் 6 மாதங்கள் துப்பாக்கி சுட பயிற்சி எடுத்துக்கொண்டோம். ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் பாபி என்பவர் எங்களுக்கு பயிற்சி கொடுத்தார். அதே சமயத்தில் பாக்ஸிங்கும் கற்றுக்கொண்டேன்.

நான் எப்போதும் ஃபிட்னஸ் கான்ஷியஸுடன் இருப்பேன். உடற்பயிற்சி எனக்கு பிடித்த செயல். ஆக்‌ஷன் படம் பண்ணுவதற்கு ஏதுவாக உடல் தகுதியோட இருந்ததால் அந்த கேரக்டரை எளிதாக சந்திக்க முடிந்தது.படத்தில் நிஜ துப்பாக்கியைத்தான் பயன்படுத்தினார்கள். அந்த துப்பாக்கியை யூஸ் பண்ணும்போதுதான் துப்பாக்கி அதிக எடையோடு இருக்கும் என்று தெரிந்தது. என்னால் அதன் எடையை கிலோ கணக்கில் சொல்லத் தெரியல. ஆனால், ஒவ்வொரு துப்பாக்கியும் எடை அதிகமா இருந்துச்சு.

துப்பாக்கி ஏந்திய பிறகு கை, தோள்பட்டை வலிக்கும். ரா ஏஜென்ட் ரோல் பண்ணியபிறகுதான் ரா அதிகாரிகள் நாட்டுக்காக செய்யும்  தியாகத்தை புரிஞ்சுக்க முடிந்தது.
ரா அதிகாரிகள் தங்கள் வேலையை வெளிப்படையாகவும் சொல்ல முடியாது, அவர்களின் வேலைக்கான அங்கீகாரமும் வெளிப்படையாகக் கிடைக்காது. ஆனாலும் அவர்கள் நாட்டுக்கு செய்யும் தியாகம் அதிகம். ‘ஸ்பை’ படத்துக்குப் பிறகு ரா அதிகாரிகள் மீது எனக்கு தனி மரியாதையே உண்டாச்சு.

படத்துல என்னுடைய கேரக்டர் பேர் வைஷ்ணவி. ஹீரோயின்களுக்கு அந்த மாதிரி ஆக்‌ஷன் ரோல் கிடைப்பது அரிது. ‘ஸ்பை’ படத்தில் நடித்தபிறகுதான் எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும் என்ற விஷயமே  தெரிஞ்சது. ஏனெனில், ரொமான்ஸ் படங்கள் பண்ணுவதுபோல் எளிதாக என்னால் என்னுடைய கேரக்டரை பண்ண முடிஞ்சது. இனிமேல் ஆக்‌ஷன் படங்கள் வந்தால் விரும்பிப் பண்ணுவேன்.

தெலுங்கில் கார்த்திகேயாவுடன் ஒரு படம் முடித்துள்ளேன். ‘ஸ்பை’ ஹிட்டுக்குப் பிறகு தெலுங்கில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு, மூன்று பெரிய வாய்ப்புகள் வந்துள்ளன. ‘ஸ்பை’ வெற்றி மூலம் ஒரு நடிகைக்கான சந்தோஷத்தை என்னால் அனுபவிக்க முடிந்தது. அந்தளவுக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரியிலிருந்து வரவேற்பும், பாராட்டும் கிடைச்சது.
தெலுங்கு படம் பண்ணப்போகிறோம் என்று தெரிந்ததும் படபடப்பு அதிகமாக இருந்ததா அல்லது நம்பிக்கை அதிகமாக இருந்ததா?

தமிழ், மலையாளம், கன்னடத்தில் ஏற்கனவே படங்கள் பண்ணியிருக்கிறேன். தெலுங்குல படம் பண்ணணும் என்பது என்னுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பு என்பதால் என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்துச்சு. இயக்குநர் கேரி, என்னை மனதில் வைத்துதான் கதை எழுதியதாகச் சொல்லி வாய்ப்பு வழங்கினார். ஒரு நடிகைக்கான அங்கீகாரம் எந்த மொழியில் கிடைத்தாலும் யோசிக்காமல் நடிப்பேன்.

சினிமாவில் பத்து வருடங்களாக இருக்கிறீர்கள்... உங்கள் வளர்ச்சி, ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா?

முன்பு தமிழில் அதிக ஃபேன் ஃபாலோயர்ஸ் இருந்தார்கள். அதுல இப்போது தெலுங்கு ரசிகர்களும் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களும் இப்போது என்னை ஃபாலோ பண்ண ஆரம்பித்துள்ளார்கள். புது மாநிலம், புது ஆடியன்ஸுக்கு என்னைப் பிடிச்சிருக்கிறதை நினைக்கும்போது மனசுக்கு சந்தோஷத்தக் கொடுத்துள்ளது. பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பை என்னுடைய வளர்ச்சியாகப் பார்க்கிறேன்.

கதை கேட்கும்போது உங்கள் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

என்னுடைய வேடத்துக்கு முக்கியத்துவம் இருக்கணும். சும்மா ஒரு சீன் இரண்டு சீன்ல தலைகாட்டிட்டு போற மாதிரி இல்லாம கதையில் எனக்கான முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படம் செய்கிறேன்.பாலிவுட் நடிகை அலியா பட் மீது அப்படி என்ன ஈர்ப்பு... அவர்களைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறீர்கள்?

யெஸ். அலியா பட் சிறந்த நடிகை. அவர் ஏற்று நடிக்கும் வேடங்கள் வேற லெவலில் இருக்கும். எனக்கும் அவர் மாதிரி வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை. அந்த மாதிரி வேடம் கிடைத்தால் அடிச்சு தூள் கிளப்புவேன்.

திரையில் ரொமான்ஸ் பண்ண விரும்பும் ஹீரோ யார்?

நாக சைதன்யா, அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், தோல்விகள் மூலம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

நான் ஈரோட்டு பெண். சினிமாவில் நுழையலாம் என முயற்சித்த நாட்களில் சில நிராகரிப்புகளை சந்தித்திருக்கிறேன். வெற்றியோ, தோல்வியோ வாழ்க்கையில் எல்லாமே பாடம்தான்.

எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ப்ரொஃபஷனல் ஃபீல்டில் இருக்கிறார்கள். சினிமாவில் யாரும் இல்லை. முன்னேறுவதற்கு யாரும் இங்கு சொல்லித் தரமாட்டார்கள். முயற்சி திருவினையாக்கும் என்பது மாதிரிதான்.

சில முயற்சிகள் தோல்வியடையலாம். சில முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கலாம். எல்லாமே முயற்சியில்தான் இருக்குது. நிராகரிப்பு, தோல்விகளை பாடமாக, அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் பார்வையில் சிறந்த ஆணுக்கான தகுதிகள் எவை?

அமைதி, அன்பு, நேர்மை, சிந்தனைத் திறன் உடையவராக இருக்கணும். ஆணாதிக்கம் இல்லாதவராக இருக்கணும். மொத்தத்தில் ஜென்டில்மேனாக இருக்கணும்.

எஸ்.ராஜா