தெருப் பெயரில் சாதி அடையாளத்தை நீக்கப் போராடி வென்ற பட்டதாரி பெண்…



முதல்வரின் தனி செல்லுக்கு அளித்த மனுவால் நடந்த மாற்றம் இது

பெயர்ல என்ன இருக்குனு சாதாரணமாகக் கேட்குறாங்க. அது சரியாக இருந்தால் பிரச்னை இல்ல. ஆனா, அதுவே சாதி அடையாளமானால் என்ன செய்றது?
என் தெருப்பெயரைச் சாதிப் பெயராக மாத்தினதாலயே இவ்வளவு பிரச்னையும். சாதி அடையாளத்தை நாங்க ஏன் தூக்கி சுமக்கணும் என்பதே எனக்குள்ள கோபம். அதான், மக்களிடம் கையெழுத்து பெற்று மனு கொடுத்துப் போராடினேன்.

இப்ப எங்க தெரு உருவானப்ப இருந்த பெயரையே பஞ்சாயத்துல தீர்மானமாக இயற்றி அங்கீகரிச்சிருக்காங்க...’’ கோபம் கொப்பளித்தாலும்கூட உற்சாகம்பொங்க சொல்கிறார் அனுசுயா சரவணமுத்து. தன் தெருப்பெயர், சாதிப் பெயராக மாறிப்போனதை மாற்ற வேண்டி கடந்த ஓராண்டாக போராடி வந்தவர்.
முதல்வரின் தனி செல்லுக்கு மனு அனுப்பிய பிறகே எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவரின் ஊராட்சி மன்ற அலுவலகம் தீர்மானம் இயற்றி தெருப்பெயரை மாற்றியதுடன், இந்திரா நகர் என்கிற பெயர்ப் பலகையையும் வைத்திருக்கிறது.

இதைப் பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் டுவிட்டரில் பதிவிட, பலரும் அனுசுயாவின் சாதி அடையாள நீக்கப் போராட்டத்தை வியந்து போற்றுகின்றனர். ‘‘என் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆனந்தவாடினு ஒரு கிராமம். 1990கள்ல தமிழக அரசு இங்குள்ள மக்களுக்குத் தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்தாங்க. 

அப்ப நான் பள்ளியில் படிச்சிட்டு இருந்தேன். என் குடும்பம் உள்பட நிறைய குடும்பங்கள் இங்க குடியேறினோம். இப்ப இங்க நூறு குடும்பங்கள் இருக்கு. அப்போ, சிமென்ட் ரோடு எல்லாம் போட்டபிறகு இதற்கு இந்திரா நகர்னு பெயர் வச்சாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இதன்பெயர் இந்திரா நகர்தான்.

அதன்பிறகு போஸ்ட்ல இந்திரா நகர்னு வந்தது. ஆதார் வந்தப்ப எல்லோரும் இந்திரா நகர்னு பெயர் கொடுத்திட்டு வந்தோம். அது நமக்கு ரிட்டன் வந்தப்ப அதுல ‘ஆதிதிராவிடர் தெரு’னு போட்டிருந்தது. 2010 - 2011னு நினைக்கிறேன். அப்ப நான் பி.இ இரண்டாம் ஆண்டு படிச்சிட்டு இருந்தேன். ‘நாம் இந்திரா நகர்னுதானே எழுதிக் கொடுத்தோம். அவங்க இப்படி தந்திருக்காங்களே’னு கோபம் வந்தது. ஆனா, இந்திரா நகர்னு வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள்ல இருந்ததால அப்ப அதை பெரிசா எடுத்துக்கல. பிறகு, ஆதார்தான் எல்லோரும் கட்டாயமாகப் பயன்படுத்தணும்னு சொன்னாங்க இல்லையா... அப்பதான் பிரச்னை ஆரம்பிச்சது.

பேங்க் மற்றும் பேன் கார்டுல ஆதார் கார்டை இணைக்கணும்னு சொன்னப்ப ஆதிதிராவிடர் தெருனு வந்தது. பி.எஃப்பை இணைக்கிறப்ப அதிலும் ஆதிதிராவிடர் தெருனு வந்தது. ஆதார் கார்டுக்கும், பேன் கார்டுக்கும் மிஸ்மேட்ச் ஆச்சு.  பிறகு, எனக்கு வேலைக்கான ஆஃபர் லெட்டர்லயும் ஆதிதிராவிடர் தெருனுதான் வந்தது. என் ஐடி கார்டுல ஆதிதிராவிடர் தெருனு இருந்தது. ஒரு தனிப்பட்ட நபரே இவ்வளவு பிரச்னைகளைச் சந்திக்கிறப்ப, எங்க தெருவுல வசிக்கிற மற்ற மக்களும், அடுத்த தலைமுறையினரும் இன்னும் எப்படியெல்லாம் பிரச்னைகளைச் சந்திப்பாங்களோனு தோணுச்சு.

என் பெயர் என்ன, நான் என்ன பதவியில் இருக்கேன், என் வொர்க் என்ன மாதிரியானதுனு தெரிந்தால் போதும் இல்லையா... அதைவிடுத்து சாதியை சேர்ப்பது சாதிய அடுக்குமுறைகள் உள்ள இந்தியா மாதிரியான ஊர்கள்ல பிரச்னைதானே! என் தெருப் பெயரை வச்சு என் சாதியை எளிதாக அடையாளப்படுத்த முடியும்தானே... அதனால, என்ன செய்றதுனு யோசிச்சேன். 

சிலரின் அடையாள அட்டைகள்ல ஆதிதிராவிடர் தெருனும், கீழத்தெருனும் எல்லாம் இருந்தது. எங்க வீட்டுலகூட சில அடையாள அட்டைகள்ல அப்படிதான் போட்டிருந்தது. இதுல பாதி அடையாள அட்டைகள்ல இந்திரா நகர்னும் இருந்தது. இதுக்கு ஏதாவது பண்ணியே ஆகணும்னு முடிவெடுத்தேன்.

என் அப்பா சரவணமுத்து திமுகவின் கடைநிலைத் தொண்டர். அவரும், அம்மா அனுராதா உள்ளிட்ட வீட்டுல உள்ள எல்லோரும் எனக்கு சப்போர்ட் செய்தாங்க. உடனே, என் வேலையைத் தொடங்கினேன்...’’ என்கிறவர், அடுத்து நடந்ததை நிதானமாக விவரித்தார். ‘‘கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு மனுநாள் அன்று மனு அளிச்சேன். இதை என் நண்பர்கள் இரவிபாகினி மற்றும் பாஸ்கர் ஆகியோருடன் கலந்துரையாடி, அவங்க உதவியுடன் செய்தேன்.

அந்த மனுல, ‘பாதகம் விளைவிக்கும் வகையில் சாதி, மதப் பெயர்களை ஊர், தெருக்களுக்கு வைப்பது சமூக நீதியல்ல. ஆதிதிராவிடர் தெரு, கீழத்தெரு, காலனித் தெரு என சாதி அடையாளத்துடன் எங்கள் தெருப் பெயர் அமைந்துள்ளதால் சாதி  சமய பேதமற்று சமூகமாற்றத்தின் முதல்படியாக இந்திரா நகர் என பெயர் மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’னு எழுதினேன்.

அப்புறம், ஏற்கனவே இந்திரா நகர்னு பெயர் இருக்கு. அதையே நீங்க எல்லா ஆவணங்களிலும் மாத்தணும்னு வலியுறுத்தினேன். அவங்க மனுவை பி.டி.ஓ.விற்கு அனுப்பினாங்க. சரி, நடவடிக்கை எடுப்பாங்கனு நினைச்சேன். 

அப்புறம், குவாலியர்ல வேலை கிடைச்சு போயிட்டேன். மறுபடியும் தேர்தல் அடையாள அட்டையை பார்க்கிறப்ப என் முகவரி இந்திரா நகர்னு இருந்தது. ஆனா, தொகுதி விவரத்துல ஆதிதிராவிடர் தெருனு போட்டிருந்தது. அப்புறம், ரேஷன் கார்டை செக் பண்ணினால் அதிலும் ஆதிதிராவிடர் தெருனே இருந்தது.

எனக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு. அப்ப என் நண்பர் அய்யனார்னு வக்கீலாக இருக்கார். அவர்கிட்ட புலம்பினதும் மறுபடியும் மனு கொடுக்க சொன்னார். உடனே, ஆன்லைன்ல முதல்வரின் தனி செல்லுக்கு மனு அனுப்பினேன். ஆனா, அது ரிஜெக்ட் ஆகிடுச்சு. பிறகு, மறுபடியும் ரீ அப்பில் செய்தேன்.  

அப்புறம், ஊருக்குக் கிளம்பிட்டேன். அந்நேரம் தில்லி ஏர்போர்ட்ல சோமசுந்தரம்னு மூத்த வழக்குரைஞரைச் சந்திச்சேன். அவர், Gazette notificationனு சொல்லப்படுற அரசிதழ் அறிவிப்பு கொடுத்திட்டாங்களானு கேட்டார். இல்லைனா அதை ஃபாலோ பண்ணுமானு ஐடியா கொடுத்தார். சரினு பிடிஓ அலுவலகம் வந்து கேட்டேன். இப்ப புது பிடிஓ வந்திருந்தார். அவர்கிட்ட முதல்வர் செல்லுக்கு அனுப்பின மனுவை சொன்னேன். அவர் ஊராட்சி மன்றத் தலைவரைப் பேசச் சொன்னார். எங்க பஞ்சாயத்துத் தலைவரும் பேசினார். அப்புறம், ஆய்வு பண்ணினாங்க.
 
பிறகு, ஊர் பஞ்சாயத்துல பேசினேன். ஆனா, அவங்க தீர்மானம் இயற்றல. அப்புறம், அழுத்தம் கொடுத்த பிறகே ஊர் பஞ்சாயத்துல தீர்மானம் இயற்றினாங்க. பிறகு, போர்டு நீங்களே வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அப்ப நான், ‘இது ஊர் சம்பந்தப்பட்ட பிரச்னை. தனிப்பட்ட முறையில் என்னால் இந்திரா நகர்னு போர்டு வைக்க முடியாது. அப்புறம், ஊராட்சியில் இருந்து வச்சால்தான் கவனம் பெறும்’னு வலியுறுத்தினேன்.  

பிறகு, ஒரு மாசம் கழிச்சு போர்டு அடிச்சாங்க. அடுத்து, பெயர் எழுத ரெண்டு வாரம் எடுத்துக்கிட்டாங்க. பிறகு, அதை எடுத்து மாட்ட சிலநாட்கள் ஆக்கினாங்க. ஒருவழியாக இந்திரா நகர்னு பெயர்ப் பலகையை மாட்டினாங்க. அந்நேரம் இதை ஒரு நிகழ்ச்சியாக, மற்ற சமுதாய மக்களையும் அழைச்சு செய்யணும்னு நினைச்சிருந்தேன். 

காரணம், எங்களுக்கு இது இந்திரா நகர்னு தெரியும். அது மற்றவங்களுக்கும் தெரியணும் இல்லையா. அதனாலதான். ஆனா, பஞ்சாயத்துல அப்படியெல்லாம் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க. சரினு நாங்களே எங்க தெரு நபர்கள் உள்பட தெரிஞ்சவங்க சிலரை அழைச்சுக்கிட்டோம்.

இப்ப என் பணியைப் பார்த்திட்டு, எம்.பி ரவிக்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்துல வாழத்து சொன்னதுடன் விசிகவின் கோரிக்கையும் இதுதான்னு குறிப்பிட்டு இருந்தார். விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் செய்யணும்னு இந்தக் கோரிக்கையைக் கொடுத்திருக்காங்க. நான் தனிப்பட்ட முறையில் அதே கோரிக்கை வச்சிருந்தேன். இதுதவிர, என் தொகுதி எம்எல்ஏவும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கரும் என் பணியைப் பாராட்டி வாழ்த்தினார்.

உண்மையில், முதல்வரின் தனிப்பட்ட செல்லுக்கு அனுப்பிய மனுவினாலும், அதைத் தொடர்ந்து ஃபாலோ செய்ததினாலுமே இவ்வளவு மாற்றங்களும் நடந்தது...’’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் அனுசுயா, ‘‘இப்ப என்னுடைய கோரிக்கை எல்லாம் இந்த மாதிரியான மனுவை தனிப்பட்ட நபர் எல்லாராலும் போடமுடியாது. அதனால, அரசு இந்த விஷயத்தை கையில் எடுத்து ஊர்கள்ல, கிராமங்கள்ல உள்ள தெருப்பெயர்கள்ல சாதி அடையாளம் இல்லாமல் செய்யணும்னு கேட்டுக்கிறேன்...’’ என வேண்டுகோள் வைத்தார்.   

பேராச்சி கண்ணன்