Must Watch
 கும்ரா சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, பெரிய ஹிட் அடித்த ‘தடம்’ தமிழ்ப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்தான் ‘கும்ரா’. ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கலாம். மர்மமான ஒரு மனிதன் பெரிய வீட்டுக்குள் புகுந்து அங்கே தனியாக இருக்கும் ஒருவரைக் கொடூரமாக கொலை செய்கிறான். தடயங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறான். இந்தக் கொலைச் சம்பவம் முக்கிய செய்தியாகிறது.
காவல்துறை அதிகாரி ஷிவானியிடம் கொலையாளியைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கொலை நடந்த இடத்துக்கு அருகில் வசிக்கும் எல்லோரையும் விசாரிக்கிறார் ஷிவானி.
ஒரு இளைஞன் எடுத்த செஃல்பியில் கொலைகாரனும் இருக்கிறான். அந்த கொலைகாரன் அர்ஜுன் என்று தெரியவர, அவனைப் பிடித்து விசாரிக்கிறது காவல்துறை. தனக்கு எதுவும் தெரியாது என்று மன்றாடுகிறான் அர்ஜுன். அப்போது போதையில் ரகளை செய்த சூரஜ் என்பவனைப் பிடித்து வருகின்றனர். சூரஜும், அர்ஜுனும் ஒரே மாதிரி இருக்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை.
ஒரிஜினலுக்கு நியாயம் செய்திருக்கிறது இந்தப் படம். இரட்டை வேடங்களில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆதித்ய ராய் கபூர். படத்தின் இயக்குநர் வர்தன் கேட்கர்.
ராவணசுரா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப் படம், ‘ராவணசுரா’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. முன்னாள் காதலி கனகாவிடம் ஜூனியர் வக்கீலாக வேலை செய்யும் ரவீந்திரா, எப்போதும் ஜாலியாக, பொறுப்பில்லாமல் இருக்கிறான். இந்நிலையில் ஒரு மருந்து நிறுவனத்தின் முதலாளியான விஜய் தல்வார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். விஜய் கொலை செய்வதை நேரடியாகப் பார்த்த ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி சாட்சிகள் கூட வலுவாக உள்ளன.
விஜய்யின் மகளான ஹாரிகா அப்பாவை வெளியில் கொண்டு வருவதற்காக கனகாவைத் தேடி வருகிறார். இந்த வழக்கை மறுத்து விடுகிறார் கனகா. ஹாரிகாவின் மீது ரவீந்திராவுக்கு ஈர்ப்பு ஏற்பட, கனகாவை சம்மதிக்க வைக்கிறான். இன்னொரு பக்கம் இந்த வழக்கில் உள்ள உண்மைகளை விசாரிக்க காவல்துறை அதிகாரி ஹனுமந்த் நியமிக்கப்படுகிறார். விஜய் கொலை செய்த முறையிலே இன்னொரு கொலையும் நடக்கிறது.
உண்மையில் அப்பாவியாக இருக்கும் ரவீந்திரா யார் என்பதே திரைக்கதை. சுவாரஸ்யமான திரைக்கதை அடுத்தடுத்த டுவிஸ்டுகளால் வேகமெடுக்கிறது. ரவீந்திராவாக கலக்கியிருக்கிறார் ரவி தேஜா. படத்தின் இயக்குநர் சுதீர் வர்மா.
ஆக்சிடெண்ட் மேன் ஹிட்மேன்’ஸ் ஹாலிடே
ஒரு நல்ல, தரமான ஆக்ஷன் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘ஆக்சிடெண்ட் மேன்: ஹிட்மேன்’ஸ் ஹாலிடே’ எனும் ஆங்கிலப்படம். தன் சகாக்களைக் கொன்று விட்டோம் என்ற குற்றவுணர்வில் தத்தளிக்கிறான் ஹிட்மேன் மைக். அதனால் ரிலாக்ஸ் செய்ய ஒரு தீவுக்கு வந்திருக்கிறான். ஒரு நாள் எதேச்சையாக பழைய நண்பன் ஃப்ரெட்டை சந்திக்கிறான் மைக். வயதானவரான ஃப்ரெட் ஆன்லைனில் ஒரு பெண்ணுடன் பழகி ஏராளமான பணத்தை இழந்திருக்கிறார். அதனால் சோகத்துடன் இருந்த ஃப்ரெட்டை தன் வீட்டிலேயே தங்க வைக்கிறான் மைக்.
இருவரும் சேர்ந்து சின்னச் சின்ன ஹிட்மேன் வேலைகளில் ஈடுபடுகின்றனர். அந்த ஏரியாவில் புகழ்பெற்ற ஒரு பெண் தாதா இருக்கிறார். அவருடைய மகனுக்கு பெரிய ஆபத்து இருக்கிறது. இந்நிலையில் ஃப்ரெட்டும், மைக்கும் பணயக்கைதிகளாக அந்த தாதாவிடம் மாட்டிக்கொள்கின்றனர். தன் மகனை ஆபத்திலிருந்து காப்பாற்றினால் ஃப்ரெட்டை விடுவிக்கிறேன் என்று மைக்கிடம் சொல்கிறார் அந்த தாதா. பழைய பன்னீர்செல்வமாக மைக் திரும்ப, பரபரக்கிறது திரைக்கதை. ஆக்ஷன் பிரியர்கள் தவறவிடக்கூடாத இப்படத்தை கிர்பி சகோதரர்கள் இயக்கியிருக்கின்றனர்.
2018
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பெரிய ஹிட் அடித்த மலையாளப்படம், ‘2018’. இப்போது ஸோனி லிவ்’வில் தமிழில் காணக்கிடைக்கிறது. முன்னாள் ராணுவ வீரன் அனூப். பார்வையற்றவரான பாஸியின் கடையில் அவருக்கு உதவி செய்வது அனூப்பின் வழக்கம். பக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் பெண்ணின் மீது அனூப்புக்கு காதல்.
இன்னொரு பக்கம் மீனவர்களான மத்தச்சனும், அவரது மகனும் புயலில் மாட்டிய மீனவர்களைக் காப்பாற்றுகின்றனர். மத்தச்சனின் மகன் நிக்சன் மாடலாகும் கனவில் இருக்கிறான். வசதியான வீட்டுப் பெண்ணுடன் காதல் கொண்டிருக்கிறான். ஒரு டாக்ஸி டிரைவர் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகளை தனது வண்டியில் அழைத்துக்கொண்டு கேரளாவைச் சுற்றக் கிளம்புகிறார். இவர்கள் எல்லோரையும் 2018 ல் வந்த வெள்ளம் இணைக்க, விறுவிறுவென்று செல்கிறது நெகிழ்ச்சியான திரைக்கதை.
கேரளாவில் நிகழ்ந்த வெள்ளப் பாதிப்பை அருகிலிருந்து பார்த்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது இப்படம். டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், நரேன், லால், அபர்ணா பாலமுரளி, இந்திரன்ஸ் என எல்லோருமே தங்களுக்குரிய பாத்திரத்தை கச்சிதமாகச் செய்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஜூட் அந்தணி ஜோசப்.
தொகுப்பு: த.சக்திவேல்
|