சிறுகதை - உறுமீன்



‘‘பாலு! எதிர்த்த டீக்கடையில மூணு டீ சொல்லேன்...’’ நிமிர்ந்துகூட பார்க்காமல் வேலையில் மும்முரமாக இருப்பதாக காட்டிக்கொண்டு எதிரே ஸ்டூலில் உடல் முழுவதும் பொருந்தாமல், அசௌகரிகமாக, மிதிவண்டியின் கேரியரில் ஏற்றப்பட்ட உப்பு மூட்டை போல புட்டங்கள் இருபுறமும் கொஞ்சமாக சரிந்துகொண்டிருக்க, அசைந்து அசைந்து சொல்லிவிட்டு, ஸ்டூலின் மையத்தில் சரியாகப் பொருத்திக்கொள்ள முயன்றவாறே மோதிரங்கள் அடங்கிய டிரேயைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து ரத்னவேல் கேட்டான்.

“அக்கா டீ குடிக்கிறீங்களா? காபி சொல்லவா? இங்க டீ சூப்பரா இருக்குங்க்கா. இஞ்சியெல்லாம் தட்டிப்போட்டு, குடிச்சிப்பாருங்க. பாப்பா உங்க பொண்ணா? டீ குடிக்குமா? பால் சொல்லவாக்கா...’’ என்று சிரித்த முகமாகக் கேட்டான் ரத்னவேல்.எங்கேயோ பார்த்தவாறு, ஏதோ யோசனையில் இருந்த பாலு, வேலுவின் குரலுக்கு சட்டென சிறிது அதிர்ந்து நிகழ்காலத்துக்கு வந்தவனாய் “என்ன! என்ன சொன்ன வேலு?’’ என பதறினான்.‘‘ஆமாம்பா... கடைப்பையன் தங்கக்கம்பி நீட்டப் போயிருக்கான். மூணு டீ சொல்லிட்டு வா...’’ என்று திரும்பவும் சொன்னான் வேலு.

அங்கே பாதியாக உடைக்கப்பட்ட பானையில் உமி நிரப்பப்பட்டு, ஊதுகுழலால் நன்றாக ஊதி, சின்ன குகையில் வைத்து தங்கம் உருக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
சிவந்த நெருப்பில் உருகத் தொடங்கிய மஞ்சள் தங்கக் குழம்பென, கொதிக்கத் தொடங்கிய இதயத்தோடு யோசனையாக பதில் எதுவும் சொல்லாத வேலுவை பார்த்துக்கொண்டே, சிறிது தளர்ந்து வேட்டியை அவிழ்த்து நன்றாக முடிந்து கொண்டு டீ சொல்வதற்காக எதிர்த்த கடைக்குச் சென்றான் பாலு.

கடை ஓரமாக, வியாபாரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அது தினம் ஊரில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றி பேசிப்போகும் நண்பர்கள், உதவிகேட்டு வரும் உறவினர்கள், சாயங்கால நேரத்தில், கடையில் உள்ளவர்கள் டீ குடிக்கும் நேரத்தில் வந்து கலந்துகொண்டு கிளுகிளுப்பான கதைகளைச் சொல்லிச் சிரித்து டீயும் வடையும் இலவசமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்பவர்கள், சும்மாவேனும் கடையை எட்டிப்பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்கானது.அங்குதான் எப்பொழுதாவது பாலு வந்து அமர்வான்.பாலுவும் ரத்னவேலுவும் பங்காளி வீட்டு அண்ணன் தம்பிகள். பாலுவின் பெரியப்பா பையன்தான் வேலு. என்றாலும் இருவரும் நண்பர்கள் போலத்தான் இருப்பார்கள்.

பாலுவின் தந்தை இராமசாமிக்கு ஐந்து பையன்கள். பாலு மூன்றாவது பையன். வேலுவின் தந்தை துரைக்கு ரொம்ப காலம் குழந்தை இல்லாமல் வெகுநாள் கழித்துதான் வேலு பிறந்தான்.
வீட்டிற்கு ஒரே பையன் என்பதால் இருபத்தியோரு வயதிலே வேலுக்கு திருமணம் முடிந்து, வரிசையாக மூன்று பெண்குழந்தைகள். வேலுவின் அப்பா, வேலுக்கு பெண் பார்த்த போது பெருகிக் கிடந்த சொத்தனைத்தையும் நிர்வாகம் பார்க்கும் பெண்ணாகத் தேடினார். அழகுக்கு முக்கியம் தரவில்லை. வயது குறைந்த பெண்ணாக இல்லாமல், வேலுவின் வயதிற்கு சமமான வயதுடைய பெண்ணாகத் தேர்ந்தெடுத்து, திண்டுக்கல்லிலிருந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

பாலுவிற்கோ, இரண்டு அண்ணன்களுக்கும் திருமணமாகி, மூன்றாவதாக இவன் முறை வரும்போது வேலு மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாகியிருந்தான். இருப்பினும் இரண்டு பேரும் மிக நெருங்கிய நண்பர்கள் போலவே இருந்தனர். இருவருக்குள் எந்த ஒளிவு மறைவும் இருந்தது கிடையாது.பாலுவின் மனைவி கமலா, வயதில் மிகச்சிறியவள். கிராமத்துப் பெண். அழகி. கணவன் பட்டறை வேலை செய்து கொண்டு வரும் சொற்பப் பணத்தில் குடும்பம் நடத்தி அழகான மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று, வருமானம் கையைக் கடிக்கும் பொழுது மாடு வளர்த்து பால் கறந்து விற்று கட்டுச்செட்டாகக் குடும்பத்தை நடத்தினாள்.

சென்ற வருடம் மூன்று பெண் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்று வந்தாள் கமலா. அங்குதான் கமலாவின் அக்கா ராணி இருக்கிறாள். ராணியின் கணவன் பிரபலமான நகைக்கடையில் வேலைபார்த்து வந்தான்.திருவிழாவுக்கு வந்த நகைக்கடை முதலாளியின் மனைவி சியாமளா கண்களில் பாலுவின் மூத்த மகள் தாரிணி தென்பட்டாள். எத்தனை பெரிய இடம். எவ்வளவு வசதியானவர்கள். திடீரென ஒரு நாள் வீட்டிற்கு வந்து அவர்களது மகனுக்கு தாரிணியை பார்த்து பூ முடித்து நிச்சயதார்த்த நாளைக் குறித்துவிட்டு சென்றுவிட்டனர்.

பாலுவிற்கு எதுவுமே புரியவில்லை. எல்லாம் நாடகத்தில் நடப்பது போலிருந்தது. இன்னும் ஒருவாரம்தான் நிச்சயத்துக்கு இருந்தது. கையில் எதுவும் இல்லை. அங்கும் இங்கும் போட்டு பொரட்டி தாரிணிக்கு கழுத்தில் போடுவதற்கும், கையில் போடுவதற்கும் கொஞ்சம் நகைகளைச் செய்து வைத்திருந்தான். பணக்கார சம்பந்தம்... நிச்சயதார்த்தத்தின்போது கல்யாணச் செலவிற்காக ஒரு ஐம்பதாயிரம் பணமாவது கொடுக்க வேண்டுமென்று சகலை முத்து கட்டாயமாகச் சொல்லி விட்டான்.

காலையில் எழுந்ததும் பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் வேலுவிடம் கேட்டுப்பார்கலாம் என யோசனை தோன்ற சாப்பிடாமல் வந்துவிட்டான்.என்னதான் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் இதுவரை ஒரு பைசாகூட வேலுவிடம் கேட்டதே இல்லை.டீக்கடையில் மூன்று டீ சொல்லிவிட்டு கண்ணாடி சீசாவில் கைவிட்டு இரண்டு ஊட்டி வர்க்கிகளை வேலு கணக்கில் எடுத்துக்கொண்டான் பாலு.

வேலு தன்னைப் பார்த்ததும் உணவருந்த அழைப்பான் என எண்ணி சாப்பிடாமல் வந்தது எவ்வளவு பெரிய தவறு... பக்கம்தானே என்று நயா பைசா எடுத்துவரவில்லை. இந்த பசி எவ்வளவு மானங்கெட்டது என்றால் அவமானப்படுத்தியவனை, அவமானத்தை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவன் காசுலேயே திங்கச் சொல்கிறது.எப்பொழுது கடைக்கு வந்தாலும் “வா பாலு...’’ என்று அழைக்கும் வேலு, இன்று அழைக்கவே இல்லை. என்ன செய்தோம், ஏன் இவ்வாறு புறக்கணிக்கிறான் என ஒன்றுமே நினைவுக்குள் இல்லை. ஆனால், அவமானப்படுத்துகிறான் என்பது மட்டும் புரிந்தது.

குனிந்து தராசில் எடை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த வேலு அரைக்கண்ணால் பாலு டீக்கடைக்கு செல்வதைப் பார்த்தான். குழம்பிய முகத்தோடும் சிறிது அவமானத்தோடும் அவன் நகர்ந்து செல்வது வேலுவுக்கு மகிழ்ச்சி அளித்தது. நேற்றிரவு பிரேமா சொன்னது நினைவுக்கு வந்தது.“ஏங்க... உங்களுக்கு விசயம் தெரியுமா? உங்க தம்பி பாலுவோட பொண்ணுக்கு கல்யாணமாம். நம்ம பொண்ணுக்கு பேசிப் பார்க்கலாம்னு வச்சிருந்தோம்ல நாகப்பட்டினம் வரன்... அந்த இடம்தானாங்க. நம்ப பொண்ணை விட ஐந்து வயசு இளசு தாரிணி. அதுக்கு என்ன இப்ப கல்யாணத்துக்கு அவசரம்? அதுவும் நம்ப பார்த்து வச்சிருக்கிற இடமேதான் முடிக்கணுமா?

உங்க தம்பி இதைப்பத்தி ஏதாவது சொன்னாரா? அந்த கல்லுளி ஊமச்சி கமலா நேத்து வரைக்கும் கொல்லைல வந்து அடுப்பெரிக்க விறகெடுத்துப்போறா. நானும் வாயத் தொறந்து சொல்லுவா சொல்லுவான்னு பார்க்கிறேன்... வாயத் தொறக்கலைங்க. அப்பறம் சௌந்தரவல்லி அத்தை வந்திருந்தாங்க... அவுங்க சொன்னாங்க பணத்துக்கு ரொம்ப அலைஞ்சிட்டு இருக்காங்களாம். உங்கள்ட்ட கேட்க வந்தாலும் வருவாரு. பணம் கொடுப்பீங்களா, மாட்டீங்களான்னு எனக்குத் தெரியாது.

சொல்றத சொல்லிட்டேன்...’’கூறிவிட்டு திரும்பிப் படுத்த பிரேமாவிற்கு பாலுவின் மனைவி கமலாவின் மேல் இனம் தெரியாமல் கோபம் வந்தது. இருப்பதிலேயே அழகானவன் பாலு. அவனை கமலா கட்டிக்கொண்டாள். அழகான மகள்களையும் பெற்றுக்கொண்டாள். இப்பொழுது தன் மகளுக்குப் பார்த்த வரனையும் மகளின் அழகைக் காண்பித்து சாதித்து விட்டாள்.
ஆயிரம் சவரன்களைக் கொட்டி வைத்திருக்கிறோம். இங்கே விட்டுவிட்டு அங்கு போய் திருமணம் செய்கிறார்கள்...

வேலுவிற்கு பிரேமா கூறியதைக் கேட்டதும் வெகு நேரம் உறக்கம் வரவில்லை. இதுவரை எந்த விசயத்திலும் பாலுவிடம் தோற்கும் இடம் வாய்த்ததே இல்லை. இது முதல் முறை. தன் மகளுக்கு இளையவளான பாலுவின் மகளுக்கு திருமணமா? மெல்லிய வெறுப்பொன்று சிறிது சிறிதாக அனல் வீசி பெரிதாகத் தொடங்கியது.

காலையில் பாலு வந்ததுமே காசுக்காகத்தான் வந்திருக்கிறான் என வேலுவுக்கு நன்கு தெரிந்து விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் எதுவாவது சொல்லி கையேந்தப் போகிறான். எப்படியும் தனித்திருக்கும்போதுதான் பணம் கேட்பான். அதனால் இருவரும் தனித்தில்லாமல் எதாவது ஒருவரை கூட வைத்துக் கொண்டு எதோ ஒன்றை பேசிக்கொண்டே இருந்தான் வேலு.
அதன் உச்சமாகத்தான் பாலுவை டீ வாங்கி வரச்சொன்னது. பாலுவும் நிலைமையை நொந்துகொண்டு டீயை வாங்கி வந்து கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் போய் நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

இன்று வேலுவிடம் பணம் வாங்கினால்தான் சமையல் காரருக்கு, பந்தல்காரருக்கு அட்வான்ஸ் கொடுக்க முடியும். அமாவாசை முடிந்து வளர்பிறையில்தான் அட்வான்ஸ் கொடுக்கவேண்டும் என கமலா சொன்னாள். மண்டபம் தேவை இல்லை. எதிர்த்த செல்லப்பா வீட்டு மாடியில் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள சொல்லிவிட்டார்கள்.அப்படியே திரும்பி தன் பக்கம் பார்க்கிறானா என வேலுவைப் பார்த்தான். அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை.

காசுக்கு இல்லேன்னாலும் இதுவரை கௌரவத்துக்கு எந்த குறைச்சலும் இருந்ததில்லை. பாலு என்றால் தரமாக நகை செய்பவன் என பெயர் எடுத்தவன். அப்பா கோவிந்தசாமிப் பத்தர் காலத்தில் சுற்றுவட்டாரத்தில் திருமாங்கல்யம் செய்ய வேண்டுமென்றால் அவரைத் தேடித்தான் வருவார்கள்.‘காப்பவுன்ல்ல மா பவுனு எடுத்துப்பான் பத்தன்னு சொல்றதெல்லாம் சரிதான். அந்த மாப் பவுனுக்கு பொடி ஊதி குப்பை சேர்த்து வாய்க்கால் வெட்டி அலசி எடுத்தா, அந்த அலசுன கூலிக்குக் கூட அந்த பவுனு கட்டாது; வராது. வர்ற காசுல சிக்கனமா சமைச்சி சாப்பிடவே பத்தல.

போன வாரம் தங்கராசு பத்தர், நந்தன் குடும்பத்தோட சயனைட் சாப்பிட்டத நினைக்கும்போதே பகீர்ங்குது. இதுல எங்கேர்ந்துதான் இவனுங்க தண்ணியடிக்க கத்துக்கிறான்களோ... பாதி பயலுக குடலு அவுஞ்சே செத்தர்ரானுங்க...’ என ஏதேதோ நினைத்தபடி நிமிர்ந்தான் பாலு.‘மணி ஒண்ணாகிட்டே... வேலு சாப்பிடக்கிளம்பிடுவானே! எப்படி பணம் கேக்கறது. கமலா சொல்லிச் சொல்லி அனுப்புனாளே, எப்படியாவது கையில கால்ல விழுந்தாவது பணம் வாங்கியாரச்சொன்னாளே! நாம அவனைப் பார்க்கறது இந்நேரம் தெரியாம இருக்குமா? வேணுமின்னே பணம் கேட்க வந்தத தெரிஞ்சிகிட்டேதான் பண்றானோ!

சே... சே அப்படி இருக்காது. எவ்வளவு பண்பானவன். எத்தனை நாள் நமக்கு சோர்ந்திருக்கும் பொழுதெல்லாம் தைரியம் சொல்லிருக்கான். கேவலம் இந்தப் பணத்துக்காகவா இப்படிச் செய்வான். உண்மையிலேயே வியாபார மும்முரத்துல இருக்கான் போல. நமக்குதான் ஏன் இவ்வளவு கௌரவம். போய் கேட்டுப்பார்ப்போமே...’ என்று இருக்கையை சற்று வேலுவின் அருகே நகர்த்தினான் பாலு.

அதைக் கவனிக்காதது போல் கல்லாப் பெட்டியின் பூட்டைப் பூட்டி இழுத்துப் பார்த்துக் கொண்டு, ‘‘அய்யய்யோ... நீ உட்கார்ந்திருந்ததையே மறந்துட்டேன் பாரு. சள்ளை வியாபாரம், ஒண்ணும் பெருசா இல்லை. மெட்டி வியாபாரம் வெட்டி வியாபாரம்பாங்க. மெட்டியும், கொலுசும் பேசிப் பேசி தொண்டை தண்ணி வத்திருச்சி. நூறு ரூபாய் லாபத்துக்கு கிடந்து அல்லப்பட வேண்டியதா இருக்கு.

ஆசாரி... சாப்பிட்டு வந்து வேலைய பார்த்துக்கலாம் கிளம்புங்க...’’ என்றதும் ஆசாரி ஊதிக் கொண்டிருந்த ஊதுகுழலை கிடைமட்டமாக வைத்து விட்டு செம்புக்கம்பி, தங்கக்கட்டிகளை பத்திரமாக டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு திறந்திருந்த அலமாரிக் கதவில் தொங்கிக்கொண்டிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டார்.

பரிதாபமாக அமர்ந்திருந்த பாலு, “இந்தாப்பா வேலு... உன்ட ஒரு நல்ல விசயம் சொல்லணும்பா. நம்ப தாரிணிக்கு நல்ல வரன் ஒண்ணு தகஞ்சிருக்கு. எல்லாம் உனக்கும் பழக்கமான இடம்தாம்பா. வர்ற வியாழன் நிச்சயதார்த்தம் பண்ணலாம்னு பேசிருக்கோம். நீதான் என்னை விட பெரியவன். நீதான் வாழ்வாங்கு வாழ்றவன். ராசியானவன். நீதான் முன்னாடி நின்னு செஞ்சிவிடணும்பா... அதுதான் எனக்கும் மரியாதை, பார்த்துக்கோ...” என்றான்.

“அதுக்கென்னப்பா... அதெல்லாம் நிறைவா செஞ்சிடலாம்...” இரை வந்து விழுவதற்காக ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு மாதிரி பாலுவை அவமானப்படுத்தும் சந்தர்ப்பத்திற்காக நின்றான் வேலு.சடாரென நாற்காலியிலிருந்து எழுந்த பாலு,  வேலுவின்  கைகளைப் பிடித்துக்கொண்டு “எனக்கு ஒரு லெட்சம் பணம் வேணும். உனக்கு சும்மா கொடுக்க இஷ்டம் இல்லேன்னா பாளவாய் பக்கம் மானாவாரி நிலம் இரண்டு மா இருக்கு. அத அடகா வச்சிக்கிட்டு பணம் கொடு. தை மாசம் வந்ததும் நிறைய திருமாங்கல்யம் ஆர்டர் வரும். நிலத்தை திருப்பிக்கறேன்...” என்றான்.

டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேகமாக வரும்பொழுது நீர் தழும்பி ஊற்றுமே... அதுபோல கம்பீரமாக ஆரம்பித்த குரல் இரவல் கேட்டுத் தளும்பி தழுதழுத்து நின்றது.
அவ்வளவு எளிதில் இவனுக்கு பணத்தைக் கொடுத்துவிடக்கூடாது. ஆனால், இவனை விட்டு விடவும் கூடாது. சொந்தக்காரர்களிடம் மரியாதை மிக்கவன் இவன் என வியாபாரப் புத்தி கணக்கிட்டது. சட்டென பதறியது போல் நடித்து “என்ன பாலு... காலையிலேர்ந்து இங்க உட்கார்ந்திருக்க... முன்னாடியே கேட்க மாட்டீயா? நீதான் பார்த்தியே... வியாபாரமே ஆகல. நீ வேற லெட்ச ரூபாய் கேட்கற. இப்பதான் மதுரை வியாபாரிகிட்ட ஆர்டரும், பணமும் கொடுத்தேன்.

கொஞ்ச முன்னாடி சொல்லக்கூடாதா? சரி சாயங்காலம் வா. வியாபாரம் வருதான்னு பாப்போம். வந்தா உனக்கு பணம் தர்றேன்பா...’’ என்றபடி வாசலை நோக்கி பாலுவை அலைக்கழிக்க வைத்துவிட்டு அவன் முகம் சோர்வடைவதைக் கண்டு உள்ளுக்குள் மிதப்பாக நடக்க ஆரம்பித்தான் வேலு.பணம் கிடைக்குமா கிடைக்காதா எனத் தெரியாமல், வேலுவை விட்டால் வேறு வழியும் இல்லாமல், யாரிடமும் பணம் கேட்டு பழக்கமும் இல்லாததால், என்ன செய்வதென்றே தெரியாமல் , “சரிப்பா... சாயங்காலம் கட்டாயம் தந்துடுவியா? உன்னை நம்பிதான் நான் வேற யாருட்டையும் கேக்கல. எனக்கு உன்னை விட்டா வேற ஆளு இல்லப்பா...’’ பாலு கெஞ்சினான்.அதைப் பார்க்க பிஸ்கட்டுக்காக எம்பிக் காட்டும் நாயாகத் தோன்றியது வேலுவிற்கு. இதழோரத்தில் குருதி கலந்த மிருகச் சிரிப்பொன்று பூத்தது.

 - தேவி லிங்கம்