மக்கள் தொடர்பு தூதரான ராப் பாடகர்!
சமீபத்தில் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கான மக்கள் தொடர்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் கிம் நம் ஜூன். இவருக்குப் பெரிய அறிமுகம் தேவையில்லை. ஆம்; இளசுகளின் மத்தியில் புகழ்பெற்ற இசைக்குழுமான ‘பிடிஎஸ்’ஸின் தலைவர் இவர். ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை எல்லா பட்டி தொட்டிகளிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.
 தென் கொரிய ராப் பாடகர், பாடலாசிரியர், ரெக்கார்டு புரடியூசர்... என பன்முகங்களைக் கொண்ட கிம்மின் வயது 28தான். அவரது வாழ்க்கைப் பயணம் எல்லோருக்கும் உந்துதல் அளிக்கக்கூடியது. ஆர்எம் (ராப் மான்ஸ்டர்) என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கிம், தென்கொரியாவின் தலைநகரான சியோலில் பிறந்தவர். கிம்முக்கு நான்கு வயதாக இருந்தபோதே அவரது குடும்பம் கோயாங் நகரத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டது.
 குழந்தைப்பருவத்தில் அம்மாவுடன் சேர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான ‘பிரண்ட்ஸ்’-ஐ பார்ப்பதுதான் கிம்மின் முக்கிய பொழுதுபோக்கு. இந்த தொடரைப் பார்த்துதான் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார் கிம். பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் கெட்டிக்கார மாணவனாக இருந்தார் கிம். கவிதைகளுக்காக பல விருதுகளை அள்ளியிருக்கிறார். மட்டுமல்ல, பள்ளிப்பருவத்திலேயே கவிதைகளுக்கான இணையதளங்களில் தனது கவிதைகளைப் பதிவிட்டு வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அப்போது அவரது வயது 11. அந்த வயதிலேயே பெரிய இலக்கியவாதியாக வேண்டும் என்று கனவு காணத் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் எதேச்சையாக தென் கொரியாவின் புகழ்பெற்ற ஹிப்-ஹாப் இசைகளைக் கேட்டிருக்கிறார் கிம். அவருக்குள் பலவிதமான வேதியியல் மாற்றங்களைச் செய்திருக்கிறது அந்த இசை. இலக்கியவாதியாக வேண்டும் என்ற கனவு, இசைக்கலைஞனாக வேண்டும் என்று மாறிவிட்டது. இசை ஆர்வம் கிம்முக்குள் அதிகரித்துக்கொண்டிருந்த காலத்தில் அவருடைய பள்ளி ஆசிரியர் அமெரிக்கன் ராப் பாடகர் எமினமின் படைப்புகளை அறிமுகம் செய்திருக்கிறார். எமினமின் ராப் பாடல்கள் அவருக்குள் ஒளிந்து கொண்டிருந்த ராப் பாடகரை அடையாளம் கண்டுகொள்ள உதவியது.
முதல் முறையாக கிம்மின் மனதுக்குள் பாடல் எழுத வேண்டும் என்ற பொறி தட்டியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு பாடலை எழுதி, அதை பிரிண்ட் எடுத்து நண்பர்களிடம் கொடுத்திருக் கிறார். நண்பர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைக்க, தனது 13வது வயதில் பாடலாசிரியராக வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்தார். அப்போது அவர் நடுநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதினான்கு வயதில் உள்ளூரில் இயங்கிவந்த ஒரு ஹிப்-ஹாப் குழுவில் சேர்ந்து ராப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். பள்ளிக்குச் செல்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு, பாடக் கிளம்பிவிடுவார்.
ஆனால், இன்னொரு பக்கம், ஒரு மாணவனாக அவரது ஐக்யூ அளவு 148ஆக இருந்தது. மொழி, கணக்கு, அயல்நாட்டு மொழி, சமூகப் பாடங்கள் சார்ந்த பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் தேசிய அளவில் முதன்மை மாணவராக இருந்தார் கிம். அதனால் அவரது பெற்றோர் கிம்மின் இசை ஆர்வத்துக்கு தடை போட்டனர். படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்த கிம்மை வலியுறுத்தினார்கள்.
பெற்றோர்களுக்காக ஆரம்பத்தில் இசையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, படிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால், அவரால் முன்பு போல படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எப்படியோ அம்மாவை சமாதானப்படுத்தி இசைத்துறைக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றார். அதாவது, ‘‘உன்னோட பிள்ளை நாட்டிலேயே முதன்மையான ராப் பாடகராக வேண்டுமா அல்லது மாணவர்களின் தர வரிசையில் 5 ஆயிரமாவது இடத்தைப் பெற வேண்டுமா...’’ என அம்மாவிடம் கேட்டிருக்கிறார். மகனின் இசை விருப்பத்துக்கு அம்மா பச்சைக்கொடி காட்ட; அதற்குப் பிறகு நிகழ்ந்தது வரலாறு; கிம் ‘பிடிஎஸ்’ஸுக்குள் நுழைந்தது, அதில் தலைவரானது, அவருடைய ஆல்பங்கள் எல்லாம் தனிக்கதை.
த.சக்திவேல்
|