கதை நாயகனாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்!
‘‘‘ரொம்ப நல்ல படம் எடுத்திருக்கீங்கடா... மனசுக்கு திருப்தியா இருக்கு...’ அப்பா சொன்ன வார்த்தைகள் இவை...’’ அப்பாவின் ஆசீர்வாதம் கிடைத்த மனநிறைவுடன் பேசுகிறார் ‘அழகிய கண்ணே’ பட நாயகனும், பட்டிமன்றப் புகழ் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகனுமான லியோ சிவகுமார். இயக்குநர் சீனு ராமசாமியின் தம்பி விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டி, இயக்குநர் பிரபு சாலமன், சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’.
 ‘‘மதுரையிலிருந்து சினிமாவில் சாதிக்க நினைச்சு சென்னை வரும் இளைஞன்; அவனுக்கு இங்கே நடக்கும் சவால்கள், கடினமான சூழல்கள், இதற்கிடையிலே ஒரு பெண் மேலே காதல் உண்டாகி திருமணமும் நடக்கும். இவன் வாழ்வியலே கடினமான சூழலில் இருக்க உடன் மனைவி, ஒரு குழந்தை என இன்னும் வாழ்க்கை சவாலாக மாறுகிறது. அவன் சினிமா கனவு நினைவானதா, குடும்ப சூழலும் மாறியதா... இதைச் சுற்றி நடக்கும் உணர்வுப் போராட்டம்தான் ‘அழகிய கண்ணே’ படம்...’’ அப்பா பாணியிலேயே பளிச்சென தமிழில் கணீரென பேசத் தொடங்கினார் சிவகுமார்.

‘‘அப்பா வழியிலே பள்ளி, கல்லூரி நாட்களில் பேச்சுப்போட்டிகள், பட்டிமன்றங்கள்ல எல்லாம் கலந்துகிட்டுதான் இருந்தேன். ஆனால், அப்பாவின் இடமும், அவருடைய அனுபவமும் நிச்சயம் என்னால் அடைய முடியாது. அவர் லெஜெண்ட். சின்ன வயதிலிருந்தே எனக்கு சினிமா ஆர்வம் அதிகம். நான் படிச்சது மதுரையில்.
நான் படிக்கவேண்டும் என்பதில் அப்பா கறாராக இருந்தார். திண்டுக்கல் செயின்மேரீஸ் பள்ளியில் அப்பாவின் மாணவர்தான் பாலாஜி சக்திவேல் சார். அவருடைய ‘வழக்கு எண் 18/9’ படத்தின்போதே என்னுடைய புகைப்படங்கள் எல்லாம் அனுப்பியிருந்தேன். அந்த சமயம் நான் அந்தக் கதைக்கு செட்டாகலை...’’ என்னும் சிவகுமார் முதன்முறையாக ‘அநீதி’ என்னும் குறும்படம் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.
‘‘‘அநீதி’ குறும்படத்தை வெளியிட்டுக் கொடுத்தது சீனுராமசாமி சார். அந்தப் படம் பார்த்திட்டு ‘மாமனிதன்’ படத்திலே ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். தொடர்ந்து உதயநிதி அண்ணனுடைய ‘கண்ணை நம்பாதே’ படத்தில் ஒரு பாத்திரம் கிடைச்சது. இதுதான் எனக்கு சினிமா அறிமுகங்களா அமைஞ்சது. இப்ப ‘அழகிய கண்ணே’ படம். ஹீரோவாதான் நடிக்கணும் என்பதெல்லாம் இல்லை. இந்தப் படத்திலும் நான் கதையின் நாயகனாகத்தான் நடிச்சிருக்கேன். ‘மாமனிதன்’ படத்தின் வேளையில்தான் எனக்கு சீனுராமசாமி சாருடைய சொந்தத் தம்பி பழக்கமானார். அவர் ஒரு கதை சொல்லி நான் அதற்கு சரியா இருப்பேன் எனக் கேட்டார்.
அப்படி ஆரம்பிச்சதுதான் ‘அழகிய கண்ணே’. சீனு ராமசாமி சார் போலவே மனிதம், உணர்வுகள், வாழ்வியல் சார்ந்த கதை சொல்லலில் விஜயகுமாரும் கெட்டிக்காரர். இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும். நான் இந்தப் படத்தில் சினிமா வாய்ப்பு தேடும் இளைஞன். அதனால ஜனநாதன் சார் மாதிரியான ஒரு இயக்குநர், இயக்குநராகவே கதைக்குத் தேவைப்பட்டார். எதிர்பாராதவிதமாக அவரை நாம இழந்திட்டோம். அடுத்து பிரபு சாலமன் சார்கிட்ட கதை சொல்ல, உடனே சரி சொன்னார். படம் முழுக்கவே ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிச்சிருக்கார்.
தொடர்ந்து விஜய் சேதுபதி அண்ணன், மக்கள் செல்வனாகவே சிறப்புத் தோற்றத்தில் நடிச்சிருக்கார். இந்தக் கதையின் நாயகிக்கு காதலி, மனைவி, குழந்தைக்கு அம்மா... இப்படியான பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.
இதனால் சில நாயகிகள் குழந்தைக்கு அம்மாவா எனக் கேட்டு நடிக்க சம்மதிக்கலை. ஆனால், சஞ்சிதா ஷெட்டி கதையின் ஆழம் புரிஞ்சு அருமையா நடிச்சுக் கொடுத்திருக்காங்க. இவங்க இல்லாம சிங்கம்புலி சார், அமுதவாணன், ஆண்ட்ரூஸ் அண்ணன், ராஜ்கபூர் உள்ளிட்டோர் நடிச்சிருக்காங்க...’’ என்ற விஜயகுமார், படம் எப்படி வந்திருக்கிறது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
‘‘அப்பா படம் பார்த்திட்டார். ரொம்ப சந்தோஷமா ‘மனசுக்குத் திருப்தியா இருக்கு’ அப்படின்னு சொன்னார். இவன் என்ன ஆவானோ, எப்படி சாதிப்பானோ என்கிற தயக்கம் அப்பாகிட்டே இருந்தது. ஆனாலும் என்கிட்டே பெரிதா வெளிப்படுத்தினதில்லை. படம் பார்த்துட்டு அப்பா சொன்ன வார்த்தைகள் மனநிறைவா இருந்துச்சு.
‘கடல்’, ‘தலைவா’, ‘பைரவா’, ‘காடன்’ உள்ளிட்ட படங்கள் செய்த ஏ.ஆர்.அஷோக் குமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கார். ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘சுந்தரபாண்டியன்’, ‘மதயானைக் கூட்டம்’, சமீபத்திய ‘அயோத்தி’ படங்கள் வரை இசையமைத்த என்.ஆர்.ரகுநந்தன் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். எடிட்டர் ரகுநந்தன். இன்னொரு சுவாரஸ்யம் - அப்பாவின் பால்ய நண்பர்தான் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் சேவியர் சார். அவருடைய இன்னொரு தயாரிப்பு நிறுவனமான எஸ்தெல் என்டர்டெயினர் இந்தப் படத்தைத் தயாரிக்க கண்ணன் ரவி சார் வெளியிடுகிறார். படம் முழுக்க முழுக்க ஒர் இளைஞனின் வாழ்வியலை அமைதியாக எடுத்து வைக்கும். பார்த்துட்டு சொல்லுங்க...’’ நிறைவுடன் சொல்கிறார் விஜயகுமார்.
ஷாலினி நியூட்டன்
|