லேட்டாக பூத்தாலும் லேட்டஸ்ட்டாக பூத்த லில்லியம் மலர்கள்!
ஊட்டி தாவரவியல் பூங்கா தரும் சர்ப்ரைஸ் கிஃப்ட்
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்பது ரஜினியின் பஞ்ச் வசனம். அதே ஸ்டைலில் லேட்டாக பூத்தாலும் லேட்டஸ்ட்டாக பூப்பேன் என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்ந்து மணம் பரப்பும் லில்லியம் மலர்கள். ஒன்றல்ல, இரண்டல்ல, பல்லாயிரக்கணக்கான தொட்டிகளில் ரோஸ், ஆரஞ்ஜ், மஞ்சள் வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்துக்குலுங்க, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.
 தமிழகத்திலேயே, உலகம் முழுக்க இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரம் ஊட்டி. அதில் நகரின் நடுநாயகமாக இருக்கும் அரசு தாவரவியல் பூங்காவிற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த பூங்காவை 175 ஆண்டுகளுக்கு முன்பு மெக்ஐவர் என்ற வெள்ளைக்காரர் உருவாக்கினார். அழகு கொஞ்சும் இந்தப் பூங்காவின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக 125 ஆண்டுகளாக கோடை காலத்தில் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் மே மாதம் 19 அல்லது 20ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ளாத தமிழக, இந்திய விவிஐபிக்களே இல்லை எனலாம். இந்த மலர்க்கண்காட்சிக்காக பல்லாயிரக்கணக்கான ரக மலர்ச் செடிகள் பல மாதங்கள் லட்சக்கணக்கான பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்டு தோட்டக்கலைத்துறையினரால் பராமரிக்கப்படும்.
சரியாக மே 20 - 25 தேதிகளில் இந்தப் பூக்கள் அத்தனையும் பூத்துக்குலுங்கும் வண்ணம் அது உருவாக்கப்படும். உலகத்திலேயே இங்கே மலராத மலர்கள் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அத்தனை மலர் நாற்றுக்களும் இங்கே நட்டு வளர்க்கப்படும்.
 இந்த ஆண்டும் மலர்க் கண்காட்சி வழக்கம்போல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. மலர்க் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், ஆஸ்டர், பால்சம், கிரைசாந்தமம் உள்பட பல்வேறு வகை மலர்ச்செடிகள் 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு மலர்ந்திருந்தன..
இதேபோல் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், மரங்களைச் சுற்றிலும் என 200க்கும் மேற்பட்ட ரகங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்து காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பூத்துக் குலுங்கிய வண்ணமலர்களால் பூங்காவே வண்ணமயமாகக் காட்சி அளித்தது. மயில், மான், வரையாடு இப்படி நம் மாநில விலங்குகள்; பறவைகள் உருவங்கள் மலர்களாலேயே வடிவமைக்கப்பட்டு இருந்தன. முக்கியமாக, ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகளானதை நினைவுகூரும் வகையில், இந்தப் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவர் சிலை இங்கே நிறுவப்பட்டுள்ளது.
மலர்க்கண்காட்சி முடிந்து 15 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னமும் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை. அன்றாடம் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அதற்குக் காரணம் இப்போது மலர்ந்துள்ள லில்லியம் மலர்கள். இவை மட்டுமே இப்போது 30 ஆயிரம் தொட்டிகளில் வரிசைப்படுத்தப்பட்டு மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மணமும், வண்ணமும் வருவோர் அனைவரையும் ஈர்க்கின்றன.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை நீடிப்பு காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறையாது இருக்கும் நிலையில் அவர்கள் எல்லாம் சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக தாவரவியல் பூங்காவிற்கு வந்து இந்த மலர்களை கண்டுகளித்துச் செல்கிறார்கள். இந்த மலர்கள் ஏன் இந்த ஆண்டு லேட்டாகப் பூத்தது... இதன் சிறப்பம்சம் என்ன... என்பது பற்றி இயற்கை ஆர்வலரும், தொடர்ந்து இந்த ஊட்டி மலர்க் கண்காட்சியைப் பற்றி தகவல் சேகரித்து ஆவணப்படுத்துபவருமான மதிமாறனிடம் பேசினோம்.
‘‘ஒவ்வொரு வருஷமும் இந்த மலர்கள் 35 முதல் 40 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் நாற்றுக்களை நட்டு மலர்க் கண்காட்சிக்கு மலர்கிற அளவில் வளர்த்தெடுப்பார்கள். அப்படித்தான் இந்த ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தொடர் மழை மற்றும் இங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த வேலை தடைபட்டிருந்தது. மழை விட்டு லேட்டாகவே பணியாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள். எனவே ஒரு மாத காலம் தாமதமாகவே இந்த நாற்றுக்கள் தொட்டிகளில் விட்டு வளர்க்கப்பட்டன. அதனால் இப்போது ஒரு மாதம் கழித்தே இந்த பூக்கள் பூக்கத் தொடங்கியிருக்கின்றன.
ரோஸ், ஆரஞ்ஜ், வெள்ளை என விதவிதமான வண்ணங்களில் பூக்கும் இந்த மலர்கள் கொள்ளை அழகு கொண்டவை. அவை இப்போது மலர்ந்ததும் தனி மாடம் அமைத்து 35 ஆயிரம் தொட்டிகளில் வரிசைப்படுத்தியுள்ளனர். எனவே லேட்டாக வரும் சுற்றுலாவாசிகளுக்கு இந்த ஆண்டு இது ஒரு பெரிய கிஃப்ட்டாகவே அமைந்து விட்டது. இதைக் கேள்விப்பட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பதால் ஏதோ இப்போதுதான் மலர்க்கண்காட்சி ஆரம்பித்த பொலிவை இந்த தாவரவியல் பூங்கா பெற்றுள்ளது.
அதோடு இந்த மலர்க்கண்காட்சி ஆரம்பித்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை நினைவுபடுத்தும் வகையில் மயில், மான், வரையாடு என பல்வேறு மலர் உருவங்களை உருவாக்கி 125 என்ற எண்ணைப் பொறித்துள்ளார்கள். இதுவும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. பூங்காவில் வரவேற்கும் இந்த தங்க நிறச் சிலையைப் பற்றிக் கேட்காதவர்கள் இல்லை. இவர்தான் இந்த பூங்காவை 175 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய மெக் ஐவர். அவர் இந்த தாவரவியல் பூங்காவை உருவாக்கிய வரலாற்றையும் சிலர் ஆர்வமாகக் கேட்பதைக் காண முடிகிறது...’’ எனத் தெரிவித்தார்.
கடந்த மாதம் உருவாக்கிய மலர்கள் அத்தனையும் வாடி, உலர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் புதிதாக மலர்ந்திருக்கும் இந்த லில்லியம் மலர்கள் எப்படியும் இன்னமும் சில நாட்கள் பூங்காவில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள். அதுவரை இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு லில்லியம் மலர்கள் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட்தான்.
கா.சு.வேலாயுதன்
|