குக்கரில் வெந்த காதலி
இந்தியாவையே உலுக்கியிருக்கிறது மும்பையில் நடந்த திகிலூட்டும் சம்பவம். சொந்தமாக குடும்பம் இருந்தும், ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நபர், அந்தப் பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை குக்கரில் போட்டு வேகவைத்து அதை நாய்களுக்கு உணவாகப் போட்டுள்ளார்.மும்பையைச் சேர்ந்த மனோஜ் சானே என்ற 56 வயது நபர்தான் இந்த கொடூர செயலைச் செய்தவர். போரிவிலி பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்திவரும் அவருக்கு, திருமணமாகி குடும்பம் இருக்கிறது. ஆனால், 36 வயதான சரஸ்வதி வைத்யாவுடன் காதல் வயப்பட்டிருக்கிறார்.
 சரஸ்வதி ஆதரவற்ற பெண். தோள் சாய அவருக்கு ஒரு தோழன் தேவைப்பட, அந்த இடத்தை மனோஜ் பூர்த்தி செய்வார் என சரஸ்வதி நம்ப, மூன்று ஆண்டுகளுக்கு முன் மும்பையின் மீரா ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் இனித்த காதல், பிறகு கசக்கத் தொடங்க, அடிக்கடி கருத்து மோதல்களும், சண்டையும் ஏற்பட, அதன் உச்சம்தான் இந்த கொடூர செயல்.
 அரிவாளால் சரஸ்வதியை சில நாட்களுக்கு முன் வெட்டிக் கொன்ற பிறகே போலீஸ் பயம் மனோஜுக்கு ஏற்பட்டிருக்கிறது. வெட்டப்பட்ட சரஸ்வதி உடலை என்ன செய்வது என்று யோசித்தவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் தில்லியில் நடந்த ஒரு பெண்ணின் கொலை நினைவுக்கு வந்திருக்கிறது. அந்தக் கொலையில் காதலியின் உடலை வெட்டித் துண்டு துண்டாக்கி வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜில் அந்த காதலன் வைத்து ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு இடத்தில் வீசினான்.
இது நினைவுக்கு வரவே, சரஸ்வதியின் உடல் பாகங்களை ஒவ்வொரு இடத்தில் வீசினால் தில்லி காதலன் போல் சிக்கிக் கொள்வோம் என பயந்து குக்கரில் வேக வைத்து நாய்களுக்கு போட்டிருக்கிறார்.மனோஜின் நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றம் அக்கம் பக்கத்தினரை சந்தேகப்பட வைக்க... சரஸ்வதியையும் காணாதது அவர்களை யோசிக்க வைக்க... போலீசுக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். மனோஜின் வீட்டுக் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது குக்கரில் வேக வைக்காத சரஸ்வதியின் எஞ்சிய உடல் பாகங்கள் மூன்று பக்கெட்டுகளில் அழுகத் தொடங்கிய நிலையில் தென்பட்டிருக்கிறது.
உடனே மனோஜ் சானே கைது செய்யப்பட இந்த சம்பவம் தேசம் முழுக்க அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.“ஜூன் 3ம் தேதி நான் வீட்டுக்கு சென்றேன். அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சரஸ்வதியின் சடலத்தைத்தான் கண்டேன். பதறி விட்டேன். எங்கே என் மீது சந்தேகப்பட்டு போலீசார் என்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. அதனால்தான் இந்தக் காரியத்தை செய்தேன். சரஸ்வதியின் உடலை முழுமையாக அகற்றிய பிறகு நானும் தற்கொலை செய்து கொள்ளவே திட்டமிட்டிருந்தேன்...’’ என வாக்குமூலம் அளித்திருக்கிறார் மனோஜ்.
‘‘ஆங்கிலத்தில் Copy Cat கொலைகள், தற்கொலைகள் என்று சொல்லுவார்கள். அதாவது ஒரு சம்பவத்தைப் பார்த்து மற்றொன்றை செய்வது. கடந்த வருடம் தில்லியில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு மற்றொரு கொலைக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தாயும் மகனும் சேர்ந்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவனைக் கொன்று ஃப்ரிட்ஜில் வைத்திருந்து பிடிபட்டார்கள்.இப்போது இந்த சம்பவம்...’’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
என்.ஆனந்தி
|